Friday, 9 February 2018

மறுபடியும் பாலா

After a two decades
once again I came across
his novel.
Went through, enthralled and astonished
as usual.
Wondering......

இப்படியும் முடியுமா?

எழுத்துச் சித்தருக்கு
என் வணக்கம்.

(நெற்றிச் சுருக்கங்களும்
வெண்தாடியும்
குறுநகையும்...
அழகு.
விட்டு வெளியேறிய
உறுதியைக் குலைப்பவை ;
மீண்டும் மீண்டும்
படிக்க அழைப்பவை.)


Tuesday, 6 February 2018

என்னைச் சந்திக்ககனவில் வராதே...

                 _ நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமாரின் கவிதை நூல் என்றதும் உடனே படிக்க வேண்டும் என்று ஆவல். தலைப்பைப் பார்த்ததும் இதழ்கள் தானாகவே "யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது?  " வரிகளைப் பாடின.

 முதல் பக்கத்தில் ,இந்தக் கவிதை நூலை 'அறிவுமதி அண்ணனுக்கும், 
 73 , அபிபுல்லா  சாலைக்கும் '  சமர்ப்பணம் செய்திருப்பது சிறப்பு.

ஜப்பான் தேசத்துக் கவிஞர்களின் காதல் கவிதைகளை நம் கவிஞர், 
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தளித்துள்ளார்.

படித்து ரசித்ததில் சில கவிதைகள்:

விழித்தெழுந்து
சுற்றுப்புறத்தைக்
கைகளால் தடவுகிறேன்.

என்னைச் சந்திக்கக் 
கனவில் வராதே.

தோட்டத்தில் 
களையைப் போல் 
பரவுகிறது வதந்தி

நானும் அவளும்
தோளோடு தோளாக 
உறங்குகிறோம்.

பூனைகள் கோயிலில் 
ஒன்று சேர்கின்றன
ஆனால் இவ்விடத்தில்
கணவனும் மனைவியும்
இணைவதை மட்டும் 
மனிதர்கள்
குற்றஞ்சாட்டுகிறார்கள்.

உலகில் அப்புறம்
நான் நினைக்கப்படுவேனா?
இல்லை மறக்கப்படுவேனா?
நம் கடைசிச் சந்திப்பு 
என்னவாகும்?

அவளைப் பார்த்ததற்கு
முந்தைய நாள்களை 
நான்
நினைத்துப் பார்க்கிறேன்.

அப்போது நான்
பிரசினையின்றி இருந்தேன்.



"ஆனந்த யாழை மீட்டு கிறாய்" என்ற
வரிகளைப் பாடிக் கொண்டே, கவிஞரது சொந்தக் கவிதைகள் 
அதாவது நேரடித் தமிழ்க் கவிதைகள் படிக்க விருப்பம் எனில் , 
இதே நூலின் இறுதிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் 
அவரது படைப்புகளை வாங்கிப் படித்துக் களிக்கலாம் 
என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன்.


இந்நூலில் இடம் பெற்றுள்ள ஜப்பானியக் கவிதைகளுக்கும்,
தமிழின் சங்க காலக் கவிதைகளுக்கும் இந்த அமரகவி ஆச்சரியப்பட்டது போல்,
ஒற்றுமைகள் சில இருந்தாலும் நமது தாய் மொழியின் 
ஆழ்ந்த புலமையும், பொருள் செறிந்த சொற்களஞ்சியமும், பா வகைகளும் 
ஒற்றுமை என்னும் வட்டத்திற்குள் அமைய இயலாது என்றே தோன்றுகிறது.


பக்கத்திற்கு இரண்டாக நூறு குறுங்கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
41 ஜப்பானியக் கவிஞர்களைப்  பற்றி மிகச் சுருக்கமான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
21 பேர் பெண் கவிஞர்கள் என்பது வியப்பும் பெருமிதமும் தருகிறது.


நூலைப் படித்து முடித்ததும் அத்தனை காதலையும் வெள்ளி யருவியாய் அள்ளிக் கொட்டும் கவிஞர் தபூ சங்கரின் சில கவிதைகள் நம் நினைவடுக்குகளில் மெல்லவே  மேகமாய் நகர்ந்து போவதைக் காண முடிகிறது.


இறவாத புகழுடைய பிற மொழிக் கவிதைகளைத்
தமிழில் பெயர்த்து அளித்திருப்பது சிறப்பு.
யாவரும் படித்து மகிழலாம்.


பட்டாம்பூச்சி பதிப்பகம்,
சென்னை
விலை ரூ.50
அலைபேசி : 98410 03366


நன்றி: தமிழ்வெளி வசந்தி

          
         கவிதை பயிற்றும் முறை 


டாக்டர் ந.சுப்புரெட்டியார், சிறந்த தமிழறிஞர்களுள் ஒருவர்.

அவருடைய எழுத்துகள் எளிமையாக,
மாணவர்களுக்கும் புரியும் அளவில் இருக்கும்.
நிறைய நூல்கள் எழுதியவர்.

நூலகத்தில் இவர் பெயரைப் பார்த்ததும் உள்ளே புரட்டிப் பார்க்காமல்
"கவிதை பயிற்றும் முறை " நூலை
எடுத்து வந்தேன்.

நான் எதிர்பார்த்த மாதிரியே
எளிய சொற்கள் , புரியும்படியான உதாரணங்கள், ஆர்வமூட்டும் உத்திகள்,
நிறைய மேற்கோள்கள், கட்டுரைக் கருத்துடன் அவற்றின் பொருத்தப்பாடு என்று மிக அழகாகப் படைத்திருக்கிறார்.

கவிதையை எப்படி வாசிப்பது என்பதில் தொடங்கி, மொழிப் பாடத்தில் எப்படிப் பட்ட கவிதைகளைச் சேர்க்க வேண்டும் என்பதன் வழியாக நகரும் கட்டுரை, மொழிப் பாட ஆசிரியர்களும் கவிதையைக் கற்பிக்கும் முறை வரை தொடர்கிறது .

கவிதையை அறிமுகம் செய்யும் விதம், படிக்கும் முறை, விளக்கமளித்தல், மனப்பாடம் செய்தல் என எல்லாவற்றையும்
விளக்கியவர், கவிதையின் அழகும் உண்மையும் உணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

பின்னிணைப்பாக,
பயன்பட்ட தமிழ், ஆங்கில நூல்களின் பட்டியல்,
கலைச்சொல் அகராதி மற்றும்
பொருட் குறிப்பு அகராதி ஆகியவை
கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.

இத்தகைய நல்ல நூலை மனம் விரும்பியும்
தொடர்ந்தும் படிக்க இயலவில்லை.
ஏன்? என்று காரணம் கேளுங்கப்பா.
எண்ணிடலங்கா எழுத்துப் பிழைகளும்,
பல இடங்களில் வந்த சொற்களே அடுத்தடுத்த வரிகளில் அச்சாகி இருப்பதும் கொடுமை.
வாசகனின் மனமொன்றிய வாசிப்பிற்கு இவை நிச்சயம் தடைக் கற்கள் .
இதை ரவி பதிப்பகம் கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும்.

இருப்பினும் படித்து முடித்துவிட்டேன்.
கட்டுரைகள் அனைத்தும் அருமையும் இனிமையும்.