Sunday, 12 June 2016

                         சிந்தனையைப் புதுப்பிக்கும் சிறந்த அறிவியல் கண்காட்சி
         
 

"வானை அளப்போம் ; கடல் மீனை அளப்போம் ;
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்."
                                என் வகுப்பு மாணவர்கள் எப்பொழுதும் வினாத் தொடுப்பதில் வல்லவர்கள். எதையும் மனப்பாடம் செய்து கற்பதைவிட, மனதில் தோன்றும் கேள்விகளுக்கு விடை கண்டு அறிய வேண்டும் என்று பழக்கி இருக்கிறேன்.வகுப்பறையில் எளிய அறிவியல் சோதனைகள் செய்யும்போதெல்லாம், மாணவர்களின் ஆர்வத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்.எப்படியும் ஒரு “அறிவியல் கண்காட்சி” நடத்த வேண்டும் என ஆர்வம் பிறந்தது. தலைமையாசிரியரிடம் உரிய அனுமதி பெற்று, மாணவச் செல்வங்களுடன் இணைந்து திட்டம் தீட்டும் பணியைத் துவங்கினேன்.முதலில், வாய்மொழியாக ஒரு கலந்துரையாடல்; காகிதத்தில் சில குறிப்புகள்.பிறகு  ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவற்றைக் குறித்துக் கொண்டோம்.
                                         எங்கள் பள்ளியின் மிக நீண்ட கால வரலாற்றில் முதல் முறையாக 29.02.2016 மற்றும் 01.03.2016 ஆகிய இரு நாட்கள் "தேசிய அறிவியல் தினத் திருவிழாவாக" அறிவியல் கண்காட்சி நடத்தினோம். நான்காம் வகுப்பில் ஒரு மாணவனுக்குக் கூட வாய்ப்பு விடுபட்டுப் போகாமல் 50 பேர்களுக்கும் செயல்பாடுகள் திட்டமிட்டு வழங்கினேன். அனைத்து மாணவர்களும் சிறப்பாகச் செயல்பட்டு , பார்வையாளர்களிடமும் பாராட்டுகள் பெற்றனர். கண்காட்சியை ரிப்பன் வெட்டி, துவக்கி வைத்து , அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் முனைவர். சிவகுமார் அவர்கள் விழாப் பேருரை வழங்கினார்.ஒவ்வொரு மாணவரின் பங்களிப்பையும் பார்வையிட்டு, ஆச்சரியப்பட்டு, அவர்களை மனதார வாழ்த்தினார்.
                                      புதுவயல் சரஸ்வதி பெண்கள் பள்ளியின் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திருமதி.ஆனந்தா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க இவ்வாறான முயற்சிகள் தேவை என்று வாழ்த்தினார்.   பரிசு வழங்கல், வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்தேறின. 
பிறகு, சில வகுப்பு மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் வந்து அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டுச் சென்றனர். இடையிடையே வேறு ப்ள்ளி ஆசிரியர்கள் சிலரும், ஒரு சில ஆசிரியப் பயிற்றுநர்களும் எங்கள் அழைப்பின் பேரில் வருகை புரிந்து பார்வையிட்டனர். அவர்கள் எங்கள் மாணவர்களிடம், வினாக்கள் தொடுத்தும், புதியன பகர்ந்தும், வாழ்த்தியும் சென்றனர்.
                               மாணவர்களிடையே தொலைநோக்குப் பார்வையும் , அறிவியல் மனப்பான்மையும் வளர்க்கப்பட வேண்டும் என்பதே இந்த அறிவியல் கண்காட்சியின் தலையாய நோக்கம் ஆகும்.
                                       திங்கட்கிழமை மாலை (29.02.16), அப்பாடா, அறிவியல் கண்காட்சியைச் சிறப்பாக நடத்தி முடித்து விட்டோம் என்னும் நிறைவில், உபகரணங்கள் அனைத்தையும் மற்றும் எல்லா பெஞ்சுகளையும் என் வகுப்பறையில் வைத்து விட்டுத் தலைமை ஆசிரியர் அறையில் வந்து அமர்ந்தேன்.முதல் வகுப்பு ஆசிரியை மெதுவாக என்னிடம் வந்து, தன் மாணவர்கள் இன்னும் கண்காட்சியைப் பார்வையிடவில்லை என்று கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காலையில் என் வகுப்புப் பெற்றோராசிரியர் கழகக் கூட்டமும் இருந்ததால் நேரம் போதவில்லை என்றேன். சற்று நேரம் கழித்து வேறு ஒரு ஆசிரியையும் இதையே கூறினார். நான் எதிர்பார்த்த மாற்றத்தின் முதற்படி இது என்று என் மனம் குதூகலித்தது. இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் என்று ஒரு பாடல் வரி மனதில் ஓடியது.தொலைபேசியில் சில நண்பர்களும் இதையே வழி மொழிந்தனர் .
                                        மறுநாள் காலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நால்வர் ராக்கெட், மழைநீர் சேகரிப்புத்தொட்டி, காற்றாலை போன்ற மாதிரிகளுடன் வந்து நிற்கிறார்கள். விளைவு கண் முன்னே தெரியும் போது சும்மா இருக்கலாமா ? தலைமை ஆசிரியையிடம் ஓடினேன் ; இன்றும் கண்காட்சியை நீட்டிக்கலாம் என்று அனுமதி கேட்டேன். ஷாமியானா வாடகைதானே, பார்த்துக் கொள்கிறேன் என்றேன். முப்பது நிமிடத்தில் தயார் ஆனோம் மறுபடியும். குழந்தைகள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்று பாரதி நகர் மன்ற நடுநிலைப்பள்ளி மாணவர்களும், நல்லையனாசாரி தொடக்கப்பள்ளி மாணவர்களும் கண்காட்சியைப் பார்வையிட்டு மகிழ்ந்தது கூடுதல் சிறப்பு. அவர்கள் அனைவருக்கும் மற்றும் அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டு என் வகுப்பு மாணவர்களை ஊக்கப்படுத்தி, கலந்துரையாடிய பிற பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள்  மற்றும் எங்கள் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.      


  



  


  
  

    
  

  


  
              
                          
   








No comments:

Post a Comment