Monday, 22 January 2018

உடல் இயக்கத்தோடு கற்றல் உத்திகள்

தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு  மனப்பாடம் செய்யாமல் கற்பதற்கு ஏதுவாகப் பல உத்திகளைப் பயன்படுத்திப் பரிசோதனை செய்து பார்த்து வருகிறேன். சமூகவியல் பாடம் நடத்தும் போது, நமது நாட்டின்  மற்றும் மாநிலத்தின் இயற்கையமைப்புகள்குறித்து நிலப்படங்கள் கொண்டு முதலில் விளக்குகிறோம். பிறகு கரும்பலகையில் வண்ணச் சுண்ணக்கட்டிகளால் வரைந்து விளக்குகிறோம்..ஆனாலும் மெல்லக் கற்கும் நம் செல்லங்களுக்கு என்ன செய்வது?

                   கை கால்களை அசைத்து ஏதாவது ஒரு குறிப்புடன் கற்றுக்கொடுத்தால், அவர்கள் எளிதில் கற்கிறார்கள்: எளிதில் மறப்பதில்லை என்று நான் அனுபவத்தால் தெரிந்துகொண்டேன். நடைமுறைப்படுத்த விழைந்தேன். உதாரணமாக, தமிழ் நாட்டின் இயற்கையமைப்புகளை அதன் உயரத்தைக் குறிப்பாகக் கொண்டு கற்பித்தேன்.

                1.   மண்ணிற்கு  மேலே மிக உயரத்தில் காணப்படுபவை மலைகள்; அவற்றைவிடச் சற்று உயரம் குறைந்தவை பீடபூமிகள்; மிகத் தாழ்வாகக் காணப்படுபவை சமவெளிகள் என்று கரும்பலகையில் வண்ணச் சாக்கட்டிகளால் படம் வரைந்து விளக்கினேன்.

               2.   பிறகு  மூன்று குழுக்களாக மாணவர்களை அழைத்தேன். முதல்  குழு மாணவர்களைத்  தரையில் படுக்கச் சொன்னேன். அவர்கள் தரையோடு தரையாகக் கிடப்பதால், அவர்களைச் ’சமவெளி’ என்று கொண்டோம். அடுத்த குழு மாணவர்களைப் பச்சைக்குதிரை தாண்டக் குனிவது போல் குனியச் சொன்னேன். இவர்கள் ’பீடபூமி’யானார்கள். மூன்றாம் குழு மாணவர்கள் கைகளை உயர்த்தி,அடுத்தடுத்த மாணவர்கள் கையைப் பிடித்து நின்றதுமே , மற்ற மாணவர்கள் “மலைகள்’ என்று கூச்சலிட்டனர்.

             3.     இப்பொழுது, ஒவ்வொரு மாணவனுக்கும் புரிந்துள்ளதா? என்று சோதிக்க வேண்டுமே. தனிப் பயிற்சி ஒன்றும் கொடுத்தேன்.  மாணவன் தன் தலைக்கு மேலே, காதுகளை ஒட்டிக் கைகளை மேலே உயர்த்தி, கை குவித்து “மலைகள்” என்று சொல்ல வேண்டும். பின், தன் நெஞ்சுக்கு நேரே கை குவித்து “பீடபூமிகள்” என்று காட்ட வேண்டும். பிறகு, தரையை நோக்கிக் கைகளை விரித்துச் “சமவெளிகள்” என்பதைக் காட்ட வேண்டும்.

                 அனைத்து மாணவர்களும் ஆர்வமாகச் செய்து காட்டினர். தேர்விலும் மிக அழகாகப் படம் வரைந்து, தெளிவாக விடையளித்திருந்தனர். எனக்கு  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...



Sunday, 21 January 2018

மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

I got first prize in a State Level Essay Competition among 543 essays.

திரு.ஜெயம்கொண்டான்,தலைவர்,வள்ளுவர் பேரவை, காரைக்குடி அவர்களுக்கு “இனிய நந்தவனம்” ஜனவரி மாத இதழ் கொடுத்தேன், அதில் எனது க்ட்டுரையைப் பார்த்ததும், “எனக்குப் பிடித்த குறள்” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பச் சொன்னார்.நான்கு நாட்களே அவகாசம் தந்தார்.

அங்கிருந்து புறப்பட்ட நொடி முதல், அதைப் பற்றிய சிந்தனையோட்டம். சரி, எழுதுவோம் என முடிவெடுத்தேன்.
சில நிமிடத் தேர்விலேயே கிட்டிய குறள் :
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”.

வழக்கமான எந்தப் பணிகளிலும் தொய்வு விழாமல், கட்டுரையும் எழுதினேன்.பத்துப் பக்கங்கள் எழுதி முடித்ததும் சற்று திருப்தியாய் இருந்தது. உரிய இடத்தில் சேர்ப்பித்தேன்.

திடீரென ஓர் அலைபேசித்தகவல்:
போட்டிக்கு வந்திருந்த 543 கட்டுரைகளில் என் கட்டுரை முதல் 25 ல் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது என.
சனிக்கிழமை (11.02.2017) மாலை பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.

உடல்நலக்குறைவால் என்னைப் பற்றிக் கொண்டிருந்த சோர்வு எங்கோ பறந்து போனது.

விழாவில், 25 ஆம் இடம் பெற்றவர்களில் தொடங்கி, இறங்கு வரிசையாகப் பெயர் வாசிக்கப்பட்டு, பரிசளிக்கப் பட்டது. இரண்டாம் பரிசுக்கான நபரின் பெயர் வாசிக்கப்பட்ட பிறகே, முதல் பரிசு என் கட்டுரைக்கு என்பது தெரிந்து,எனக்குப் புதிதாய்ச் சிறகுகள் முளைத்தன.


அந்த மகிழ்ச்சியுடன் ஏற்புரையும் வழங்கினேன்.
“மாணவர்கள் வீட்டில் அம்மா, அப்பா சொல்வதைக் கேட்டலும், வகுப்பில் ஆசிரியர்கள் கூறுவதைச் செவிமடுத்தலும், சமுதாயத்தில் அறிவிலும் அனுபவத்திலும் மூத்த பெரியோர் சொற்கேட்டலும்தான் ஒழுக்கம்” என்று என் கருத்தையும் பதிந்து வந்தேன்.

நல்லதொரு வாய்ப்பினையளித்திட்ட வள்ளுவர் பேரவை சார்ந்த அனைவருக்கும் நன்றிகள்.





Friday, 19 January 2018


           நீசமாக எண்ணாதே நீச்சலடிக்கக் கற்றுக் கொடு -13


தொடர்கிறேன் இந்த ஆண்டும்.
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

திருச்சியில் இருந்து வெளிவருகின்ற, 
ஏறத்தாழ 15 அயல்நாடுகளில் வாசகர்களைக் கொண்ட
 “இனிய நந்தவனம்”  என்ற மக்கள் மேம்பாட்டு இதழில்
கடந்த ஒரு வருடமாக,
அதாவது ஜனவரி 2017 முதல்
பெண்களுக்காக, மிதவாத பெண்ணியம் வெளிப்படத்
தொடர் கட்டுரை எழுதி வருகின்றேன்.

எனக்கு ஊக்கமூட்டி வாய்ப்பளித்த ஆசிரியர்
 திரு நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கு
என் மனமார்ந்த நன்றி. 

"இனிய நந்தவனம்" இதழில் 
ஜனவரி 2018 இல் என் தொடர்.
படித்து, கருத்துச் சொல்ல 
வாருங்கள் நண்பர்களே..







Thursday, 18 January 2018

நவம்பர் 2017 மேன்மை இதழில்
என் கவிதை.

ஆசிரியர் குழுவிற்கு நன்றி.

Paper presentation on the literary works of a popular Tamil poet Thangam Moorthy by me in an International Conference at Alagappa University, Karaikudi

இருபதாம் நூற்றாண்டில் இந்தியா - ஆசியான் கவிஞர்கள் 2017

பன்னாட்டுக் கருத்தரங்கில் என் கட்டுரை குறித்து உரையாற்றிய போது...

"தேவதைகளால் தேடப்படும் புதுகைக்கவிஞர் தங்கம் மூர்த்தி " என்னும் தலைப்பில்.

"இந்திய - ஆசியான் தமிழ்க்கவிஞர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம்" அழகப்பா பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர்.செந்தமிழ்ப் பாவையம்மாவின் மலர்ந்த முகத்துடன் கூடிய சிறந்த ஏற்பாடுகள் மிக அருமை.

கருத்தரங்க மேடை
கவிஞர் முபீன் சாதிகா வசம்.
அவர் தொகுப்புரையும்
ஒரு கவிஞரும் விடுபட்டுவிடாது மேடையேற்றித்
தமிழும் மலாயும் கவிதை மணம் வீசச் செய்தது பரவசம்.

நூலாக்கமும் நூல் வெளியீடும் பாராட்டத்தக்க நற்பணிகள் .

மலேசியா, இந்தோனேஷியா மற்றும் பல நாட்டுக் கவிஞர்கள் 40 பேரும் ,
தமிழகப் பெண் கவிஞர்கள் 38 பேரும் கவிதை வாசித்தது அருமை.


கவிஞர் கருமலைத் தமிழாழன், பேராசிரியர் ஜோஷ்வாட் போன்றோரும் கவிதையுடன் கட்டுரை சமர்ப்பித்தது சிறப்பு.

                                                      என் கட்டுரை: (unedited)


தேவதைகளால் தேடப்படும் புதுகைக் கவிஞர் தங்கம் மூர்த்தி
                                
அறிமுகம் :

      தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலப் புலவர்கள் தொட்டு இக்காலக் கவிஞர்கள் வரை வரிசைப்படுத்தினால், அந்தத் தொடரில் ஒரு நிலையான, நிரந்தரமான தனித்த இடத்தை வகிக்கக்கூடியவர் பன்முகத் திறமை வாய்ந்த கவிஞர் தங்கம் மூர்த்தி.
சேவியர் ஹெராட் என்பவர், கவிதைகள் பற்றிக் குறிப்பிடுகையில்,

                                     ”கவிதை ஒரு அற்புதமான மின்னல்;
                                         மௌனச் சொற்களாலான மழை;
                இதயத் துடிப்புகளாலும் நம்பிக்கைகளாலும் ஆன ஒரு காடு;
                                            ஒடுக்கப்பட்ட மக்களின் கீதம்;
                                 விடுதலை பெற்ற மக்களின் புதிய பாடல்;
                                       கவிதை மானுடத்தின் விமோசனம்“

என்று மிக அழகாகக் கவிதைக்கு இலக்கணம் கூறியுள்ளார். கவிதைக்கான இந்த அனைத்து அம்சங்களையும் இந்தக் கவிஞரின் கவிதைத் தொகுப்புகளில் எளிதாகக் காண முடிகிறது. பலவகைப்பட்ட உணர்வுகளையும் தன் கவிதைகளில் இனிய தகுந்த தமிழ்ச் சொற்களால் அடுக்கிப் படைப்புலகில், பாட்டுக்கோட்டை கட்டிய  பட்டுக்கோட்டையாரைப்போல், ஒரு எளிய ஆனால் உறுதியான கவிதைக் கோட்டையைப் புதுக்கோட்டை மண்ணில் வாழ்ந்துகொண்டு அந்த மண்ணின் மணம் மாறாமல் கட்டமைத்து வருபவர் கவிஞர் தங்கம் மூர்த்தி., இவர் எழுதி வெளியிட்டுள்ள “தேவதைகளால் தேடப்படுபவன்” மற்றும் “அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள்” என்னும் இரு கவிதைத் தொகுப்புகளின் நயங்களை எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கவிஞரின் தோற்றமும் எழுச்சியும் : 

       கவிஞர் தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் என்னும் சிற்றூரில் 19.08.1964 ல் பிறந்தார். இவரது பெற்றோர் டாக்ட.கே.கே.தங்கம் மற்றும் திருமதி.ஜெயலெட்சுமி ஆவர். இவர் ஆங்கில இலக்கியத்தில் ஒரு இளங்கலை பட்டமும் இரண்டு முதுகலைப் பட்டங்களும் பெற்றவர். புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியை நிறுவி, அப்பள்ளியின் சிறந்த முதல்வராகவும் பணியாற்றி வருகிறார். இவரது பள்ளியின் சிறப்பு, குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கற்றல். பலவிதமான கற்றல் கற்பித்தல் களங்களையும் கற்றல் சூழல்களையும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் உருவாக்கித் தருகிறார்.
     இவரது மனைவி திருமதி மு.அஞ்சலிதேவி. புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார். இவர்கள் பெற்ற செல்வங்கள் செல்வி.நிவேதிதா மற்றும் செல்வி.காவியா மூர்த்தி ஆகியோர்.
இவரது சிறப்பான ஆசிரியப் பணியைப் பாராட்டித் தமிழக அரசு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும்’, மத்திய அரசு ‘தேசிய நல்லாசிரியர் விருதும்’ வழங்கிச் சிறப்பித்தன. மேலும் இவர் கவிஞர் சிற்பி விருது, கவிக்கோ விருது, செல்வன் கார்க்கி விருது, சிறந்த சமூக சேவகர் விருது எனப் பல விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார். மதிப்புறு பணிகள் பல வகித்தும் சமூக நலப் பணிகளிலும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்.

    முதலில் பூத்த ரோஜா” (1994) என்னும் ஹைக்கூ நூல் தொடங்கி, “அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள்” வரை  இதுவரை பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இலக்கியத் துறையில் இன்று உலக அளவில் பேசப்படுகின்ற  கவிஞராகவும், மேடைப் பேச்சாளராகவும், பட்டிமன்றப் பேச்சாளராகவும்,சிறந்த எழுத்தாளராகவும் பவனி வருகிறார்.

தங்கம் மூர்த்தியின் பணிகளும் படைப்புகளும்

”உன்னுடன் சேர்ந்து
நடக்க ஆரம்பித்த பிறகுதான்
சாலையோர மரங்களிலிருந்து உதிரும்
பூக்களின் மௌனத்திலும்
நான்
இசை கேட்க ஆரம்பித்தேன்.”

என்று அறிவுமதி கூறியதைப் போல், கவிஞர் தங்கம் மூர்த்தியின் புதுக் கவிதைகளையும் துளிப்பாக்களையும்  படிக்க ஆரம்பித்த பிறகு தான் நமக்கு நம்மைச் சுற்றிலும் மலர்ந்து இருக்கின்ற ஒரு புதிய உலகம் தெரிய வரும். அதுமட்டுமன்று,

                “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
                 இகல்வெல்லல் யார்க்கும் அரிது.”

என்னும் குறளுக்கேற்ப சபையைக் கட்டிப் போட்டுத் தன் வார்த்தை வீச்சில் மயங்க வைக்கும் மாயக்கண்ணன் இவர். பார்வையாளர்களின் நோக்கும் போக்கும், இருப்பிடச் சூழலின் தன்மையும் அறிந்து உரையாற்றக்கூடிய வெற்றிகரமான மேடைப் பேச்சாளர் இவர். தான் சொல்லப் புகும் கருத்துகளை இடம் பொருள் காலம் அறிந்து தேர்ந்தும் ஏற்றியும் போற்றியும் நகைச்சுவை கலந்தும் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். கேட்டார்ப் பிணிக்கும் தகையவே வேட்ப மொழியும் சொல்லாற்றலை வரமாகப் பெற்றவர். இவர் பின்பற்றும் மேடை நாகரிகம் அனைவரையும் கவரக்கூடியது. எந்த அரசியல் கலப்புமற்றது; தனிமனிதத் துதியோ துவேஷமோ அற்றது. “செந்தமிழும் நாப்பழக்கம்” என்பதை நன்கு உணர்ந்தவர் என்பது அவரது நாவினிலும் நாபிக் கமலத்தினிலும் இருந்து பிறந்து வரும் அழுத்தம் திருத்தமான, நுனிநாக்கு ஆங்கிலம் போல் அல்லாத தெளிவான உச்சரிப்புடன் கூடிய தமிழ்ச் சொற்களினால் அறியலாம். அழகு தமிழ் இவரிடம் பழகு தமிழ் ஆகி மிளிர்வதைக் கேட்டு ரசிக்கலாம்.

    தாய்ப்பாலோடு தமிழுணர்வையும் மாந்திய மறத் தமிழனாய்க் கவியரங்க மேடையில் ஒலிவாங்கியைக் கைப்பிடித்துக் கவிஞர் கவி பாடுவதைக் கேட்கும் பொழுது, வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்கூறிய “ poetry is the spontaneous overflow of powerful feelings; it takes its origin from emotion recollected in tranquility” என்ற வரிகள் நம் நினைவு ஊஞ்சலில் வந்து ஆடுவதைக் காணலாம்.

தேவதைகளால் தேடப்படுபவன்

         கவிதைக்கான கருப்பொருள் தெரிவுகள், தெளிவாக மொழிதல், தகுந்த சொற்களைத் தேர்ந்தெடுத்தல் போன்ற கவிதைப் பண்புகள் வெகு சிறப்பாக நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றதைக் காணமுடிகிறது. கவிதை நடை, இந்தக் கவிஞரைப் போலவே எளிமை மிகுந்திருக்கிறது. எளிய சொற்களைக் கையாண்ட விதமும் வெகு சிறப்பு.

        குழந்தைகள் கூத்தாடிக் கும்மாளமிட்டுக் குதூகலித்து மகிழும் தருணங்களைக் கூடைகூடையாய் அள்ளித் தருபவை திருவிழாக்கள்தான். இதை நயமாகக் கவிதையில் பதிவு செய்வது கவிஞர்களுக்கியல்பு. ”ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழிகளைத் தேடிக்கொள்கிறான்” என்பார் எஸ்,ராமகிருஷ்ணன். ஆனால், இங்கே ”திருவிழாக்களும் குழந்தைகளும்” கவிதையில், குழந்தைகள் திருவிழாக்களை வரவேற்று அழைத்து வருவதும், திருவிழாவின் கரங்களைத் துழாவுவதும் அவற்றை முத்தமிடுவதும் அழகிய கற்பனை. இவைகூடப் பரவாயில்லை, திருவிழாக்களிடம் கோரிக்கை வைப்பதும் , பிரிவுபசாரமளிப்பதும் பின் அவை உறையும் இடமும் நம் கற்பனைக்கு எட்டாச் சிகரங்கள். ஆனால் குழந்தைகள் உலகின் யதார்த்தங்களான அவற்றைக் கவிஞர் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

        நாய்களைப் பற்றிய கவிதை அல்ல என்று ஒரு கவிதையைத் தொடங்கி, நாய்களைப் பற்றியே பேசும் பொழுது, ஆங்கே மறைமுகமாகப் பாரதியின் சாயல் இவர் எண்ணத்திலும் புலப்படுகின்றதோ என்று தோன்றுகிறது. “வாலைக் குழைத்து வரும் நாய்தான் – அது மனிதற்குத் தோழனடி பாப்பா” என்று ஆனந்தக் கூத்தாடியவனன்றோ பாரதி! தங்க மூர்த்தியும் இங்கு இயல்பு மனத்தினனாக வருணித்திருக்கிறார்; கோபம் கொள்ளாமல். தொந்தரவு தரும் நாய்களின் சத்தத்தில் பிறந்த கவிதையையும் வாசகனை.ரசிக்க வைத்திருப்பது பெரு வியப்பு.

        இந்தக் கவிதை நதியில் காதல் மீன்களின் வரத்துக் குறைவாய் இருப்பினும் ஆங்காங்கே சில காதல் கவிதைகள் தங்க மீன்களாய் நீந்தி வருகின்றன. “நிலவுகள் பூக்கும் பூமி”, “திறப்பு விழா”, “நமக்கருகே மிதக்கும் வானம்”, “கானகமும் கடவுளும்” ஆகிய கவிதைகள் காதல் நீரோட்டத்தில் கலந்து இறுதி வரிகளிலே ஒரு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகின்றன.

         “உயர்திணை” மற்றும் “பணம் காய்க்கும் மரம்” ஆகிய கவிதைகளில் நடமாடும் ஆறறிவு மனிதர்களைப் பார்க்கும் பொழுது, மனிதர்களைப் பற்றிய கவிஞரின் மதிப்பீடுகளும், அவர்களது செயல்பாடுகளில் இவரது ஆதங்கமும் தெளிவாக வெளிப்பட்டுள்ளன என்றே சொல்லலாம். ”சீ மிருகமே! என்று மனிதனைத் திட்டாதே. மனிதனே, கொஞ்சம் பொறு./ காட்டுக்குள் என்ன சத்தம்/ ஏதோ ஒரு மிருகம் /இன்னொரு மிருகத்தை ஏசுகிறது/ சீ மனித்னே” என்று கவிப் பேரரசு வைரமுத்து நொந்து பாடிய வரிகள் நினைவில் வந்து போகின்றன.

          “காலை மாலை உலாவி நிதம்/ காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் /காலன் ஓடிப் போவானே”என்ற கவிமணி தேசிக விநாயகத்தின் வரிகளை நன்கு உணர்ந்தவர்கள் நாம், ஆனால் கடைப்பிடிக்க மாட்டோம். நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது, நடைப்பயிற்சி எப்படியெல்லாம் நடக்கிறது என்னும் நிஜங்களைக் கவிஞர்  “நடைப்பயிற்சியும் சில நண்பர்களும்” கவிதையில் மிக அழகாகக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

         ஒரு மாபெரும் காப்பியத்தில் சிலம்பின் பரல்கள் சிதறியதால் எரிந்தது ஒரு நகரம். “ஒரு மாறுவேடப் போட்டியின் மறு பக்கத்தில்” என்ற கவிதையில் குழந்தைகளின்  மகிழ்ச்சிகளும் ஏமாற்றங்களும் சிதறியதால் உடைந்து போகிறது ஒரு கவியுள்ளம். அவரது உற்றுநோக்கல் திறனும், குழந்தைகள் மீது அவர் கொண்ட பரிவும் தெளிவாகத் தெரிகின்றன இங்கே.

           அடுத்ததாக, “பற… பற…” கவிதையில் குழந்தைக்குச் சுதந்திரம் மறுக்கப்படுவது  மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குழந்தைக்கு ‘நெல்’ அறிமுகம் இல்லை என்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டியிருக்கிறார். அடுத்த தலைமுறையினருக்கும் விவசாயத்திற்குமான தொலைவை இது காட்டுகிறது.
          இப்படி ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு தளங்களில் மிகச் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த நூல், அம்மாவுக்கு எனத் தொடங்கி, பாட்டியிடம் முடிவடைந்திருப்பது நடைமுறை வாழ்க்கையில் சொந்த பந்தங்களின் தேவையைச் சொல்வது போல் தோன்றுகிறது.

அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள்

       பள்ளிப் பருவத்தில் அறிவியல் ஆசிரியர் ‘விப்ஜியார்’ நினைவில் கொள்; வானவில்லின் நிறங்கள் ஏழு என்று சொல்லிக் கொடுத்தது நினைவில் நிற்கின்றது இன்னும். ஆனால் இந்தக் கவிஞர் தங்கம் மூர்த்தி ”அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள்” என்கிறாரே, என்னவென்று பார்ப்போம் என எண்ணிக் கவிதை நூலை வாங்கினேன். அட்டையில் ‘சுழலும் கவியரங்கம்’ என்று பார்த்ததும் மேலும் வியந்தேன்.

         சிங்கப்பூரில் உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில்  வானவில்லின் நிறங்களாய்ப் பிச்சினிக்காடு இளங்கோ, ந.வீ.விசயபாரதி, நெப்போலியன், இராம. வயிரவன், கோ. இளங்கோவன் மற்றும் அழகு சுந்தரம் ஆகிய ஆறு  ஆண் கவிஞர்களும், இன்பா என்னும் பெண்கவிஞர் ஒருவரும் தங்கம் மூர்த்தி தலைமையில் தரப்பட்ட தலைப்புகளில் சொல்லப்பட்ட வரிகளுக்குள் கவிதைகள் எழுதி, ஒரு சுழற்சி முறையில் வாசித்தளித்திருக்கின்றனர். அங்கு நம் தமிழன்னைக்குச் சூட்டப்பட்ட உதிரிப் பூக்களாம் பாக்களை எல்லாம் இங்குக் கவிஞர் அப்படியே ஒரு நந்தவனப் பூக்களைப் போல் சேகரித்துக் கொண்டு வந்து பாமாலை கட்டியிருக்கிறார்.

         அணிந்துரையில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், சுந்தரத் தமிழில் கவிதை பாடிக் கவியரங்கத் தலைமையேற்றுக் கருத்துரையும் அற்புதமாக வழங்கிப் பார்வையாளர்கள் அனைவரையும் சொக்க வைத்தார் இந்தத் தங்கக் கவிஞர் என்று பாராட்டியிருப்பது சிறப்பு. 

            ”கவியரங்க நுழைவாயிலில்” தங்கம் மூர்த்தி மிகத் தெளிவாக இந்தச் சுழலும் கவியரங்க நடைமுறைகளை அனைவருக்கும் விளங்கும்படிக் கவிதையிலேயே எடுத்துரைக்கின்றார். படிக்க நமக்கு ஆர்வம் மேலிடுகிறது . ஏழு சுற்றுகளில் ஏழு கவிஞர்களும் ’சின்னச் சின்னக் கவிதைகளை வண்ண வண்ண வார்த்தைகளால் செவி குளிரச் சூட்டினர்; அதை ஓவியம் போல்  தீட்டினர்’.

           முதலில் கவிஞர்களின் சுய அறிமுகம் ஆறு வரிகளில் கவிதையாக ஆரம்பமானது. அதில் கவிஞர், “எந்த முகம் இருந்தென்ன? அன்புமுகம் ஒன்றிருந்தால் அகிலத்தை வெல்லலாம்” என்ற புதிய சூத்திரம் ஒன்றைக் கற்றுக்கொடுக்கின்றார். 

        முதல்  சுற்றாக, போதிமரம் மற்றும் காணிநிலம் பற்றிச் சிறுகுறிப்பு வரையக் கேட்டிருக்கின்றார் கவிஞர். புத்தர், பாரதியார் என்ற இரண்டு பிரம்மாண்டமான் ஆளுமைகளை முதல் தலைப்பிலேயே துணைக்கழைத்திருக்கிறார் கவிஞர். தனது கவிதைகளை முதலில் படைத்திருக்கின்றார். “போதி மரங்கள் போதைப் பூக்களைக் கொட்டுவதைவிட அதை வெட்டுவதே நல்லது” என்று இன்றைய சமூகத்திற்கு நல்வழி காட்டியிருக்கிறார். ஒரே வரியில் நச்சென்று “ மகா கவியும் மகாகவி சார்ந்த இடமும் காணி நிலம்” என்று ஆறாவது வகை நிலத்தைத் தமிழிலக்கணத்துக்குத் தந்து, வியக்க வைக்கிறார்.   
  
          இரண்டாவது சுற்றுக்கான தலைப்பாகக் கம்பர், இளங்கோவடிகள் மற்றும் திருவள்ளுவர் குறித்து இரு வரி ஓவியம் வரையக் கேட்டுக்கொள்ளப்பட்டு, உண்மையில் கவியோவியங்கள் உயிர்ப்புடன் தீட்டப்பட்டுள்ளன. கம்பரைக் குறிப்பிடுகையில் தங்கம் மூர்த்தி, விலங்குகளை மனிதனாக்கினார். மனிதர்களைக் கடவுளாக்கினார்” என்று இரண்டு வரிகளுக்குள் ஒரு இதிகாசத்தையே சிறைப்பிடித்துவிட்டார், அந்த அகத்திய முனியைப் போல என்று சொன்னால் மிகையாகாது.

         அடுத்த சுற்றில், லீகுவான் யூ மற்றும் மகாத்மா காந்தி என்னும் இரு நாட்டு அரசியல் பெருந்தலைவர்கள் பற்றி மூன்று வரிகளில் முத்திரை பதித்திருக்கின்றனர்.அனைத்துக் கவிஞர்களும். அவற்றில் தமிழ்த் தாயாக லீகுவான் யூவையும் , ‘எல்லோருக்கும் எளிதில் புரியும் திருக்குறளாகக்’ காந்தியடிகளையும் ஒப்புமைப்படுத்திக் கவி பாடிய திறம் தங்கம் மூர்த்தியின் தனித் திறமையை எடுத்தியம்புகின்றது.

         நான்காவது சுற்றில், சூழ்நிலையியல் வினாத்தாள் போல்  இளமை- முதுமை, கருவறை – கல்லறை, தொட்டில் – கட்டில், கண்ணீர் – வியர்வை ஆகியவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகள் கவித்துவமாக வரையப்பட்டுள்ளன. முதலிரண்டு கவிதைகளிலும் கவிஞர் எத்தனையெத்தனை உவமைகளை இத்தனை அழகாகக் கொண்டுவந்து ஒப்புமைப்படுத்தியிருக்கிறார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. தொட்டிலையும் கட்டிலையும் கவி பாடுகையில் “இது ஒருவர் வாழும் ஆலயம்; அது இருவரும் வீழும் போர்க்களம் “ என்று சர்வ சாதாரணமாக யதார்த்தத்தைச் சொல்லி நம்மை வீழ்த்திவிடுகிறார்.

          இருந்தாலும் அடுத்த கவிதையில், “கண்ணீர் பெண்பால். வியர்வை ஆண்பால்” என்று தொடங்கி, “ பல நேரத்தில் இரண்டுமே பலவின்பால்” என்று தொடர்ந்திருப்பினும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் வரிகளாகின்றன. இவை. இன்று பெண்கள் கண்ணீர் சிந்துவதைப் புறந்தள்ளி, வியர்வை சிந்தி வாழ்க்கையில் ஆண்களையும் முந்திச் சென்று கொண்டிருக்கின்றோம் என்பது இந்தப் பெருங்கவிக்கு எப்படித் தெரியாமல் போனது? கவியின்பத்திற்காக இயற்றப்பட்ட வரிகளாயிருப்பின் , கவிஞர் வழுமைதி பாட வேண்டும்.

         இவைகள் பேசினால்… என்று கடல் மீன்கள், விண்மீன்கள், கண்ணாடி மீன்கள் ஆகியவை ஐந்தாவது சுற்றில் கவிதைக் கடலில் நீந்தி வருகின்றன. கடல் மீனின் குரலில், “மீனவனாய்ப் பிறப்பது தான் பாவம்” என்று அனுதாபபட்டிருப்பதில் கவிஞரின் சமூக அக்கறையும் மீனவர் வாழ்வின் அவலநிலை குறித்து அவர் வேதனைப் படுவதும் புரிகிறது.

          இளமையில் காதல், என்றென்றும் சுகம். எந்த  மனிதனும் கடந்து வரும் வண்ண மலர்ப்பாதை அது. இதை நினைவு கூறும் வகையில் எண்மருமே மிகுந்த காதல் உணர்வோடு ஆறாம் சுற்றுக்கு ‘உங்கள் காதல் கடிதம்’ என்னும் தலைப்பில் அழகழகான கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். ரசித்து, லயித்துப் படிக்கலாம் வாசகர்கள்.

          இறுதிச் சுற்றாக,, ‘பூமிப் பந்தைப் புரட்டிப் போடும் ஒரு நெம்புகோல் கவிதை’ என்னும் தலைப்பில் பூமியை அல்ல, உண்மையில் இந்தக் கவிஞர்களும் இவரது கவிதைக் கூட்டாளிகளும் நம்மையே புரட்டிப்                  போட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஆற்றலும் வலிமையும் வாய்ந்த கவிதைகள்.

குறிப்பாக, “பூமியைப் புரட்டிப் போடும் நெம்புகோல் கவிதைகள் குழந்தைகள் அன்றி வேறென்ன..” என்ற கவிஞரின் ஒற்றை வரியில் குழந்தைகளைப் போற்றினால், அவர்களைக் கொண்டாடினால் பூமி ஏற்றம் பெறும் என்ற மாபெரும் உண்மை நம்மை நெட்டித் தள்ளுகிறதல்லவா?

         ஒரு கவியரங்கத் தலைவராக, மற்ற அனைத்துக் கவிஞர்களையும் அவர்கள் படைப்புகளோடு இணைத்துப் பாராட்டியிருப்பதும், பார்வையாளர்களையும் வாழ்த்தியிருப்பதும் ரசித்து மகிழும் வண்ணம் அமைந்த கவிதைகளாக இருக்கின்றன.  
       
முடிவுரை :
         இத்தகு அறிவாற்றலும் தமிழுணர்வும் சமூக நலனில் அக்கறையும் கொண்ட கவிஞரைத் தென்னாடும், தென்மொழியும், தென்னர் பண்பும் செழித்துலகம் வாழும் வரை வாழி வாழி என்று வாழ்த்தி மகிழ்வோம். குயிலுக்கு இனிமையும், மயிலுக்கு வனப்பும், கதிருக்கு வெம்மையும், புனலுக்குத் தண்மையும் தந்தவர் யார்? இவை யாவும் இயல்பாக, இயற்கையாகப் பிறந்தவை. அதுபோல் கவிஞர் தங்கம் மூர்த்திக் கவிதைகளும் அவர் உள்ளத்தினின்று இயல்பாக அரும்பியவை. தாகூர் கூறியது போல், இந்தக் கவிஞரின் கால்கள் மண்ணில் நடனமாடினாலும், அவர் உள்ளம் வானில் பறந்து கொண்டிருக்கிறது என்பது இவரது கவிதைகள் வழி புலப்படும் பேருண்மை ஆகும். அப்படியே தொடர்ந்து பறந்து இன்னும் பல கவிதைகள் வடிக்கட்டும்: இனிய நூல்கள் பிறக்கட்டும். 
       
         
      மேற்கோள் நூல்கள்
1.    1.  கவிதை பயிற்றும் முறை – டாக்டர் ந. சுப்புரெட்டியார்

2.    2.  கவிதையியல் – க.பூரணச் சந்திரன்

3. 3.  கண்ணதாசன் பாடல்களில் அருமையான சமுதாயச் சிந்தனைகள் – முனைவர். சுப. கதிரேசன்

4.   4. அன்பிலோங்கிய வையம் – தொகுப்பு : ஸ்ரீ ரசா, வர்த்தினி

5.   5.   இனிய நந்தவனம் மாத இதழ், மார்ச் 2017

6.  6.   தேவதைகளால் தேடப்படுபவன் – கவிஞர் தங்கம் மூர்த்தி

7.   7. அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள் – தங்கம் மூர்த்தி.

a

a









Tuesday, 16 January 2018



"வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய் ... "
_ தபூ சங்கர்.

கவிதை நயமும்
காதல் ரசமும்
கலந்து வடித்த
கற்பனை ஓவியங்கள்.

அவ்வளவு காதல்
அவ்வளவும் காதல்..

இதைத் தாண்டிய வார்த்தைகள்
தேவை இல்லை.

A book of Love
And full of Love.

இதுவரை படிக்காதவர்கள்
கட்டாயம் ஒரு முறை படித்து விடுங்கள்.

Saturday, 13 January 2018

2017 ஜனவரி முதல்,

“நீசமாக எண்ணாதே நீச்சல் அடிக்கக் கற்றுக் கொடு” என்னும் தலைப்பில்,
பதினைந்திற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தமிழர்களால் வாசிக்கப்படும்,
திருச்சியிலிருந்து வெளிவரும் "இனிய நந்தவனம்" என்ற மாத இதழில்
தொடர் கட்டுரை எழுதி வருகிறேன்.

 நவம்பர் 2017 இதழில்  என் கட்டுரை.

நன்றி ஆசிரியர் திரு. நந்தவனம் சந்திரசேகரன்.

My article published in a popular Tamil magazine "Iniya Nandavanam" Oct. 2017.
I pay my gratitude to the editor Mr. Chandrasekaran, Trichy.



நீசமாக எண்ணாதே நீச்சலடிக்கக் கற்றுக்கொடு – 11

         என்ன நண்பர்களே, தீபாவளிக் கொண்டாட்டம் எல்லாம் முடிந்துவிட்டனவா? எத்தனை ஆடைகள் வைத்திருந்தாலும் அந்தத் தீபாவளியன்று போட்டுக் கொள்ளும் புதுச் சட்டை தரும் ஆனந்தம் இருக்கிறதே, அப்பப்பா! வார்த்தையில் வடிக்க இயலாது. அடுத்ததாகப் பலகாரங்கள் பலவகை. எந்த வயதினரும் அளவு மறந்து சாப்பிட்டு மகிழும் தருணங்கள். பிறகு அப்படியே பட்டாசு வைக்கப் புறப்பட்டுவிடுவோம். தலைக்கு எண்ணெய் வைப்பதில் தொடங்கி, புதிய ஆடை அணிந்து கோவிலுக்குச் சென்று வருவது வரை காலங்காலமாக நடக்கும் மகிழ்ச்சி மத்தாப்புகள்.
      இப்படியாகத் தான் வகுப்பறையிலும் தீபாவளியைப் பற்றி குதூகலத்தோடு பேசிக் கொண்டிருந்தோம். என்னென்ன பலகாரங்கள் செய்தீர்கள்? யாரெல்லாம் பண்டிகையைக் கொண்டாடத் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றீர்கள்? என்னென்ன வெடி வெடித்தீர்கள்? என்று வினாக்களும் அவற்றிற்குரிய விடைகளுமாகக் காலம் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது ஜெயனி எழுந்து, “எங்க வீட்ல குலோப் ஜாமூன், மாவுருண்டை, முறுக்கு, பஜ்ஜி, வடை என்று அடுக்கிக்கொண்டே போனாள். நான் கேட்டேன்’ ”இவ்வளவும் யார் செய்தது?”. ஜெயனி, “எங்கம்மா காலையில மூணு மணிக்கே எழுந்து செய்தார்கள்”. ”நீ ஏதேனும் உதவி செய்தாயா? அப்பா, அண்ணா அல்லது வேற யாராவது கூட சேர்ந்து வேல செஞ்சாங்களா?” என்றேன். அவள் இல்லை என்கிற மாதிரித் தலையை ஆட்டினாள். எனக்கு ஏனோ “சேவலும் கோதுமை ரொட்டியும்” கதை ஞாபகத்திற்கு வந்தது.
         கொஞ்சம் விதை நெல் கிடைக்கப்பெற்ற சேவல் அதை விதைப்பதற்காகத் தன் நண்பர்களான ஆடு, மாடு, குதிரை, கோழி, நாய் அனைவரையும் அழைத்தது. ஒவ்வொருவரும் வேறு வேறு வேலைகள் இருப்பதாகக் கூறிச் சென்றுவிட, தானே நிலத்தை உழுது, விளைவித்தது. சில நாள்களுக்குப் பிறகு சேவல் நாற்று நடுவதற்காக அழைத்தது. அப்பொழுதும் எவரும் செல்லவில்லை. சேவல் மட்டுமே வயலில் இறங்கி நாற்றுகளை நட்டது. இப்படியே களை பறிக்க, தண்ணீர் பாய்ச்ச, இரண்டாம் களை எடுக்க எனச் சேவல் அழைத்தபோதெல்லாம் அதன் நண்பர்கள் வரவேயில்லை. பயிர் செழித்து வளர்ந்தது. உரிய பருவத்தில் சேவல் மட்டுமே நின்று அறுவடை செய்தது. இயந்திரத்தில் கோதுமையை அரைத்து மாவாக்கியது. சூடான சுவையான ரொட்டி தயார் செய்தது. ஒவ்வொரு முறையும் சேவல் நண்பர்களை உதவிக்கு அழைக்கத் தவறவில்லை. அவர்களும் உதவத் தயாராக இல்லை. ரொட்டியின் மணம் வீடு முழுக்கப் பரவியது. சேவல் இப்பொழுது “ரொட்டியைச் சாப்பிட யார் வருவது?” என்று கேட்டதும்தான் தாமதம். பசு, குதிரை, ஆடு, நாய், கோழி அத்தனையும் நான் வரேன் என்று குரல் கொடுத்தன.
       ஒளிபடக் கருவியை அப்படியே நம் வீடுகளை நோக்கித் திருப்பினால், இதே காட்சிதான் அங்கும் அரங்கேற்றம். பண்டிகைகள் என்றாலே, பாட்டியும் அம்மாவும் அடுப்படியில் நாள் முழுக்க வேலை செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். தாங்கள் செய்கின்ற விதம்விதமான பலகாரங்களைக் கணவனும் குழந்தைகளும் ஆசையாய்த் தின்பதைப் பார்த்தே ஆனந்தம் அடைகின்றனர். இதுதான் நமது மரபு, பாரம்பரியம், கலாசாரம் என்று காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. காந்தியடிகள் கூறுவார் : “பாரம்பரியத்தின் நதியில் நாம் நீந்தலாம். ஆனால் அதில் மூழ்குவது என்பது தற்கொலைக்கு ஈடானது” என்று. இங்கு புதைந்து போவது புத்தக வாசிப்பு, செய்தி கேட்டல், தன்னை மேம்படுத்திக்கொள்ளல், தன் விருப்பப்படி பொழுது போக்கும் ஒரு சில மணித்துளிகள் போன்றவை அனைத்தும்.
      பெண்கள் விரும்பித்தான் செய்கின்றோம்; பாதகமில்லை. ஆனால் அந்தச் சேவலின் நிலைதானே இங்கும். கூடமாட வேலை செய்து, அவர்களின் வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ளக் கூடாதா நண்பர்களே? அஞ்சலகம் செல்லுதல், வங்கிப் பணிகள், ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் பணம் கட்டுதல், மின் கட்டணம் செலுத்துதல் போன்ற பொறுப்பான பணிகளை எல்லாம் இன்று தெருவில் இறங்கிப் பெண்களும் செய்கின்றனர். ஆனால், அரிகரண்டி பிடிக்கும் கைகளுக்கு ஆதரவு தர மட்டும் ஆண்கள் முன்வருவதில்லை.
          மனைவி எவ்வளவு நேரம் எத்தனை வகையான உணவு வகைகளைச் சமைத்துக் கொண்டிருந்தாலும், வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் கணவனைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். விழாக்காலப் பட்டிமன்றத்தைக் கூட முழுமையாகப் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்று ஏங்கும் பெண்கள் பலருண்டு. பக்கத்து வீட்டுச் சித்ரா அக்காவைப் போல், “நான் கை வேலையாய் இருக்கும் போது அவர் அடுப்படி மேடையில உட்கார்ந்து ரெண்டு வார்த்தை பேசிக்கிட்டு இருக்கக் கூடாதா?” என்று ஏங்கும் பெண்களும் உண்டு.
         இப்படி ஆசைப்படுவதில் கூட ஒரு கவனம் தேவைப்படுகிறது. ஏனெனில் பல வீடுகளில் கணவன் மனைவி இருவரும் பேசத் தொடங்கும் போது காலக்கடிகாரத்தின் முட்கள் சந்தோசமாகவே நகர்கின்றன. அந்த மயக்கத்தில் கூட நான்கு வார்த்தை பேசிவிட்டால் அது எதையெதையோ தொட்டு எங்கெங்கோ சென்று வாக்குவாதமாக மாறிக் கடைசியில் சண்டையில் அல்லவா முடிகிறது? கேட்டால், இந்த பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. அப்பப்பா! அது பெரிய கஷ்டம் என்று கூறுகிறார்கள்.
           சமீபத்தில் வசந்தபாலன் ஒரு கட்டுரையில், “கடலினைப் புரிந்துகொள்ள மீனாக வேண்டும்; மழையை அறிந்துக் கொள்ளத் தவளையாக மாற வேண்டும்; பெண்ணைப் புரிந்துகொள்ளப் பெண்ணாகத் தான் மாற வேண்டும்” என்று எழுதியிருக்கிறார். மீனாக, தவளையாக மாறிக் கடலினையும், மழையினையும் புரிந்துகொள்ள முயற்சித்தால் அது பற்றிக் கவலையில்லை. ஆனால் பெண்ணாக மாறித் தான் பெண்ணைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லையே. ஒருதிரைப்படத்தில் விவேக், பெண்களைப் புரிந்து கொள்வதற்காகப் பெண் வேடமிடுவதும், பெண்ணாக மாறியது போல் படமாக்கப்பட்டிருப்பதும் நகைச்சுவைக்காக என்றாலும், சமூகத்தின் உச்சக்கட்ட அபத்தங்கள் அவை.
           பெண்களைப் புரிந்துகொள்ள டாக்டர் சாமுவேல் ஜான்சன் போல் நீங்களும் டிக்‌ஷனரி எதுவும் தயாரிக்க வேண்டாம். அவர்களின் கண்ணசைவுகளை, உடல் மொழியினை, சொற்சித்திரங்களைப் புரிந்து கொண்டால் போதுமே. வல்லவனுக்கு வல்லவன் என்னும் திரைப்படத்திற்காகக் கவியரசு கண்ணதாசன் எழுதி, டி.எம்.சௌந்தரராஜன் காந்தக் குரலால் பாடிய
        “ஓராயிரம் பார்வையிலே
         உன் பார்வையை நானறிவேன்
         உன் காலடி ஓசையிலே
         உன் காதலை நானறிவேன்”
என்ற பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்கள் நண்பர்களே. இது பெண்களின் ஏக்கத்திற்கான குரல் என்பது புரியும்.
         எங்க வீட்டுக்காரருக்கு இனிப்புப் பிடிக்காது. அதனால் நான் விசேஷ நாள்களிலும் பாயாசம்  செய்வதில்லை என்று கூறும் கலாவைப் போன்ற பெண்கள் இன்றும் உண்டு. இதையே பெண்கள் எதிர்பார்த்தால் குடும்பப் பாங்கான பெண்களா இவர்கள்? என்று ஏசிக் கடித்துக் குதறித் துப்புகிறது இந்த சமூகம். “புகைபிடிப்பது என் மனைவிக்குப் பிடிக்காது. அதனால் நான் புகைப்பதை விட்டு விட்டேன்” என்றாவது எவரும் கூறக் கேட்டிருக்கிறீர்களா? “என் மனைவிக்கு நீல நிறம் மிகவும் பிடிக்கும். அந்தக் கண்காட்சியில் பார்த்ததும் இந்த ஓவியத்தை வாங்கி வந்தேன்” என்று புடவை, நகைநட்டுகளைத் தாண்டி மனைவிக்கு இப்படி ஏதேனும் பரிசளித்ததுண்டா? அல்லது அலுவலகம் விட்டு இருவரும் வீட்டுக்கு வந்ததும், “நீ வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறாய். நம் செல்லக்குட்டிக்கு நான் வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்” என்று ஒரு நாளாவது உட்கார்ந்ததுண்டா? ரிமோட்டைக் கையால் சொடுக்கி, பட்பட்டென்று சானல்களை மாற்றி நகைச்சுவைத் துணுக்குகளும் செய்திகளும் பார்ப்பதில் தான் ஆண்களின் ரம்மியமான மாலைப்பொழுதுகள் கரைந்து போகின்றன.
           பிறகு எப்படி மனைவியைப் புரிந்து கொள்வதாம்? அவள் எதற்காக, என்ன சொல்ல வருகிறாள் என்பதைக் கேட்கக் கூடிய பொறுமை எத்தனை கணவன்மார்களுக்கு உண்டு? வீட்டுக்குள் மட்டுமல்ல, ஆணாதிக்க சமூகத்திலும் இது தொடர்கிறது. எங்களின் குரல்களை எத்தனை செவிகள் மதித்து உள்வாங்குகின்றன? அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், கடைகள் போன்ற இடங்களில் தன் கல்வி மற்றும் ஆளுமைத் தகுதியால் உயர் பதவி வகிக்கும் பெண்களின் சொற்கள் மட்டுமே கவனம் பெறுகின்றன. அதுவும் பல வேளைகளில் பல வேலைகளுக்காக மட்டுமே. மற்ற பேண்கள் நல்ல கருத்துகளை, ஏற்ற உத்திகளைக் கூறினாலும் செவிமடுப்பதும் இல்லை; ஏற்றுக்கொள்வதும் இல்லை.
          ஒருமுறை, இலக்கிய ஆர்வலர்கள் சிலருடனான கலந்துரையாடலில், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் பற்றிய பேச்சு எழுந்தது. நண்பர் ஒருவர்  அந்தச் சூழல் பற்றித் தன் கருத்தை முன் வைத்தார். நாங்கள் அனைவரும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருந்தோம். அதில் எனக்குத் தோன்றிய முரண்பாட்டைக் கூற விழைந்தபோது, வாய்ப்பே தரப்படவில்லை. மேலும், நேரமாகிவிட்டது என்று கூறிக் கூட்டத்தையும் முடித்துக் கொண்டார்.,  இது எந்த விதத்தில் நியாயம்? நீங்களே சொல்லுங்கள். இப்படிப் பல சூழல்களில், கருத்துச் சுதந்திரப் பெருமை கொண்ட நம் நாட்டில் பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? பெண்ணாகப் பிறந்தவள் எந்நிலையிலும் , பேச்சுவார்த்தை அளவில்கூட ஆணை மீறக்கூடாது; அவனைவிட உயர்ந்துவிடக் கூடாது. ஆணுக்குத் துணையாக, அடிமையாக வாய் பொத்திக் கிடப்பது மட்டுமே பெண்டிர்க்கு அழகு; அவர்கள் ஆற்றப்பட வேண்டிய கடமை அது என்றெல்லாம் மனுதர்மம் தொடங்கி இன்றைய சம்பிரதாயச் சடங்குகள் வரை சொல்லப்பட்டு வருகின்ற, எழுதப்படாத அடிமை சாசனம் அது.  
          ஆனாலும் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்கிறேன். சாதாரணமாகத் தன் உறவினர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதுகூட, ‘நீ பேசாதே’ என்று ஒற்றை விரல் நீட்டி அதிகாரம் செய்து அமராவதிப் பாட்டியைப் பார்த்துக் கர்ஜித்த குருகுலத் தாத்தாவின் தலைமுறை மரித்துப் போய் விட்டது.  ஜப்பானிய நாடாளுமன்றம் இப்பொழுதுதான் “அரச வம்சத்தைச் சார்ந்த பெண்களும் அதிபராகலாம்” என்ற சிறப்புச் சட்டத்தை இயற்றி இருக்கிறது. அரசகுலத் தோன்றல்களுக்கே அங்கு அந்த நிலைமை. ஆனால், நம் நாட்டில் மகளிருக்கு இடஒதுக்கீடு, முன்னுரிமை, சொத்தில் பங்கு என்பவை முழுமையாக, நேர்மையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவோ இல்லையோ பல ஆண்டுகளுக்கு முன்பே சட்டமாக இயற்றப்பட்டுள்ளதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளலாம். சென்ற மாதம் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரான, அவர்களின் இல்லற வாழ்விற்கு அநீதி இழைத்த “முத்தலாக்” சட்டப்படித் தடை செய்யப்பட்டிருப்பது நம் நாட்டில்தான் என்று நினைக்கும் பொழுது உவகையுடன் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
            தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு பெண், “பாவிகள் ஆட்சி செய்யும் நாட்டில் காவிகள் ஆட்சி செய்யக்கூடாதா?” எனத் துணிந்து வினா எழுப்பும் அளவிற்கு சுதந்திரமும் உரிமையும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஆண் பெண் சமத்துவம் என்பது இன்னும் எட்டாக் கனிதான். “கல்வி, சமத்துவம் என்று வெளி உலகை எட்டிப் பார்த்தாலும் பண்பாடு, கலாசாரம், சமய மரபுகள் என்றெல்லாம் இனம் புரியாத, தெளிவில்லாத  இவளுக்கு உரித்தாக்கிய பாசிக்குட்டையின் நிழலில் பணிந்து நிற்பதே மோட்ச சாம்ராஜ்ஜியம் என்று அவளுக்கு நாள்தோறும் பல்வேறு சாதனங்கள் உள்ளுணர்வில் போதனை ஏற்றிக்கொண்டிருக்கின்றன” என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கூறுவது நடந்து கொண்டிருக்கும் காலம் இது.
              இந்த இழிநிலை மெல்லமெல்லப் படிப்படியாக மாறுவதற்கான சூழல்கள் லேசாக எட்டிப் பார்க்கின்றன. மத்தியப் பிரதேச மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ், ”மாநிலத்தில் நகரமயமாதல் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே பெண்களும் ஆண்களுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும்“ என்று கூறுகிறார். இதைச் செயல்படுத்தப் பெண்கள் அதிக அளவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் இலவச ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார். இது போன்ற செயல் திட்டங்கள் சமூக ரீதியில் பெண்கள் முன்னேறுவதற்கும் சமத்துவம் பெறுவதற்கும் திறக்கப்படும் வாயிலாக இருக்கலாம்.
        இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்தமான் நிகோபார் தீவுகளில் முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடி இருக்கிறார். இதைப் பார்க்கும் பொழுது, அப்பாடா! முறுக்கு சுட்டார், அதிரசம் தட்டினார் என்றில்லாமல், எண்ணெய்ச் சட்டியை விடுத்து ஒரு பெண், வெளிச்சமூகத்தில் தீபாவளியைக் கொண்டாடி இருக்கிறார் என்பது ஆறுதலான விஷயம். இது அவரின் மனத்தளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றமாகும்.

           அடுக்களைக்குள் மனைவியைத் தள்ளித் திண்டுக்கல் பூட்டுப் போட்டுப் பூட்டிவைத்துவிட்டுத் தான் மட்டும் சவுகரியமாக வாழும் வாழ்க்கை வேண்டாமே. பாரதியார் காலத்திலேயே அவரது கும்மிப் பாட்டில், இத்தகு விந்தை மனிதர்கள் தலை கவிழ்ந்தும் மாய்ந்தும் போய்விட்டார்களே. சமூக எழுச்சிக்கும் இளைய சமுதாயத்தின் அறிவாற்றலுக்குமான திறவுகோல்கள் பெண்கள். இதை உணர்ந்ததால் கூறுகின்றேன். ”எங்களைத் துணையாக மதித்திடுங்கள்; தூணாகத் தாங்கிடுவோம். இணையாகப் போற்றிடுங்கள்; இமையாகக் காத்திடுவோம்”. 










குருதிப்புனல்
சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல்
இந்திரா பார்த்தசாரதி

தஞ்சாவூர் மாவட்டம் நான் பிறந்த மண்.

கீழவெண்மணிப் படுகொலை ஆற்றாது
சுடும் வடு.

பொருளாதாரப் போராட்டம்
தீயில் கொளுத்தப்பட்ட பாவத்தின்
பின்னணியில் எழுதப்பட்ட நாவல்.

பாலினப்பிரசினையைப் புகுத்தி எழுத்தாளரின்கற்பனைத் திறன்
எடுத்துக் காட்டப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

குருதி என்னும் சொல்லுக்கு விளக்கமும் சான்றும் நன்று.

தலித் மக்களின் உரிமைப் போராட்டமும்,
கிராமத்தினரின் பல்வேறு மனப்போக்குகளும்,
எதற்கெடுத்தாலும் சாதியை முன்னிலைப்படுத்துவதும் ,
பண்ணையாரின் ஆணவப் போக்கும் எனப் பல்வேறு இடங்களில் இந்திரா பார்த்தசாரதியின் தனி நடை இயல்பாகச் சூழலுடன் ஒத்துப் போவது அருமை.

கையில் எடுத்தால் கீழே வைக்க இயலாத அளவு விறுவிறுப்பு இல்லை எனினும்
என்னாகுமோ என்ற பதைபதைப்புடன் வாசகனை அழைத்துச் செல்லும் புனைவு இது.

பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல்,
அக்காலத்தில் நிலவிய கிராமத்துச் சூழல் குறித்த தகவல்களுக்காகவும் படிக்கலாம் நண்பர்களே.


Thursday, 11 January 2018

கவிஞர் சிற்பியின் "மெளன மயக்கங்கள் ".

வைரமுத்து, வாலியைக் கடந்து
சிற்பியின் கதைக்கவிதை உலகில்
வித்தியாசமான காதல் புதுக்கவிதை.

விலைமகளே கதாநாயகியாகவும்
கவிதையின் நாயகியாகவும்
காதலுக்கு மரியாதை செய்பவளாகவும் படைத்திருப்பது
கவிஞரின் சமூக அக்கறையும், துணிவும்.

கதாநாயகனின் எதார்த்த வாதமும்
காதலும் மோகமும்
தவிப்பும் நட்பும்
கவிதையில் கதையில்
பொருத்தமான வெளிப்பாடுகள்.

பாரதிராஜா தன் திரைப்படத்தில்
இளம் விதவைப் பெண்ணுக்கு
மறுமணம் நடத்தி
கிளைமாக்ஸில் கொன்று விடுவார்.
அதுபோல் இறுதியில்
'அவள்' முடிவு நெருடல்.
என்றாலும் கதையோட்டத்திற்கு
அழுத்தம்.

பிடித்த சில பகுதிகள்:

"அழுக்கின் ஒரு துளி தூசும்
படியாத
ஓர் ஆத்மா."

"சிரிப்பும் சிரிப்பும்
பெருக்கெடுக்கும் போது
தரையில் நழுவி விழுந்தது வானம்."

"அம்மா நகைகளை விற்றாள்
அப்புறம் காய்கறி விற்றாள்
தலையில் சுமந்து விறகு விற்றாள்
பிறகு
கற்பை விற்றாள்
எங்களுக்குக்
கால் வயிறு நிரம்பியது."

"மெளனம் என் கேள்வி
மகத்தான மெளனமே உன் பதில்".

படித்து ரசிக்கலாம்.
கோலம் வெளியீடு.