Monday, 19 June 2017

"அம்மா வந்தாள்" நூலாய்வு.

அதே புத்தகம்; அதே எழுத்தாளார்; அதே புதினம்;
ஒரு வாசகனை வெவ்வேறு களத்திற்கு அழைத்துச் செல்லுமா?
மறுபடியும் படிக்கையில், ஏதேனும் மாற்றம் தெரியுமா?

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்த போது வெறும் கதையாய்த் தோன்றியது, நல்லவேளை, ஏற்கெனவே மோகமுள்ளைக் கடந்து வந்ததாலும், நூலாசிரியரைப் பற்றிய செவி வழிச் செய்திகளாலும் மனதில் எதுவும் தாழ்ச்சியாகத் தோன்றவில்லை

இது கதைதானா? இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? இதெல்லாம் நடப்பது சாத்தியமா? என்றெல்லாம் சில கேள்விகள் முளைத்தன. இது எதிர் கால சந்ததிக்குச் சொல்லும் செய்தி என்னவோ? என்றும் குழம்பினேன்.என் அம்மாவிடம் வாதித்தும் ஒரு தெளிவு கிடைக்கவில்லை.
ஆனால் இன்று படிக்கையில் எத்தனையெத்தனை பரிமாணங்கள்! அந்தக் காலத்திலேயே ஒரு சமுதாய முரண்பாட்டைத் தைரியமாக மூட்டை பிரித்திருக்கிறார்.

அங்கே பவானியம்மாளின் வேத கைங்கர்யம் ஆச்சரியப்பட வைக்கிறது எனில், இங்கே எல்லாம் தெரிந்தும் மனைவியைக் கருக்கிடாத ஞானசூரியனான அப்பாவின் தெளிவு மிரள வைக்கிறது.

அம்மாவின் தோற்றப்பொலிவு, அம்மாவிற்கு அப்புவின் மீதான அதிகப்படியான அக்கறை, கணவனிடம்போறுமேகூறிய மிடுக்கு, வேத பாடம் கற்பிக்க எடுத்த முடிவிற்கான காரணம், சிவசுவுடனான உரையாடல், காசிக்குப் புறப்பட்டது என ஒவ்வொன்றிலும் அம்மா கதாபாத்திர வடிவமைப்பு மனதுக்குள் நிறைய விஷயங்களை அழகாகச் சொல்கிறது.

இந்துவின் ஏக்கமும், தழுவலும் கைம்பெண் மறுவாழ்வுக்கு ஆசைப்படுவது தவறில்லை என்று கட்டியம் கூறுகிறது.

கோபுவின் உருவ ஒற்றுமை, அலங்காரத்தின் முடிவுகள், தண்டபாணி வீட்டில் சிவசுவின் அன்னியோன்யம் இவை எல்லாம் இப்போது புரிகின்ற போது, எழுத்தாளர் ஒரு வித்தியாசமான சமூகச் சூழலைத் தேர்ந்தெடுத்து, எவ்வளவு லாவகமாகக் கையாண்டிருக்கிறார் என்பதும் தி. ஜானகிராமனின் எழுத்துகள் வாசகனை எவ்வாறு தன்னிடம் ஈர்த்துக்கொண்டுள்ளன என்பதும் புரிகிறது.


ஒரு முறை படித்துப் பாருங்கள் நண்பர்களே.

Friday, 2 June 2017







கவிக்கோ அப்துல் ர்குமானுக்குக் கவிதாஞ்சலி

கவிதை உலகின் மன்னன்
கவிமழை பொழியும் கண்ணன்
மதத்தால் இஸ்லாம் என்றாலும்
மனதில் மதம் பிடித்ததில்லை.


வானம்பாடிகளின் நாயகர்
வானகம் நாடிச் சென்றுவிட்டார்
புதுக்கவிதையில் தடம் பதித்தவர்
புது உலகம் தேடிப் போய்விட்டார்.


கவிதையில் குறியீடுகள் கண்டார்
ஆராய்ச்சி செய்து புரிய வைத்தார்.
கஜல், ஹைக்கூ  கவிதை எல்லாம்
தமிழில் நுழைய வாசல் வைத்தார்.


சாகாக் கவிதைகள் வடித்தெடுத்தார்
சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.
பேராசிரியராக வாணியம்பாடி சென்றார்
பெருங்கவிகள் வானத்தில் பறக்கச் செய்தார்.


கவியரங்கத்தில் ஒலிக்கும் இவர் குரல்
கவிதையருவி பொழியும் சாரல்
கவிதைகள் சொல்லும் சிலேடை
கையில் இவர் உருட்டும் பகடை


”சுட்டுவிரல்” நீட்டிய ”பித்தன்” இவர்
அதனால் ”நேயர் விருப்பம்” அறிந்தவர்
”முத்தமிழின் முகவரி” ஈந்தவர்
”முத்தங்கள் ஓய்வதில்லை” என்றவர்


”நிலவிலிருந்து வந்தவன்” நீர்தானா? 
நீள் தூக்கம் கொண்டதேனோ?
”தேவகானமாய்” இரங்கற்பா பாடுகின்றோம்
தேவரீர், ”இல்லையிலும் இருக்கின்றான்” நீரே.


”இறந்ததால் பிறந்தவன்” என்றாய்
மறுபடி எங்கே இறந்து போனாய்?
”மரணம் முற்றுப்புள்ளி அல்ல” என்றாயே
”கடவுளின்  முகவரி” தேடிச் சென்றாயோ?



மண்ணுலகை மறந்து சென்றவரே
”பால் வீதி”யில் குடி கொண்டீரோ?
தூசியாய்ப் பூமி உறுத்தியதோ?
துணையாய்க் கவிதை வந்ததுவோ?



உன்னைத் தேடி அலைகின்றோம் எங்கள் 
”கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை”.
மண்ணாளும் கவிதைகள் படைத்தவரே
விண்ணாளும் ஆசையில் சென்றீரோ?


கவி உள்ளங்கள் கண்ணீர் சிந்துகின்றோம்
கவிக்கோவைக் காணாமல் தவிக்கின்றோம்
மனதில் பதிந்த உன் கவிதைகள்
மறக்க முடியாத உன் நினைவுகள்.

                                            பா.தென்றல்,
                                            காரைக்குடி.










கா

Thursday, 30 March 2017

தேவதைகளால் தேடப்படுபவன் : தங்கம் மூர்த்தி

 ”தேவதைகளால் தேடப்படுபவன்” நூல் வெளியீட்டு விழா
 22.01.2017 அன்று புதுக்கோட்டையில்.
 தங்கம் முர்த்தி ஐயாவின் ஏற்புரை 
 என்றும் மக்களின் மனக்கோட்டையில்.

மரபின் மைந்தன் முத்தையா நூலை வெளியிட்டார்;
’தேவதைகளால் கொண்டாடப்படுபவன்’ பட்டம் தந்தார்.
பாரதி கிருஷ்ணகுமார், சொற்பொழிவு மன்னன்:
‘தேவதைகளால் கொண்டாடப்படுபவன்’ என்றார்.
முனைவர் சுப்பையா, கவிஞரின் நண்பர்
முத்தான கவிதைகளைக் கோடிட்டுப் பகிர்ந்திட்டார்.

அது ஒரு கவிதைத் திருவிழா;
சொற்பொழிவுக் கலைவிழா.


"இனிய நந்தவனம்” மார்ச்:2017 மாத இதழில் இந்த நூலாய்வு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கு நன்றி. 
                           நூலாய்வு

        கவிதைக்கான கருப்பொருள் தெரிவுகள், தெளிவாக மொழிதல், தகுந்த சொற்களைத் தேர்ந்தெடுத்தல் போன்ற கவிதைப் பண்புகள் வெகு சிறப்பாக நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றதைக் காண முடிகிறது. கவிதை நடை, கவிஞரைப் போலவே எளிமை மிகுந்திருக்கிறது. எளிய சொற்களைக் கையாண்ட விதமும் வெகு சிறப்பு. 

      சமர்ப்பணமே ஒரு கவிதையாய்ப் பிறந்து, ஓடத் தொடங்கும் கவிதை நதி, இந்த நூல் முழுவதும் கிளை பரப்பி, வற்றாத ஜீவநதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றவளுக்குக் கவிஞர் உரிய இடம் தந்திருக்கிறார். ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க அவர் இல்லையே எனக் கலங்கிய, நீர் நிறை அந்தக் கண்களுக்கு எல்லாம் மங்கலாகத் தெரிவது வாசகருக்கும் புலனாகிறது.

        மலை முகட்டில் உருவாகும் நதி, அருவியாகித் திடுமெனச் சிறு பள்ளத்தில் வீழ்வது போல், அடுத்த பக்கத்தில் நறுக்கென, இரத்தினச் சுருக்கமாய் ஒரு நன்றி நவிலக் கவிஞரால் மட்டுமே முடிகிறது.

     குழந்தைகள் கூத்தாடிக் கும்மாளமிட்டுக் குதூகலித்து மகிழும் தருணங்களைக் கூடை கூடையாய் அள்ளித் தருபவை திருவிழாக்கள்தான். இதை நயமாகக் கவிதையில் பதிவு செய்வது கவிஞர்களுக்கியல்பு.  “ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழிகளைத் தானே தேடிக் கொள்கிறான்” என்பார் எஸ்.ராமகிருஷ்ணன். (பதின்) ஆனால், இங்கே “திருவிழாக்களும் குழந்தைகளும்” கவிதையில், குழந்தைகள் திருவிழாக்களை வரவேற்று அழைத்து வருவதும், திருவிழாவின் கரங்களைத் துழாவுவதும், அவற்றை முத்தமிடுவதும் அழகிய கற்பனை. இதுகூடப் பரவாயில்லை, திருவிழாக்களிடம் கோரிக்கை வைப்பதும், பிரிவுபசாரமளிப்பதும் பின் அவை உறையும் இடமும் நம் கற்பனைக்கு எட்டாச் சிகரங்கள். ஆனால், குழந்தைகள் உலகின் எதார்த்தங்கள் அவை.

         நாய்களைப் பற்றிய கவிதை அல்ல எனத் தொடங்கி, நாய்களைப் பற்றியே பேசும் போது, ஆங்கே மறைமுகமாகப் பாரதியின் சாயல் அவர் எண்ணத்தில் புகுந்ததோ எனத் தோன்றுகிறது. 
”வாலைக் குழைத்து வரும் நாய்தான் – அது 
மனிதர்க்குத் தோழனடி பாப்பா” 
என்று விலங்குகளைக் கண்டும் ஆனந்தக் கூத்திட்டவனன்றோ அவன்!. தங்கம் மூர்த்தியும் இயல்பு மனத்தினனாகவே வருணிக்கிறார், கோபமே இல்லை. தொந்தரவு தரும் நாய்களின் சத்தத்தில் பிறந்த கவிதையையும் நம்மை ரசிக்க வைத்திருப்பது பெரு வியப்பு.

       “மெய் உணர்தல்” என்ற கவிதை, படிப்பவர் எவரும் இது தனக்காக எழுதப்பட்டது என்ற உணர்வைத் தரவல்லது. கடைசி வரிகளில் கடவுட் தன்மை குடிகொண்டதோவென ஒரு குறுகுறுப்பு எழுகிறது.

      இந்தக் கவிதை நதியில் காதல் மீன்களின் வரத்துக் குறைவாய் இருப்பினும் ஆங்காங்கே சில காதல் கவிதைகள் தங்கமீன்களாய் நீந்தி வருகின்றன. “நிலவுகள் பூக்கும் பூமி”, “திறப்பு விழா”, “நமக்கருகே மிதக்கும் வானம்”’, “கானகமும் கடவுளும்” ஆகிய கவிதைகள் இந்த ஓட்டத்தில் கலந்து இறுதி வரிகளிலே ஒரு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகின்றன.

      ”புலரும் கலை”, “ஏனென்று தெரியவில்லை” ஆகிய கவிதைகளில்  புரியவில்லை, தெரியவில்லை என்னும் குறிப்புகள்தான்  நமக்குப் பரிச்சயமான நடையிலே ஒரு நட்புறவுடன் அவற்றைக் கடந்து வருகிறோம் என்ற நிறைவைத் தருகின்றன.

       மனிதர்கள் காணும் கனவுகள் குறித்துக் கல்வி உளவியலில் பல விளக்கங்களும் ஆய்வுகளும் படித்திருக்கின்றோம். ஆனால், ”விபத்துக்குள்ளான கனவுகளில்” ஒரு பக்கக் கவிதையில் ஓராயிரம் கனவுகளின் தாக்கங்கள் வந்து போகும் விந்தையைக் காண முடிகிறது. “நிறங்களில்” கவிஞர் நிறமற்று இருக்கிறது என்று வாழ்க்கையைச் சொன்னது போல், நிறமற்று இருக்கின்றன இந்தக் கவிதையில் வரும் கனவுகளும். ஆனால் நிஜத்தில் வாழ்க்கையும் அதில் காயம்பட்ட கனவுகளும் நாமும் ஓடிக்கொண்டிருப்பது வண்ணங்களின் பின்னால்தான்.

    “உயர்திணை” மற்றும் “பணம் காய்க்கும் மரங்கள்” ஆகிய கவிதைகளில் நடமாடும் ஆறறிவு மனிதர்களைப் பார்க்கும் பொழுது, மனிதர்களைப் பற்றிய கவிஞரின் மதிப்பீடுகளும் அவர்களது செயல்களில் இவரது ஆதங்கமும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
”சீ மிருகமே என்று 
மனிதனைத் திட்டாதே. 
மனிதனே
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம்
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை 
ஏசுகிறது
சீ மனிதனே!” 
என்று கவிப் பேரரசு நொந்து பாடிய வரிகள் நினைவில் வந்து போகின்றன.          

      ”காலை மாலை உலாவி நிதம்
      காற்று வாங்கி வருவோரின் 
      காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
      காலன் ஓடிப் போவானே” 
என்ற கவிமணி தேசிக விநாயகத்தின் வரிகளை நன்குணர்ந்தவர்கள் நாம், நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது நடைப்பயிற்சி  எப்படியெல்லாம் நடக்கிறது என்னும் நிஜங்களைக் கவிஞர் “நடைப்பயிற்சியும் சில நண்பர்களும்” கவிதையில் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

      இந்த நூலில் இடம் பிடித்திருக்கும் ஒரே ஆளுமை, ‘பி.யு.சின்னப்பா’. கவிஞர் வாழும் சொந்தக் கோட்டையில் இருந்து புறப்பட்ட நட்சத்திரம் என்னும் பெருமையும் கொண்டவர். ஒரு கையடக்க வாழ்க்கை வரலாறாக இரண்டே பக்கங்களில் ஒரு ஜாம்பவானின் வாழ்க்கைக் குறிப்புகள்! போற்றத்தக்க பதிவுகள்.

      “நான்” கவிதையில், வாழ்க்கையின் அவலங்களை வரிசைப்படுத்திய கவிஞர், அதில் இருந்து விடுபட்டு ஜெயிக்கக் கூறும் உத்தியில் அவரது தனித்துவம் பளிச்சிடுகிறது. சற்று வித்தியாகர்வமும் கூட வருகிறது. ‘படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்று பாடிய கவியரசர் கண்ணதாசன் பாடல் வரி நம் நினைவில் வந்து மின்னுகிறது.

      ஒரு மாபெரும் காப்பியத்தில் சிலம்பின் பரல்கள் சிதறியதால் எரிந்தது ஒரு நகரம். “ஒரு மாறுவேடப் போட்டியின் மறுபக்கத்தில்”, குழந்தைகளின் மகிழ்ச்சிகளும் ஏமாற்றங்களும் சிதறியதால் உடைந்து போகிறது ஒரு கவியுள்ளம். அவரது உற்றுநோக்கல் திறனும், குழந்தைகள் மீது கொண்ட பரிவும் தெளிவாகத் தெரிகின்றன இங்கே.    

      ’கவிதைகள் பலவிதம்; அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்று கண்ணதாசனின் பறவைகள் பலவிதம் பாடலை நினைவூட்டுகின்றது நமக்கு “கடல் – சில கவிதைகள்” பகுதி. நடுவில் கொஞ்சம் பக்கங்கள் சேர்ந்து, அதுவே ஒரு தனி நூலாகத் தோன்றுகிறது எனக்கு. அதில், பறையடிப்பவன் கொடுக்கும் விஸிட்டிங் கார்டுக்குக் கவிஞர் எழுப்பும் வினா, எல்லோருக்கும் பொருத்தமானதாகத் தெரிகிறது.

         “பற… பற…” கவிதையில் குழந்தைக்குச் சுதந்திரம் மறுக்கப்படுவது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குழந்தைக்கு ’நெல்’ அறிமுகம் இல்லை என்பதும் யதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நூல் அம்மாவுக்கு எனத் தொடங்கி, பாட்டியிடம் முடிவடைகிறது. சொந்த பந்தத்தின் வலிமையைச் சொல்வது போல் தோன்றுகிறது.

        இப்படி ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு தளங்களில் அழகாகப் படைக்கப்பட்டிருப்பது இந்நூலின் தனிச் சிறப்பாகிறது.

        பொதுவாகக் கூறுமிடத்து, 
   ”உள்ளத் துள்ளது கவிதை
   இன்ப உருவெடுப்பது கவிதை
   தெள்ளத் தெளிந்த தமிழில்
   உண்மை தெரிந்துரைப்பது கவிதை”
 என்று  கவிதைக்குக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறிய இலக்கணத்தை  இந்த நூலின் பல இடங்களில் அப்படியே உணர முடிகிறது.

       இயல்பு வாழ்க்கையில் இக்கவிஞர் தேவதைகளால் சூழப்பட்டவன். அதனால்தான் “தேவதைகளால் தேடப்படுபவன்” ஆகவும் வலம் வருகிறார் தன் கவிதைப் பூங்கொத்துகளுடன்.

        சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், புதுமைப்பித்தன் (ஓடாதீர்) கூறிய வரிகளே இந்தக் கவிஞரின் கவிதைகளுக்கும் பொருந்தும்.
          “காலத்தால் சாகாது
          காலத்தின் 
          ஏலத்தால் மலியாது”.
 எனவே அனைத்துத் தரப்பினரும் இந்நூலை வாங்கிப் படிக்கலாம்; படித்து மகிழலாம்.          

                                        படிவெளியீடு,
                                        சென்னை,
                                        அலைபேசி எண்:+91 87545 07070 
ஒரு சிறு குறிப்பு :

பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு அடிக்கடி என் வகுப்பறையில் நடைபெறுவதுண்டு. குழந்தைக் கவிஞர் மு.பாலசுப்ரமணியன், புதுச்சேரி மற்றும் குழந்தை இலக்கிய எழுத்தாளர் மு.முருகேஷ், சென்னை போன்ற சமகாலப் படைப்பாளர்களை என் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். அந்த வரிசையில், மூன்றாம் பருவத்தில், நான்காம் வகுப்பு மாணவர்களுக்குச் சமூகவியல் பாடத்திற்கு ஆயத்தப் படுத்துதலுக்காகத் “ திருவிழாக்களும் குழந்தைகளும்” என்ற கவிதையை வாசித்து விளக்கம் அளித்தேன். பிறகு ஓய்வு நேரத்தில் அவர்களாகவே “தேவதைகளால் தேடப்படுபவனைக்” கேட்டு வாங்கிப் படித்து மகிழ்ந்தனர்.


















Monday, 6 March 2017

என் வகுப்பறை நூலகம் பிறந்த கதை
           தனது சொந்த நூலகத்தில் தொகுத்து  வைத்த  நூல்களைக்  காரைக்குடி 
அழகப்பா  பல்கலைக்கழக நூலகத்திற்கு  இலவசமாக  வழங்க  வேண்டும் என்று விருப்பமுறியில்  தன் விருப்பம்  எழுதிய  தமிழ்  இமயம்  முனைவர் வ.சுப.மாணிக்கனார் பணியாற்றிய அதே காரைக்குடி நகரில் பணியாற்றி வரும் ஓர் இடைநிலை ஆசிரியை நான்.
          யுனெஸ்கோவினால் பராமரிக்கப்படும் ரோஜா முத்தையாச் செட்டியாரின் பிரம்மாண்டமான பாரம்பரியமான நூலகம் தோன்றிய மண்ணில் பிறந்தவள்  நான். எனினும், அந்த நூலகத்தை எல்லாம்  என்னால் பார்வையிட்டு வர மட்டுமே முடியும் என்பதால், என்னளவில் என் வகுப்பறையில் ஒரு சிட்டுக்குருவியின்  கூடு போல் சிறிய  நூலகம் ஒன்று    நிர்மாணித்துள்ளேன்.
          எத்தனை  ஆண்டுக்காலத் தவம் இது தெரியுமா?
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நான் என் உயிர்த்தீயில் வாசிப்பு ஆசை என்னும் நெய் விட்டு வளர்த்த வேள்வி பற்றிக் கூறுகின்றேன்.
          எங்கள் பள்ளிக்குள் ஒரு நூலகத்திற்காக  நான் கடந்து வந்தது முட்கள் நிறைந்த, காட்டு விலங்குகளினும் கொடிய மனங்கள் அச்சுறுத்திய பாதை. காயப்பட்டது மனது எனினும் குறிக்கோளை இறுக்கிப் பிடித்து  நடை போட்டதால் இன்று வெற்றி.
           ஏளனப் பேச்சுகளும் ஏச்சுகளும் என் இலட்சிய உயரத்தை எட்ட உதவும் ஏணிப்படிகளாக எண்ணினேனே தவிர என்னைக் குடை சாய்த்துக் குப்புறத் தள்ளும் மாட்டு வண்டிகளாகிவிட நான் அனுமதிக்கவில்லை.
           எகத்தாளம் பேசிச் சிரித்ததந்தக் கூட்டம்; அவ்வப்பொழுது கண்கள் கலங்கும், கண்ணீர் வழியும்; உதடுகள்  கோபத்தில் துடித்துப் பதிலடிக் கொடுக்கத் துடிக்கும். ஆனாலும், நூலகப் பணி தொடர்ந்தது.
           என் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நூல்களை இடைவேளை நேரத்தில் கொடுத்துப் படிக்க உதவி செய்வேன். தொண்ணூறுகளிலேயே அவர்களோடு தரையில் அமர்ந்து ஒரு தோழியாய்க் கதைகள் சொல்லி, கதைப்புத்தகங்கள் படிக்க ஆர்வமூட்டியிருக்கிறேன்.
              பழைய கட்டடம் இடித்துப் புதுக்கட்டடம் கட்ட ஆரம்பித்த போதுதான் எங்களுக்கு சோதனைக் காலமும் முழுதாய் ஆரம்பித்தது. எங்கே    போயிற்றெங்கள் பள்ளி நூலகம்?  ஒரு மர அலமாரியின் மேல் தட்டு தான் அது. திடீரென ஒரு நாள் அதுவும் காணாமல் போனது. குழந்தையைத் தொலைத்த தாயென ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று அனைவரிடமும்  விசாரித்து, கண்களும் நெஞ்சமும் கலங்கித் தேடினேன். எங்கேயாவது கிடக்கும் என்ற பதிலில் சோர்வடைந்தாலும், எங்கேயாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. இறுதிக் கட்ட முயற்சியாகக்  குன்றெனக் குவிக்கப்பட்டிருந்த பள்ளித் தடவாடங்களுக்குள் தேடியதில்    கிடைத்தன எங்கள் நூல்களில் பல.  அவற்றுள் குற்றுயிரும் குலையுயிருமாய்ச் சில.
              தேடியது கிடைத்ததில் ஆறுதல் அடைந்தோம். அந்தப் புத்தகங்களுக்குச் சட்டையும் பசை மருந்தும் போட்டுப் புத்துயிர் அளித்தோம்.கடவுளே! இப்போது அடுத்த கட்டப் போராட்டம், அடிப்படை வசதியில் தொடங்கியது. நூல்களை  வைத்துப் பராமரிக்க அலமாரியோ, ஷெல்போ இல்லாத தற்காலிகக் கட்டடம் அது.
               ஒன்றிரண்டு புத்தகங்களை மட்டும் தினமும் தலைமையாசிரியர் அறையிலிருந்து ஒரு குழந்தையை அணைத்துத் தூக்குவது போல் என் வகுப்பறைக்கு ஏந்திச் செல்வேன். மாலை 3.30. மணிக்கு நானே அவற்றில் ஒரு சில பக்கங்களை மாணவர்களுக்குப் படித்துக் காட்டுவேன். மறுபடியும் அவை என்னுடன் பயணித்துத் தலைமையாசிரியர் அறையில் தங்கிக் கொண்டன.
               எடுத்த புத்தகத்திற்குக் கணக்கு மட்டும் கேட்கப்படும். எங்கே அவையெல்லாம் என் வீட்டில் குடியேறி விடுமோ என்ற கவலை அவர்களுக்கு. என் வீட்டில் நூற்றுக்கணக்கான என் புத்தகங்கள் கம்பீரமாகக் கொலு வீற்றிருக்கின்றன என்று கர்வத்தோடு மனம் நினைத்தாலும், கேள்விக்கணைகளின் வெப்பம் தாங்க இயலாது கண்களில் கோடுகளாய்ச் சுடுநீர் வழியும். 
            ஆயிற்று. எல்லாவற்றையும் கடந்தாயிற்று. புதிய கான்கிரிட் கட்டடமும் கட்டிக்  குடிவந்தாச்சு. இனிமேல் எங்கள் புத்தகங்கள் அன்றலர்ந்த தாமரையாய், கிழியாமல், முனை மடங்காமல் குருவிக் கூட்டினுள் குஞ்சுப் பறவைகளாய்ப் பத்திரமாக  இருக்கும். என எண்ணினேன். இரு பெரிய டிரேக்களில்  நான்கு வரிசைகளில் என் சொந்தப் புத்தகங்களை அடுக்கி, அவற்றைச் “செயல் வழிக்கற்றல்”அட்டைகள் உள்ள தட்டுகள் வைக்கும்   அடுக்கின் (rack) மீது வைத்தேன். மாணவர்களாகவே சென்று தங்களுக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துப் படிக்கும் சூழலை உருவாக்கினேன். அவர்கள் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி.
          நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது எங்கள் நூலகப் பயணம்.  அப்பொழுதும் புத்தகங்களை முழுமையாக நன்முறையில் பராமரிக்க இயலவில்லை. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு வகுப்பறையாக மாணவர்களும் ஆசிரியர்களும் மாறிக்கொண்டிருந்த காலகட்டம் அது. எனவே, எங்கள் வகுப்பில் நாங்கள் வைத்துச் செல்லும் நூல்கள் எங்களின் முழு கவனிப்பின்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தேய்ந்தும் கிழிந்தும் உருமாறிக் கொண்டே வந்தன.
          மாணவர்களை நூலகச் செயலர்களாக அமர்த்தியிருந்தேன். கொஞ்சம் ஒழுங்கு நடைமுறைக்கு வந்தது. எங்கள் வீட்டில் இருந்த மர அலமாரி ஒன்று வகுப்பறைக்கு வந்தது. அதுவே எங்கள் நூலகமானது. அது கதவுகளற்றிருந்ததால் காற்றை மட்டுமல்ல, தூசிகளையும் சில குறும்புக்கார மாணவர்களின் புத்தகம் மீதான அச்சுறுத்தல்களையும் சந்திக்க வேண்டிய சங்கடம் வந்தது.  
           எத்தனை காலம்தான் இப்படியே போராடி, நிராசையுடன் நூலகம் காப்பது? புத்தகங்களுக்கென்றே தனி அலமாரி என்ற என் ஆசையை என் கணவரிடம் மெதுவாகக் கூறினேன். பதிலில் பச்சைக்கொடி தெரியவில்லை. இரண்டு வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தேன். எதிர்பாராத வேளையில் 2016 டிசம்பரில் ஓர் நாள் சாமி வரம் தந்தது. தானே நின்று பொருள்கள் வாங்கி மேற்பார்வை செய்து ரூபாய் இரண்டாயிரம் மதிப்பில் இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையில் புதிய புத்தக அலமாரி தயார் செய்து தந்தார்கள்.
          ஃபிளைவுட், மரச்சட்டங்கள், கண்ணாடிக் கதவுகள், தனியே பூட்டுகள் என என் வகுப்பறை அலமாரி என்னும் என் கனவுக் குழந்தை பிறந்து விட்டது. இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை வரிசைப்படுத்தி எண்களிட்டு, வகை பிரித்து அடுக்கி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
            ’’முத்தான மூவரும் படிப்போம்’’ திட்டத்துடன் தொடங்குகிறேன். அவை:         
          முதலாவதாக, ”வாசிக்க வாரீர் வாண்டுகளே” என்னும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கான திட்டம். இதற்கெனப் பிரத்தியேகமாக வகுப்பறை நூலகத்தில் மாணவர்களுக்கான சிறுவர் பாடல்கள், சிறுகதைகள், தலைவர்களின் வரலாறுகள், புதிர்கள், பொது அறிவு வினா – விடைகள், விளையாட்டுகள், யோகாசனம், வரைதல் பயிற்சிகள் ஆகிய புத்தகங்கள் உண்டு.
            இரண்டாவதாக “ஆசிரியர் வாசிப்புத் திட்டம்”. சக ஆசிரியர்களையும் எங்கள் வாசகர் வட்டத்திற்குள் அழைத்து வருவது எம் நோக்கம். வகுப்பறை நிகழ்வுகள், மாணவர்களை அணுகும் முறைகள், சிறுகதைகள், நாவல்கள், தன்னம்பிக்கைக் கட்டுரைகள் போன்ற புத்தகங்கள் மற்றும் ஆங்கில இலக்கியமும் நாவல்களும் இவர்களுக்காக உண்டு.
            மூன்றாவதாக, “படிக்க வாங்க பெற்றோரே திட்டம்”. முதலில்  என் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து வாசிப்புப் பழக்கம் தொடங்குதல். பின்னர் படிப்படியாக அனைத்து வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களையும் இணைத்துக் கொள்ளுதல். ஜனரஞ்சகமான நாவல்கள், சிறுகதைகள், தன்னம்பிக்கக் கட்டுரைகள் எனப் பல வகை நூல்கள் இவர்களுக்காகக் காத்திருக்கின்றன.
            கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நான் எங்கள் வீட்டில் சேகரித்து வைத்துள்ள புத்தகங்களிலிருந்து பள்ளிக்குத் தேவைப்படுவனவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த வருடப் புத்தகக் கண்காட்சிகள் - மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய ஊர்களில் வாங்கிய புத்தகங்கள் அழகாகப் புத்தக அலமாரிக்குக் குடி வந்துவிட்டன.
               மகாகவி பாரதியார் சொன்னார், “காலை எழுந்தவுடன் படிப்பு’’ என்று. கேட்டுக்கொண்டோம், படிக்கின்றோம். பெரும்பாலும் பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களை மட்டும். ஆனால் அவரது தடம் பற்றி நடந்து வந்த அவரது தாசன் பாவேந்தரோ, “காலையில் படி, கடும்பகல்படி, மாலை இரவு பொருள்படும் படி சங்கத் தமிழ் நூலைப் படி” என்று சங்கத்தமிழ் கற்கச் சொன்னார். பாடப் புத்தகம் தாண்டிய வாசிப்பு “சங்கத்தமிழ் படித்தல்”. அதனையும் செய்கின்றோம். அதனுடன் சேர்த்து மற்ற நேரங்களில் மற்ற வேலைகளோடு கொஞ்சம் புத்தகங்கள் வாசிக்கவும் செய்கின்றோம். நாம் மட்டும் படித்துத் “தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்போன்” என்று சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொள்ளாது, தன்னலம் தாண்டிப் பொது நலப் போக்கில், குறிப்பாக மாணவர் நலனில் அக்கறை கொண்டு யோசிக்கத் தொடங்கியதன் விளைவே “என் வகுப்பறை நூலகம்”.

    எனவே, “வகுப்பறைப் புத்தக அலமாரி” தயார்நிலையில், திறப்பு விழா, நீண்ட தொலைவில் இல்லை; வெகு விரைவில்…..