"அம்மா வந்தாள்" நூலாய்வு.
அதே புத்தகம்; அதே எழுத்தாளார்; அதே புதினம்;
ஒரு வாசகனை வெவ்வேறு களத்திற்கு அழைத்துச் செல்லுமா?
மறுபடியும் படிக்கையில், ஏதேனும் மாற்றம் தெரியுமா?
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்த போது வெறும் கதையாய்த் தோன்றியது, நல்லவேளை, ஏற்கெனவே மோகமுள்ளைக் கடந்து வந்ததாலும், நூலாசிரியரைப் பற்றிய செவி வழிச் செய்திகளாலும் மனதில் எதுவும் தாழ்ச்சியாகத் தோன்றவில்லை.
இது கதைதானா? இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா?
இதெல்லாம் நடப்பது சாத்தியமா? என்றெல்லாம் சில கேள்விகள் முளைத்தன. இது எதிர் கால சந்ததிக்குச் சொல்லும் செய்தி என்னவோ? என்றும் குழம்பினேன்.என் அம்மாவிடம் வாதித்தும் ஒரு தெளிவு கிடைக்கவில்லை.
ஆனால் இன்று படிக்கையில் எத்தனையெத்தனை பரிமாணங்கள்!
அந்தக் காலத்திலேயே
ஒரு சமுதாய முரண்பாட்டைத் தைரியமாக மூட்டை பிரித்திருக்கிறார்.
அங்கே பவானியம்மாளின் வேத கைங்கர்யம் ஆச்சரியப்பட வைக்கிறது எனில், இங்கே எல்லாம் தெரிந்தும் மனைவியைக் கருக்கிடாத ஞானசூரியனான
அப்பாவின் தெளிவு மிரள வைக்கிறது.
அம்மாவின் தோற்றப்பொலிவு, அம்மாவிற்கு அப்புவின் மீதான அதிகப்படியான அக்கறை, கணவனிடம் ’போறுமே’ கூறிய மிடுக்கு, வேத பாடம் கற்பிக்க எடுத்த முடிவிற்கான
காரணம், சிவசுவுடனான
உரையாடல், காசிக்குப் புறப்பட்டது என ஒவ்வொன்றிலும்
அம்மா கதாபாத்திர வடிவமைப்பு மனதுக்குள் நிறைய விஷயங்களை அழகாகச் சொல்கிறது.
இந்துவின் ஏக்கமும், தழுவலும் கைம்பெண் மறுவாழ்வுக்கு ஆசைப்படுவது தவறில்லை என்று கட்டியம் கூறுகிறது.
கோபுவின் உருவ ஒற்றுமை, அலங்காரத்தின்
முடிவுகள், தண்டபாணி வீட்டில் சிவசுவின் அன்னியோன்யம்
இவை எல்லாம் இப்போது புரிகின்ற போது, எழுத்தாளர் ஒரு வித்தியாசமான
சமூகச் சூழலைத் தேர்ந்தெடுத்து, எவ்வளவு லாவகமாகக் கையாண்டிருக்கிறார் என்பதும் தி. ஜானகிராமனின் எழுத்துகள் வாசகனை எவ்வாறு தன்னிடம் ஈர்த்துக்கொண்டுள்ளன என்பதும் புரிகிறது.
ஒரு முறை படித்துப் பாருங்கள் நண்பர்களே.
