என் வகுப்பறை நூலகம் பிறந்த கதை
தனது சொந்த நூலகத்தில் தொகுத்து வைத்த நூல்களைக்
காரைக்குடி
அழகப்பா
பல்கலைக்கழக நூலகத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும்
என்று விருப்பமுறியில் தன் விருப்பம் எழுதிய
தமிழ் இமயம் முனைவர் வ.சுப.மாணிக்கனார் பணியாற்றிய அதே காரைக்குடி
நகரில் பணியாற்றி வரும் ஓர் இடைநிலை ஆசிரியை நான்.
யுனெஸ்கோவினால் பராமரிக்கப்படும் ரோஜா முத்தையாச் செட்டியாரின் பிரம்மாண்டமான
பாரம்பரியமான நூலகம் தோன்றிய மண்ணில் பிறந்தவள்
நான். எனினும், அந்த நூலகத்தை எல்லாம்
என்னால் பார்வையிட்டு வர மட்டுமே முடியும் என்பதால், என்னளவில் என் வகுப்பறையில்
ஒரு சிட்டுக்குருவியின் கூடு போல் சிறிய நூலகம் ஒன்று நிர்மாணித்துள்ளேன்.
எத்தனை ஆண்டுக்காலத் தவம் இது தெரியுமா?
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நான் என் உயிர்த்தீயில்
வாசிப்பு ஆசை என்னும் நெய் விட்டு வளர்த்த வேள்வி பற்றிக் கூறுகின்றேன்.
எங்கள் பள்ளிக்குள் ஒரு நூலகத்திற்காக
நான் கடந்து வந்தது முட்கள் நிறைந்த, காட்டு விலங்குகளினும் கொடிய மனங்கள் அச்சுறுத்திய
பாதை. காயப்பட்டது மனது எனினும் குறிக்கோளை இறுக்கிப் பிடித்து நடை போட்டதால் இன்று வெற்றி.
ஏளனப் பேச்சுகளும் ஏச்சுகளும் என் இலட்சிய உயரத்தை எட்ட உதவும் ஏணிப்படிகளாக
எண்ணினேனே தவிர என்னைக் குடை சாய்த்துக் குப்புறத் தள்ளும் மாட்டு வண்டிகளாகிவிட நான்
அனுமதிக்கவில்லை.
எகத்தாளம் பேசிச் சிரித்ததந்தக் கூட்டம்; அவ்வப்பொழுது கண்கள் கலங்கும், கண்ணீர்
வழியும்; உதடுகள் கோபத்தில் துடித்துப் பதிலடிக்
கொடுக்கத் துடிக்கும். ஆனாலும், நூலகப் பணி தொடர்ந்தது.
என் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நூல்களை
இடைவேளை நேரத்தில் கொடுத்துப் படிக்க உதவி செய்வேன். தொண்ணூறுகளிலேயே அவர்களோடு தரையில்
அமர்ந்து ஒரு தோழியாய்க் கதைகள் சொல்லி, கதைப்புத்தகங்கள் படிக்க ஆர்வமூட்டியிருக்கிறேன்.
பழைய கட்டடம் இடித்துப் புதுக்கட்டடம் கட்ட ஆரம்பித்த
போதுதான் எங்களுக்கு சோதனைக் காலமும் முழுதாய் ஆரம்பித்தது. எங்கே போயிற்றெங்கள் பள்ளி நூலகம்? ஒரு மர அலமாரியின் மேல் தட்டு தான் அது. திடீரென
ஒரு நாள் அதுவும் காணாமல் போனது. குழந்தையைத் தொலைத்த தாயென ஒவ்வொரு வகுப்பிற்கும்
சென்று அனைவரிடமும் விசாரித்து, கண்களும் நெஞ்சமும்
கலங்கித் தேடினேன். எங்கேயாவது கிடக்கும் என்ற பதிலில் சோர்வடைந்தாலும், எங்கேயாவது
கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. இறுதிக் கட்ட முயற்சியாகக் குன்றெனக் குவிக்கப்பட்டிருந்த பள்ளித் தடவாடங்களுக்குள்
தேடியதில் கிடைத்தன எங்கள் நூல்களில் பல. அவற்றுள் குற்றுயிரும் குலையுயிருமாய்ச் சில.
தேடியது கிடைத்ததில் ஆறுதல் அடைந்தோம்.
அந்தப் புத்தகங்களுக்குச் சட்டையும் பசை மருந்தும் போட்டுப் புத்துயிர் அளித்தோம்.கடவுளே!
இப்போது அடுத்த கட்டப் போராட்டம், அடிப்படை வசதியில் தொடங்கியது. நூல்களை வைத்துப் பராமரிக்க அலமாரியோ, ஷெல்போ இல்லாத தற்காலிகக்
கட்டடம் அது.
ஒன்றிரண்டு புத்தகங்களை மட்டும் தினமும்
தலைமையாசிரியர் அறையிலிருந்து ஒரு குழந்தையை அணைத்துத் தூக்குவது போல் என் வகுப்பறைக்கு
ஏந்திச் செல்வேன். மாலை 3.30. மணிக்கு நானே அவற்றில் ஒரு சில பக்கங்களை மாணவர்களுக்குப்
படித்துக் காட்டுவேன். மறுபடியும் அவை என்னுடன் பயணித்துத் தலைமையாசிரியர் அறையில்
தங்கிக் கொண்டன.
எடுத்த புத்தகத்திற்குக் கணக்கு மட்டும்
கேட்கப்படும். எங்கே அவையெல்லாம் என் வீட்டில் குடியேறி விடுமோ என்ற கவலை அவர்களுக்கு.
என் வீட்டில் நூற்றுக்கணக்கான என் புத்தகங்கள் கம்பீரமாகக் கொலு வீற்றிருக்கின்றன என்று
கர்வத்தோடு மனம் நினைத்தாலும், கேள்விக்கணைகளின் வெப்பம் தாங்க இயலாது கண்களில் கோடுகளாய்ச்
சுடுநீர் வழியும்.
ஆயிற்று. எல்லாவற்றையும் கடந்தாயிற்று. புதிய கான்கிரிட்
கட்டடமும் கட்டிக் குடிவந்தாச்சு. இனிமேல்
எங்கள் புத்தகங்கள் அன்றலர்ந்த தாமரையாய், கிழியாமல், முனை மடங்காமல் குருவிக் கூட்டினுள்
குஞ்சுப் பறவைகளாய்ப் பத்திரமாக இருக்கும்.
என எண்ணினேன். இரு பெரிய டிரேக்களில் நான்கு
வரிசைகளில் என் சொந்தப் புத்தகங்களை அடுக்கி, அவற்றைச் “செயல் வழிக்கற்றல்”அட்டைகள்
உள்ள தட்டுகள் வைக்கும் அடுக்கின் (rack)
மீது வைத்தேன். மாணவர்களாகவே சென்று தங்களுக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துப் படிக்கும்
சூழலை உருவாக்கினேன். அவர்கள் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி.
நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது எங்கள்
நூலகப் பயணம். அப்பொழுதும் புத்தகங்களை முழுமையாக
நன்முறையில் பராமரிக்க இயலவில்லை. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு வகுப்பறையாக மாணவர்களும்
ஆசிரியர்களும் மாறிக்கொண்டிருந்த காலகட்டம் அது. எனவே, எங்கள் வகுப்பில் நாங்கள் வைத்துச்
செல்லும் நூல்கள் எங்களின் முழு கவனிப்பின்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத்
தேய்ந்தும் கிழிந்தும் உருமாறிக் கொண்டே வந்தன.
மாணவர்களை நூலகச் செயலர்களாக அமர்த்தியிருந்தேன்.
கொஞ்சம் ஒழுங்கு நடைமுறைக்கு வந்தது. எங்கள் வீட்டில் இருந்த மர அலமாரி ஒன்று வகுப்பறைக்கு
வந்தது. அதுவே எங்கள் நூலகமானது. அது கதவுகளற்றிருந்ததால் காற்றை மட்டுமல்ல, தூசிகளையும்
சில குறும்புக்கார மாணவர்களின் புத்தகம் மீதான அச்சுறுத்தல்களையும் சந்திக்க வேண்டிய
சங்கடம் வந்தது.
எத்தனை காலம்தான் இப்படியே போராடி, நிராசையுடன்
நூலகம் காப்பது? புத்தகங்களுக்கென்றே தனி அலமாரி என்ற என் ஆசையை என் கணவரிடம் மெதுவாகக்
கூறினேன். பதிலில் பச்சைக்கொடி தெரியவில்லை. இரண்டு வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தேன்.
எதிர்பாராத வேளையில் 2016 டிசம்பரில் ஓர் நாள் சாமி வரம் தந்தது. தானே நின்று பொருள்கள்
வாங்கி மேற்பார்வை செய்து ரூபாய் இரண்டாயிரம் மதிப்பில் இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையில்
புதிய புத்தக அலமாரி தயார் செய்து தந்தார்கள்.
ஃபிளைவுட், மரச்சட்டங்கள், கண்ணாடிக் கதவுகள்,
தனியே பூட்டுகள் என என் வகுப்பறை அலமாரி என்னும் என் கனவுக் குழந்தை பிறந்து விட்டது.
இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை வரிசைப்படுத்தி எண்களிட்டு, வகை பிரித்து அடுக்கி
அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
’’முத்தான மூவரும் படிப்போம்’’ திட்டத்துடன்
தொடங்குகிறேன். அவை:
முதலாவதாக, ”வாசிக்க வாரீர் வாண்டுகளே” என்னும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கான
திட்டம். இதற்கெனப் பிரத்தியேகமாக வகுப்பறை நூலகத்தில் மாணவர்களுக்கான சிறுவர் பாடல்கள்,
சிறுகதைகள், தலைவர்களின் வரலாறுகள், புதிர்கள், பொது அறிவு வினா – விடைகள், விளையாட்டுகள்,
யோகாசனம், வரைதல் பயிற்சிகள் ஆகிய புத்தகங்கள் உண்டு.
இரண்டாவதாக “ஆசிரியர் வாசிப்புத் திட்டம்”. சக ஆசிரியர்களையும் எங்கள் வாசகர்
வட்டத்திற்குள் அழைத்து வருவது எம் நோக்கம். வகுப்பறை நிகழ்வுகள், மாணவர்களை அணுகும்
முறைகள், சிறுகதைகள், நாவல்கள், தன்னம்பிக்கைக் கட்டுரைகள் போன்ற புத்தகங்கள் மற்றும்
ஆங்கில இலக்கியமும் நாவல்களும் இவர்களுக்காக உண்டு.
மூன்றாவதாக, “படிக்க வாங்க பெற்றோரே திட்டம்”. முதலில் என் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து வாசிப்புப்
பழக்கம் தொடங்குதல். பின்னர் படிப்படியாக அனைத்து வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களையும்
இணைத்துக் கொள்ளுதல். ஜனரஞ்சகமான நாவல்கள், சிறுகதைகள், தன்னம்பிக்கக் கட்டுரைகள் எனப்
பல வகை நூல்கள் இவர்களுக்காகக் காத்திருக்கின்றன.
கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நான் எங்கள் வீட்டில் சேகரித்து
வைத்துள்ள புத்தகங்களிலிருந்து பள்ளிக்குத் தேவைப்படுவனவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த வருடப் புத்தகக் கண்காட்சிகள் - மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய ஊர்களில்
வாங்கிய புத்தகங்கள் அழகாகப் புத்தக அலமாரிக்குக் குடி வந்துவிட்டன.
மகாகவி பாரதியார் சொன்னார், “காலை எழுந்தவுடன் படிப்பு’’ என்று. கேட்டுக்கொண்டோம்,
படிக்கின்றோம். பெரும்பாலும் பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களை மட்டும். ஆனால் அவரது தடம்
பற்றி நடந்து வந்த அவரது தாசன் பாவேந்தரோ, “காலையில் படி, கடும்பகல்படி, மாலை இரவு
பொருள்படும் படி சங்கத் தமிழ் நூலைப் படி” என்று சங்கத்தமிழ் கற்கச் சொன்னார். பாடப்
புத்தகம் தாண்டிய வாசிப்பு “சங்கத்தமிழ் படித்தல்”. அதனையும் செய்கின்றோம். அதனுடன்
சேர்த்து மற்ற நேரங்களில் மற்ற வேலைகளோடு கொஞ்சம் புத்தகங்கள் வாசிக்கவும் செய்கின்றோம்.
நாம் மட்டும் படித்துத் “தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்போன்”
என்று சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொள்ளாது, தன்னலம் தாண்டிப் பொது நலப் போக்கில்,
குறிப்பாக மாணவர் நலனில் அக்கறை கொண்டு யோசிக்கத் தொடங்கியதன் விளைவே “என் வகுப்பறை
நூலகம்”.
எனவே,
“வகுப்பறைப் புத்தக அலமாரி” தயார்நிலையில், திறப்பு விழா, நீண்ட தொலைவில் இல்லை; வெகு
விரைவில்…..



No comments:
Post a Comment