மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் வருகை
********************************************************************
12.02.2020
"கல்வியின் மிக்கதாம்
செல்வமொன்றில்லையே" என்ற புரட்சிக்கவி பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் திரு.வேலாயுதம். ஆனால் இவரின் இயற்பெயரை எவரும் அறிந்திலர். "அண்ணஞ்சார்" என்று சொன்னால், "அவரா? காரைக்குடியின் சகாப்தம். அவரை மிஞ்ச யாருமே இல்லை" என்று தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. முத்துராமலிங்கம் சொல்வது போல் பலரும் கூறுகின்றனர்.
யார் இவர் தெரியுமா?
1910 ஆம் ஆண்டு ஒரு திண்ணைப் பள்ளியைத் தொடங்கி, காரைக்குடி வாழ் மக்களுக்குக் குருகுலக் கல்வியை முறையாக வழங்கியவர். தனியொரு ஆசானாக இவர் கற்பித்த செய்யுள்கள், வாய்பாடுகள் மற்றும் மணலில் விரலால் எழுத்துப் பயிற்சி ஆகியவை பற்றி இன்றளவும் மக்கள் வியந்து பாராட்டிப் பேசுகின்றனர். மக்கள் அவர் மீது கொண்ட பாசமும் மரியாதையும், அண்ணன், சார் என்பவை இணைந்தே
"அண்ணஞ்சார்" என அழைக்கப்பட்டார்.
பிறகு அவரது மகன் திரு. பாலசுப்ரமணியன், இந்த ஏட்டுப் பள்ளியை, ஸ்ரீ கார்த்திகேயன் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியாக வளர்த்தெடுத்து, சிறப்பான கல்விச் சேவையாற்றினார்.
தற்பொழுது அவர்களது மகள்கள் பள்ளியை உயர்ந்த குறிக்கோள்களுடனும் . மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறையோடும் நடத்தி வருகின்றனர்.
இப்படியாக, ஒரு நூற்றாண்டைக் கடந்த சீர்மிகு பள்ளிக்கு மலேசியத் தமிழாசிரியர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் தம் குடும்பத்தினரோடு வருகை புரிந்தது மிகுந்த மகிழ்ச்சி. குழந்தைகளோடு அவர் குதூகலமாகப் பேசியதும், தமிழ்நாட்டுக் கற்பித்தல் மற்றும் மதிப்பீடு முறைகள் குறித்தும் ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.தம் நாட்டுக் கல்வித்திட்டம், நடைமுறைகள் குறித்தும் கருத்துகள் பகிர்ந்தார்.
என் வகுப்பறையில் நான் செயல்படுத்தி வரும் "அண்ணஞ்சார் நூலகத்தையும்", முறைப்படிப் பராமரிக்கப்பட்டு வரும் நூலகப் பதிவேடுகளையும்
பார்வையிட்டுப் பாராட்டினார்.



