Wednesday, 8 February 2017

நிறுவனர் நினைவு நாள்
காரைக்குடியின் திண்ணைப் பள்ளிக்கூடக் குருஅவர்.
காலமெல்லாம் கல்வித் தொண்டு ஆற்றியவர்.
காலநேர அட்டவணை எல்லாம் போடமாட்டார்.
கண் துஞ்சாது எந்நேரமும் போதித்தவர்.

அண்ணலுக்கு இட்டது வேலாயுதமென்ற  பெயர்
அண்ணஞ்சாராய்  மட்டும் அனைவருக்கும் தெரிந்தவர்.
அரையாடையே எளிமையாய் எப்போதும் அணிந்திடுவார்
அரிதான அன்போவியம் எங்களுக்கு அவர்.

கண்டிப்பு மாணவரிடத்தில் மிக உண்டு
கடுமையான தண்டனைகள் பல உண்டு.
கற்பிக்கும் பொழுதுகளில் குடும்பமும் மறந்திடுவார்
கல்வியும் ஒழுக்கமும் இரு கண்களென்றிடுவார்.

பெருக்கல் வாய்பாடு சொல்லுதல் கடினம்
பெரும்பாடு படுகிறது மாணவ சமுதாயம்
கணக்கில் பின்னஎண் வாய்பாடுகளையும்
பிணக்கின்றி  எளிதாய்ச் சொல்ல வைத்தவர்

தாய்மொழியைச் சரளமாகக் கற்பிப்பதில் வல்லவர்
தனிக் கையெழுத்தினை அச்சுவடித்திடும் நல்லவர்
ஒற்றுப்பிழையும் ல,ள,ழகர உச்சரிப்புத் தவறுகளும்
ஓடிஒளிய வேறுபாடுகள் அகற்றிப் பயிற்றுவிப்பார்.

தான் தவமியற்றியது ஒழுக்க நெறி
தன் மாணாக்கரையும் நடத்திய வழி.
தண்டனைக்குப் பயன்படுத்திய சங்கிலிக் கட்டையும்
தாத்தாவின் காந்திக்கண்ணாடியுமே மிச்சம் வைத்தவர்’

சின்னப் பள்ளிக்கூடச் சந்தினுள் ஓர் நாள்
சின்னவளைத் தோளில்தூக்கி மற்றொரு கையால்
என்பிஞ்சு விரல்பற்றி நிதானமாக நடந்தார்
எங்கோ எதற்காகவோ அழைத்துச் சென்றார்.

அந்தப் பாசம் பிடித்த பாதையில்
அவர் பாசத்தில் நனைந்து சென்றதில்
அழியாத நினைவொன்றே என் மனதில்

அன்புத் தாத்தாவின் பொக்கிஷமாய் உள்ளத்தில்.


No comments:

Post a Comment