எங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் நாடு அரசு வழங்கும் விலையில்லாப் புத்தகங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
நடப்புக் கல்வியாண்டில்
2 முதல் 4ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.
சென்ற ஆண்டு எங்களிடம் 5ஆம் வகுப்புப் படித்து முடித்த குழந்தைகள்,
"இங்கேயும் பெரிய பள்ளிக்கூடத்திலயும் எல்லாருக்கும் புக்ஸ் குடுத்துட்டாங்க. எங்களுக்கு ஏன் மிஸ் குடுக்கல? நாங்க யார்கிட்ட கேக்குறது? எங்கே போயி வாங்குறது? அவுங்கள்லாம் படிச்சிடுவாங்க. நாங்க படிக்க வேணாமா?" என்று அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பினர். சரியான விடையளிக்கத் தெரியவில்லை எனக்கு.
நான் ஜூன் 3ஆந்தேதி முதல் இவ்வாறு தொடக்கப்பள்ளியில் பயின்ற 8 பள்ளிகளைச் சேர்ந்த 26 குழந்தைகளை ஒருங்கிணைத்து "ஆறாம் வகுப்புப் பறவைகள்" என்னும் வாட்ஸப் குழுதொடங்கி, பாடம் நடத்தி வருகிறேன்.
அன்று வினாவெழுப்பிய என் குழந்தைகளை இரு குழுக்களாகப் பிரித்து, சில பாடப் பகுதிகளை அப்பொழுதே நடத்தினேன்.
ஆனால், தமிழ் நாடு முழுவதும் தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு முடித்த குழந்தைகளின் ஒட்டுமொத்த வினாக்களாகவே இவற்றை நான் பார்க்கிறேன்.
கவனத்தில் கொள்வார் யாரோ?

