Thursday, 18 February 2016

என் வகுப்பறை என் சாம்ராஜ்ஜியம்- 1



வம்புப்பிரியன் வகுப்புத்தலைவன் ஆனானே !
                   எங்கள் பள்ளியில் ஜெ.சிவசுதன் என்ற மாணவன் படித்து வருகிறான். ஒவ்வொரு வருடமும் அவன் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கும். ஆனால் அவன் மிகவும் நல்ல பையன், எதைப் பற்றியும் கவலைப்படமாட்டான். எப்போதும் எல்லாரிடமும் வம்புகள் வளர்த்துத் திரிவான்.அவன் அம்மாவும் அடிக்கடி ஆசிரியர்களிடம் வந்து ,இந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளை, தெருவிலும் வீட்டிலும் செய்யும் தொல்லைகள் பற்றிப் புலம்புவார்கள். அனைத்து ஆசிரியர்களுமே இவனைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள்.
                                 இந்த வருடம் அந்த சமர்த்துப் பிள்ளை நான்காம் வகுப்பில் அடி எடுத்து வைத்தான். அப்பப்பா ! எவ்வளவு சேட்டைகள் செய்கிறான் செல்லம் ! இவனை எப்படியும் ஒரு சிறந்த மாணவனாக மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தேன்.என் அருகிலே அமர்த்திக் கொண்டு பாடம் நடத்துவேன். ஆனால் அவன்தான் மிகவும் சூட்டிகையான பையனாயிற்றே! நான் கரும்பலகைப் பக்கமோ அல்லது வேறு ஒரு மாணவர் பக்கமோ திரும்பும் அரை நொடியில் கூட யாரிடமேனும் வம்பு செய்திடுவான் : அவர்கள் என்னிடம் புகார் கூறிய  உடனே  ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொள்வான். நான் விசாரித்தால், தான் ஒன்றுமே பண்ணவில்லையென சூடமேற்றாமல் சத்தியம் செய்வான். படிப்பதும் எழுதுவதும் அவனுக்கு வேப்பங்காய்கள். அவனுடைய எப்போதும் சிரித்திருக்கும் முகம்தான் அவனுக்குக் கவசமும், பாதுகாப்பும்; நமக்கு அடிக்கவோ திட்டவோ மனம் வராது, அந்த மலர் முகத்தைப் பார்த்து விட்டால்.
                                        நமது குறிக்கோள் அவனை எப்படியும் கற்றல் திறன்களை அடையச் செய்ய வேண்டும் என்பதுதான். நான் என் அனுபவ அறிவைக் கூர்தீட்டி, அம்புகள் விட்டேன். முதலில், கண்ணு, செல்லம்,.. என்று கொஞ்சி, கெஞ்சிச் சொல்லிக் கொடுத்தேன். பிறகு அதட்டி உருட்டியும், பள்ளி நேரம் முடிந்த பின்பும் சொல்லிக் கொடுத்தேன். மெதுவாகக் கற்கத் தொடங்கினான். நிறைய  வகுப்பறைச் செயல்பாடுகளில் கலந்துகொள்ள வைத்தேன். கரும்பலகையில் இந்திய நிலப்படம் வரையும்  குழுத் தலைவனாக்கினேன். சிறிய அளவில் மாற்றம் தலை காட்டியது. இருந்தாலும் அவன் தன் வகுப்பு மாணவர்களைத் தன் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. வம்பும் புகார்களும் கூடவே வளர்ந்து கொண்டிருந்தன.
                                         அந்தச் சமயத்தில்தான் எனக்கு SCERT மூலம் மாநில அளவிலான ICT பயிற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. நான் திரும்பி வ்ந்ததும் நிறைய புகார்க்கதைகள் அவன் மேல் கூறப்பட்டன. உண்மையில் அவற்றில் சில ரசிக்கும்படியும் இருந்தன. நான் ICT மூலம் அவனைத் திருத்துவது என்று முடிவெடுத்தேன். அவன் அழகாகப் படங்கள் வ்ரைவதை நான்  ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். எனவே, கணினியில்  paint திறந்து, வரையவும், வண்ணம்தீட்டவும் கற்றுக்கொடுத்தேன். என்ன ஆச்சரியம்! ஒரே நாளில் கற்றுக்கொண்டான். இப்பொழுது என் வகுப்பில் அவனே ICT தலைவன். மிகவும் அழகாக மற்ற மாணவர்களுக்கும் கற்றுத் தருகிறான்.
                       அந்த  சிவசுதனா இவன்! என்று வியக்கும் அளவுக்கு மாறிவிட்டான். இனிமேல் முடிந்த வரை இவனுக்குக் கணினி வழிக் கற்பித்தலைக் கிடைக்கச் செய்து, ஐந்தாம் வகுப்பிற்கு அனுப்பி வைப்பது சுலபம் என்று தெரிந்து கொண்டேன். இப்பொழுது நான், தொந்தரவின்றி என் பணிகளைத் தொடர்கிறேன்.
                                        

.

No comments:

Post a Comment