Friday, 7 April 2023

குறள் முழக்கம்: வாசல் பள்ளி

பிறந்தநாள் பரிசாகச் சான்றோரின் ஆசிகள்.

"குறள் முழக்கம்" மார்ச்சு மாத இதழாக வாசல் பள்ளிக்கென்றே தனித்த, சிறப்பிதழாக வெளியிடப்பட்டது நனிமகிழ்வு .








10.03.2023

அச்சு  ஊடகங்களைப் படித்துப் பழக்கப்பட்டதால் மின்னிதழ்கள் பக்கம் நான் விரும்பிச் சென்றதில்லை. திரு.மறைமலை இலக்குவனார் ஐயா அவர்கள்   பெருந்தொற்றுக்காலத்தில்  எனது பணிகள் குறித்துக் கேட்டபோது, மகளிர் சிறப்பிதழில் ஒரு கட்டுரையாக வரும் என நினைத்தேன். ஆனால்  9 பக்கங்களில்"வாசல் பள்ளித்" தனிச்சிறப்பிதழாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

 தீவிரமாகக் கொரோனா பரவிக் கொண்டிருந்த நிலையில், முதல் கட்டத்தில், மாணவர்களின் கல்வி நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களின் வீடு தேடிச் சென்று கற்பித்தது, குறள் வழியிலான வாழ்க்கை என்பதை எனக்கு உணர்த்தி இருக்கும் படைப்பு இது.

பேரன்பும் நன்றியும் Maraimalai Ilakkuvanar ஐயா.

Thursday, 21 January 2021

                             நூல் விமர்சனம்

”காற்றின் மொழி”யாக “இனிய நந்தவனம்” மாத இதழில் நான் எழுதியவை. மூன்று நூல்களுக்கானவை.

ஜனவரி,2021

நூல்: மலர்க ஹைக்கூ   ஆசிரியர்: மு.முருகேஷ்  

வெளியீடு : அகநி வெளியீடு, வந்தவாசி.  

பக்கங்கள்: 80 விலை:ரூ.80 அலைபேசி எண்: 98426 37637

       முனைவர் வ.சுப.மாணிக்கனார் தம் மாணிக்கக் குறளில், ’’விரும்பு துறையெல்லாம் வெண்தமிழிற் கற்க அரும்பு தொகுதிகளை ஆக்குஎன்று கூறியது போல், விரும்பு மொழியிலெல்லாம் தமிழ் ஹைக்கூக்களை மொழி பெயர்த்து அழகிய தொகுப்பாக வழங்கியிருக்கிறார் கவிஞர் மு.முருகேஷ்.

         வலுக்கட்டாயமான திணிப்பை தான் எதிர்க்கிறோம். தேவையேற்படும் வேளையில் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்போம் என்பதன் சாட்சியே மலர்க ஹைக்கூ நூலாக்கம். நல்லதொரு படைப்பினை மும்மொழியிலும் ஒரே நேரத்தில், ஒரே நூலாய் வெளியிட்டிருப்பது நந்தமிழ் இலக்கியத்திற்கு வளமை; புதுமை; பெருமை.

        கவிஞர் மு.முருகேஷின் எழுத்துப்பயணம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. குறிப்பாக, ஹைக்கூ உலகில் எளிமையான ஹைக்கூ முதல் செவ்வியல் தரம் வாய்ந்த ஹைக்கூ வரை படைத்து, பல தளங்களிலும் பயணித்துத் தனக்கெனத் தனித்தடம் வகுத்து வருபவர். மூன்றே வரிகளுக்குள் ஜப்பானிய ஹைக்கூ இலக்கணப்படியும், நம் சமூகக் கலாசாரச் சூழலை ஒட்டியும் தமிழர் வாழ்வியலைப் படம் பிடித்தும், ஹைக்கூக்கள் எழுதிடும் ஆற்றல் வாய்ந்தவர்.

        இவரது மொழிக்குக் கிடைத்த நட்பு வரம் திருச்சி சையது. அவரது சீரிய முயற்சியில், பல ஆண்டுகளாக இவர் எழுதிய ஹைக்கூ கவிதைகளில் இருந்து நூறு மட்டும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கவிஞர் அமரன் ஆங்கிலத்திலும், கவிஞர் நாணற்காடன் இந்தியிலும் மொழிபெயர்த்து, நூலாக வெளியிட்டிருப்பது சிறப்பு.

         இந்தி மொழிபெயர்ப்பு குறித்து எனக்கு ஆழ்ந்த புலமையில்லை எனினும், ’பாஸ் மேங் ஹை கர்’, ‘பச்சீ கா ரோனாமற்றும் பாகீ ஹை ஹோம் ஒர்க்போன்ற சில கவிதைகளின் இறுதி வரிகள் நாணற்காடனின் பகுதிகளையும் வாசிக்கத் தூண்டுகின்றன. அதுபோல், அமரன் ஆங்கிலத்தில்  துல்லியமாகப் பல கவிதைகளை மொழிபெயர்த்திருப்பதும் பாராட்டுக்குரியது. இருப்பினும் சில இடங்களில் (thumb sucking, ancient tank, so thirsty, anguish) இன்னும் அவதானித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

        தொண்டைக்   குழியருகே/ பழி தீர்த்துக் கொண்டது/ தூண்டில் காரனை மீன்”, நிலவைத் தொலைத்துவிட்டு/ இருண்டு கிடக்கிறதுநீர் வற்றிய கிணறு போன்ற ஹைக்கூக்கள் இயற்கைத் தொடர்பில் கற்பனையொளியேற்றி வாசகரை பாஷோவிடம் அழைத்துச் செல்லும் சக்தி வாய்ந்தவை. கோழிக்குஞ்சின் அதிர்ச்சி, காகிதத்தைக்  கிழிக்கையில், கரையேற முடியாத  நிலா போன்றவற்றைக் கூறும் கவிதைகள், இந்த நூலை மூடி வைத்த பின்பும்  நம்முடனே வந்துவிடுகின்றன. பின்பக்க அட்டையில், ”நத்தையின் பாதையிலேயேஹைக்கூவைப் பற்றி மட்டும் பல மணித்துளிகள் பேசலாம். பாராட்டுகள் மு.முருகேஷ்.  

**********************************************************************************************************

நூல்: வீழாது மனிதநேயம்   ஆசிரியர்: மார்சல் முருகன்          

வெளியீடு : மாமு பதிப்பகம், மதுரை.  

பக்கங்கள்: 200 விலை:.120 அலைபேசி எண்: 9344113378

       நீதியரசர் செல்வவிநாயகம், சில புத்தகங்களைக் கை கழுவிவிட்டுப் படிக்க வேண்டும்; சில புத்தகங்களைப் படித்துவிட்டுக் கை கழுவ வேண்டும்என்று கூறுவார். மாமு என்று பலராலும் பாசமாக அழைக்கப்படும் மார்சல் முருகனின் இந்தப் புத்தகத்தைக் கை கழுவிட்டுப் படிக்க வேண்டும்;  படித்துவிட்டுக் கண்கலங்க வேண்டும்.

      ஏனெனில், மக்கள் தொண்டே மகேசன் தொண்டென வாழ்ந்து வருவதாகத் தெரிய வரும் மாமு, பல சிக்கல்கள், தொல்லைகள் தொடர்ந்து வந்தாலும், நட்பின் கையைப் பற்றிக்கொண்டு மன உறுதியுடனும் விடா முயற்சியுடனும் தன் பணிகளை உள்ளன்போடு தொடர்வது  நெகிழ்ச்சிக்குரியது. இளம் இலட்சியவாதி ஒருவரின் அனுபவப் பதிவுகளாகப் பத்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, நூலாசிரியது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாகப் படைக்கப்பட்டுள்ளது இந்நூல்.

        உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏற்படும் விரிசல்கள் சில சமயங்களில் வீட்டையே ஆட்டம் காண வைப்பவை. அத்தகைய கொடிய சூழல் ஏற்பட்டுவிடாது மாமு செயல்பட்ட விதம் குறித்து விவரிக்கும் முதல் கட்டுரையிலேயே நூலின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. “விஷப்பல் விழுந்ததுஎன்னும் தலைப்பும் சிறப்பு. சிக்கந்தரின் நெகிழ்ச்சியான மேடைப்பேச்சும், அனாதையாய்த் தெருவில் இறந்து கிடந்த வாப்பாவின் உடலை மீட்டதும் மாமுவின் மதச்சார்பற்ற தொண்டுள்ளத்தின் மேன்மையைக் காட்டும் பகுதிகள் எனலாம்.

         குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், நட்புப்போலிகள், தம் கடையில் வேலை பார்க்கும் பையன்கள் ஆகிய அனைவரிடமும் அன்பு பூண்டு, அவர்களின் துன்பத்தைத் தந்நோய் போல் கண்டு, நேரமும் சூழலும் பாராது ஓடோடிச் சென்று உதவும் நூலாசிரியரின் சேவை மனப்பான்மையை எடுத்துக் காட்டுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள்.

          பல கட்டுரைகளினூடாக மதுரை மாநகரின் சிறப்புகளையும் அவலங்களையும் ஒரு சமதளத்தில் பார்வைக்கு வைத்திருக்கும்  படைப்பு இது. மழைநாளில் தெருக்களின் நிலையும், ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கும் பழமொழிகளும் நான்மாடக்கூடலைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.      

       ஒரு வகையில் இந்நூலும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான வழிகாட்டியாகவே எனக்குத் தோன்றுகிறது. மாமுவைப் போல் பொதுநலம் பேண இக்கட்டுரைகள் ஆர்வத்தைத் தூண்ட வல்லன. அப்படி இருக்கையில், கவிஞர் சர்ரியலிசம் பாலா, “சுயமுன்னேற்ற நூல்கள்குறித்து எங்கோ பேச வேண்டியதை இங்கு எதிர்மறையாகப் பதிவு செய்திருப்பது தேவையற்றதாகத் தெரிகிறது.                                                  அங்கதச் சுவையுடனும், சரளமான எழுத்தோட்டத்துடனும் எழுதும் திறனைப் பெற்றிருக்கும் இக்கவிஞர், மொழிநடையிலும், நிறுத்தற்குறிகள் பயன்பாட்டிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், தேர்ந்த கட்டுரையாளராகவும் பெயர் பெறுவது உறுதி. மேலும் பல நூல்கள் எழுதிடவும், சமூக சேவைகள் தொடர்ந்திடவும் வாழ்த்துகள்.

     ***************************************************************************************************

நூல்: மனுஷி   ஆசிரியர்: சண் தவராஜா

வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி.

பக்கங்கள்:80 விலை:ரூ.100 அலைபேசி எண்: 94432 84823

        குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லும் பாட்டிகள் தொலைக்காட்சித் தொடர்களிலும், கதை கேட்க வாய்ப்பில்லாத குழந்தைகள் அலைபேசி விளையாட்டுகளிலும் அமிழ்ந்து போய்க் கிடக்கிற அவல நிலையில், ஒரு கதை சொல்லியையோ, கதாசிரியரையோ கண்டால் பறந்து திரியும் சிட்டாகச் சிறகை விரிக்கிறது மனம். அத்தகையதொரு சிலிர்ப்பினூடாக மனுசியிடம் வந்தால், முதல் கதையே அசையாச் சிலையாக நம்மை அமர்த்தி, கண்களைக் குளமாக்கி விடுகிறது.

        தனது தனித்திறமைகள், ஆசாபாசங்கள், மானரோசம் என அனைத்தும் கணவனால் ஒரு பொருட்டாக மதிக்கப்படாத போது கூடப் பொறுமை காத்தவள், தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்ததற்காகக் கூறும் காரணமும், அதைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என அழுத்திச் சொல்லும் திடமும் படிப்பவர் நெஞ்சை உலுக்கும் பகுதிகள். மனைவியை மனுஷி என்று அழைப்பதைவிட, மனுஷியாக மதிப்பதுதான் முக்கியம் என்று அழுத்திச் சொல்கிறார் ஒரு ஆண் எழுத்தாளர். பெண்களுக்காகப் பெண்களே குரல் கொடுப்பதைக் காட்டிலும் இது உயர்வானது.  

       இத்தொகுப்பில் காணப்படும் ஆறு சிறுகதைகளும் தமிழ் இலக்கியத் தங்க மாலையில் பதிக்கப்பட்ட வைரங்கள் என்றால் மிகையில்லை. ஆனால் அவ்வைரங்கள் பாய்ச்சும் ஒளியில் பளிச்செனத் தெரிகிறது ஈழத் தமிழ் மக்களின் வலிமிகு வாழ்வு. பெய்ரூட் கொடுங்கனவுகளில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, பெய்ரூட்வாசி ஒருவரின் கூற்றாக, நீங்கள் கொல்லப்படும் வரை வாழ்ந்து தானே ஆக வேண்டும்என்று சொல்லியிருப்பதை நினைக்க வைக்கும் தருணங்கள் பல கதைகளில் வந்து போகின்றன.

       நெஞ்சு பொறுக்குதில்லையே” - அவன், பரியாரியார் வீட்டு மண்டபத் தூணிலே கட்டப்பட்டு மனநோயாளியாகக் கிடப்பவன், பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகுதோழர்என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டதும், கடகடவென்று கொட்டும் சொற்றொடர்களைப் படித்தால், வாசகர்களின் காலடியிலும் பூமி நழுவக்கூடும். ”இரையின்தொடக்கமும் முடிவும் எதிர்பாராததும் நடக்கக்கூடாததும் என்று நினைக்கையில், புனைவை மீறி, இது யாருக்கோ நடந்திருக்கிறது என்னும் வேதனை மேலோங்குகிறது.

      காட்டிக்கொடுப்பு”, “நோய்”, “வண்டியும் ஒரு நாள்ஆகிய கதைகள், ஈழத்தில் நிலவிய போர்ச்சூழல், மக்களின் உயிருக்கும் மானத்திற்கும் உத்தரவாதமில்லா நிலை, தேர்தல் பிரச்சாரம், சாதி வெறி ஆகியவற்றால் இருளில் அடைந்து நொந்து கிடக்கும் மக்களின் கொடுமையான நிலையைச் சித்தரிக்கின்றன. ஈழத்தைத் தாண்டி, வேறு பல கதைக்களங்களிலும் பயணிக்க நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

     ********************************************************************************************************

Tuesday, 25 August 2020

ஆறாம் வகுப்புப் பறவைகள்

 எங்களுக்கு ஏன் புத்தகம் கொடுக்கல?


எங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் நாடு அரசு வழங்கும் விலையில்லாப் புத்தகங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

நடப்புக் கல்வியாண்டில்

2 முதல் 4ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.


சென்ற ஆண்டு எங்களிடம் 5ஆம் வகுப்புப் படித்து முடித்த குழந்தைகள்,

"இங்கேயும் பெரிய பள்ளிக்கூடத்திலயும் எல்லாருக்கும் புக்ஸ் குடுத்துட்டாங்க. எங்களுக்கு ஏன் மிஸ் குடுக்கல? நாங்க யார்கிட்ட கேக்குறது? எங்கே போயி வாங்குறது? அவுங்கள்லாம் படிச்சிடுவாங்க. நாங்க படிக்க வேணாமா?" என்று அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பினர். சரியான விடையளிக்கத் தெரியவில்லை எனக்கு.


நான் ஜூன் 3ஆந்தேதி முதல் இவ்வாறு தொடக்கப்பள்ளியில் பயின்ற 8 பள்ளிகளைச் சேர்ந்த 26 குழந்தைகளை ஒருங்கிணைத்து "ஆறாம் வகுப்புப் பறவைகள்" என்னும் வாட்ஸப் குழு‌தொடங்கி, பாடம் நடத்தி வருகிறேன்.


அன்று வினாவெழுப்பிய என் குழந்தைகளை இரு குழுக்களாகப் பிரித்து, சில பாடப் பகுதிகளை அப்பொழுதே நடத்தினேன்.


ஆனால், தமிழ் நாடு முழுவதும் தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு முடித்த குழந்தைகளின் ஒட்டுமொத்த வினாக்களாகவே இவற்றை நான் பார்க்கிறேன்.

கவனத்தில் கொள்வார் யாரோ?

Sunday, 28 June 2020

நூல் வெளியீட்டு விழா

என் முதல் நூல் வெளியீட்டு விழா:

"உயிர் பருகும் மழை" (கவிதைத் தொகுப்பு)

நூலாசிரியர் : பா.தென்றல்
பககங்கள் : 136
விலை : ரூ. 120

வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி

நாள் : 23.11.2019

இடம்: ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளி,
காரைக்குடி

தலைமை:
மதிப்புறு கர்னல் முனைவர் இராஜேந்திரன்,
துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்.

சிறப்பு விருந்தினர் : கவிஞர் மு.முருகேஷ், சென்னை

வெளியிட்டவர்கள் : தந்தையும் தாயும்
திரு.வே. பாலசுப்ரமணியன் ,தலைமையாசிரியர் (ஓய்வு),
திருமதி.கோ. ஆனந்தா, தமிழாசிரியர் (ஓய்வு)

முதல் பிரதி பெற்றுக்கொண்டவர்:
என் கணவர் பா.சரவணன், கணிதப் பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கல்லூர்

நூல் மதிப்புரை : முனைவர் கி.சுமதி,முதல்வர்,
மகளிர் கல்லூரி, மணமேல்குடி

வாசிப்பின் அவசியம், வீட்டில் நூலகம் எனத் தொடங்கிய துணைவேந்தர், "நான் இந்த உயரத்தை அடைவதற்கு நூல்களே படிக்கட்டுகள். புத்தகக்கடை, புத்தகக் கண்காட்சி மற்றும் பள்ளிகளுக்கு என்னை அழைத்தால் மகிழ்ச்சியாக வருகிறேன். பெண்கள் எழுதுவது கடினமே. அதுவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் படைப்பாளிகளாக இருப்பது அரிது. இது அதிசயம்" என்றார். தொடர்ந்து மூன்று நூல்களைப் பற்றியும் (2 நூல்கள் சகோதரிகள் எழுதியவை) மிகவும் சிறப்பாக ஆய்வுரையும் நிகழ்த்தினார்.
யாரை அறிமுகம் செய்தாலும் மிகவும் மகிழ்ச்சியுடன் பொறுமையாக அவர்களுடனும் இரண்டொரு வார்த்தைகள் பேசிப் பழகிய இனிமையான எளிய மனிதர்.


சிறப்பு விருந்தினர் கவிஞர் மு.முருகேஷ். நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஹைக்கூ பிதாமகர், சொற்பொழிவாளர், பதிப்பாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத் திறன் கொண்டு, தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆளுமை.
எளிமையும் இனிமையும் வழியத் தம் சொல்லாற்றலால் அனைவரையும் கவர்ந்தார்.
எங்களது நூல்கள் குறித்து இந்து தமிழ் முதுநிலை உதவி ஆசிரியரான இவர் பேசும்போது,
"தனது வாழ்க்கையையே இனிய நந்தவனம் என்ற ஒரு புத்தகத்துக்குள் அடைகாத்துக் கொண்டிருக்கிற இனிய மனிதரது பதிப்பக வெளியீட்டில் மிகச் சிறப்பான வடிவமைப்புடன் மூன்று நூல்களும் வெளிவந்திருக்கின்றன. நான் பார்த்தவரையில் அதிகப் பெண்கள் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழா இதுதான்.
இலக்கியம் ஒன்று தான் மனித வாழ்வை இன்னும் ஈரமாக வைத்திருக்கின்றது. ஒரு பெண் எழுதுவது 100 ஆண்கள் எழுதுவதற்குச் சமம். நுட்பமாக மொழியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் தமிழ்ச் சமூகத்தில் பெண்ணெழுத்து இன்றும் குறைவாகவே இருக்கிறது. ஒரு பெண் எழுதிய கவிதையை அவள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கிறார்கள். பெண் எழுதிய கவிதையைப் பெண்ணின் அனுபவமாகப் பார்க்காதீர்கள்" என்று
கவிதைகள் குறித்தும், பெண்ணைழுத்து மீது சமூகப் பார்வை குறித்தும் சிறப்புரையாற்றினார்.


நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கிய நண்பர் நலந்தா செம்புலிங்கம், முதல் பிரதி பெற்றுக் கொண்ட முனைவர் சந்திரமோகன், தோழர் ஜீவசிந்தன், ஆசிரியர் பா.சரவணன், நூலாய்வுரைகள் சிறப்பாக நிகழ்த்திய முனைவர் கி.சுமதி, முனைவர் இரா.வனிதா, எழுத்தாளர் ஜெயமேரி, புகைப்படக் கலைஞராகத் தாமே முன் வந்துதவிய அண்ணன் ஜான் செல்வா மற்றும் சிறப்பாகத் தொகுத்து வழங்கி நிகழ்வினை ஒருங்கிணைத்த இனிய நண்பர் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோருக்கு நன்றி.
மற்றும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த பார்வையாளர்கள் அனைவருமே அவரவர் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டும் சாதித்துக் கொண்டும் இருக்கும் நண்பர்கள்.
அனைவருக்கும் நன்றி.


சில புகைப்படங்கள்