தேவதைகளால் தேடப்படுபவன் : தங்கம் மூர்த்தி
”தேவதைகளால் தேடப்படுபவன்” நூல் வெளியீட்டு விழா
22.01.2017 அன்று புதுக்கோட்டையில்.
தங்கம் முர்த்தி ஐயாவின் ஏற்புரை
என்றும் மக்களின் மனக்கோட்டையில்.
என்றும் மக்களின் மனக்கோட்டையில்.
மரபின் மைந்தன் முத்தையா நூலை வெளியிட்டார்;
’தேவதைகளால் கொண்டாடப்படுபவன்’ பட்டம் தந்தார்.
பாரதி கிருஷ்ணகுமார், சொற்பொழிவு மன்னன்:
‘தேவதைகளால் கொண்டாடப்படுபவன்’ என்றார்.
முனைவர் சுப்பையா, கவிஞரின் நண்பர்
முத்தான கவிதைகளைக் கோடிட்டுப் பகிர்ந்திட்டார்.
’தேவதைகளால் கொண்டாடப்படுபவன்’ பட்டம் தந்தார்.
பாரதி கிருஷ்ணகுமார், சொற்பொழிவு மன்னன்:
‘தேவதைகளால் கொண்டாடப்படுபவன்’ என்றார்.
முனைவர் சுப்பையா, கவிஞரின் நண்பர்
முத்தான கவிதைகளைக் கோடிட்டுப் பகிர்ந்திட்டார்.
அது ஒரு கவிதைத் திருவிழா;
சொற்பொழிவுக் கலைவிழா.
"இனிய நந்தவனம்” மார்ச்:2017 மாத இதழில் இந்த நூலாய்வு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கு நன்றி.
நூலாய்வு
கவிதைக்கான கருப்பொருள் தெரிவுகள், தெளிவாக மொழிதல், தகுந்த சொற்களைத் தேர்ந்தெடுத்தல்
போன்ற கவிதைப் பண்புகள் வெகு சிறப்பாக நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றதைக் காண முடிகிறது.
கவிதை நடை, கவிஞரைப் போலவே எளிமை மிகுந்திருக்கிறது. எளிய சொற்களைக் கையாண்ட விதமும்
வெகு சிறப்பு.
சமர்ப்பணமே ஒரு கவிதையாய்ப் பிறந்து, ஓடத்
தொடங்கும் கவிதை நதி, இந்த நூல் முழுவதும் கிளை பரப்பி, வற்றாத ஜீவநதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றவளுக்குக் கவிஞர் உரிய இடம் தந்திருக்கிறார்.
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க அவர் இல்லையே எனக் கலங்கிய, நீர் நிறை அந்தக் கண்களுக்கு
எல்லாம் மங்கலாகத் தெரிவது வாசகருக்கும் புலனாகிறது.
மலை முகட்டில் உருவாகும் நதி, அருவியாகித்
திடுமெனச் சிறு பள்ளத்தில் வீழ்வது போல், அடுத்த பக்கத்தில் நறுக்கென, இரத்தினச் சுருக்கமாய்
ஒரு நன்றி நவிலக் கவிஞரால் மட்டுமே முடிகிறது.
குழந்தைகள் கூத்தாடிக் கும்மாளமிட்டுக் குதூகலித்து மகிழும் தருணங்களைக் கூடை
கூடையாய் அள்ளித் தருபவை திருவிழாக்கள்தான். இதை நயமாகக் கவிதையில் பதிவு செய்வது கவிஞர்களுக்கியல்பு. “ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான
வழிகளைத் தானே தேடிக் கொள்கிறான்” என்பார் எஸ்.ராமகிருஷ்ணன். (பதின்) ஆனால், இங்கே
“திருவிழாக்களும் குழந்தைகளும்” கவிதையில், குழந்தைகள் திருவிழாக்களை வரவேற்று அழைத்து
வருவதும், திருவிழாவின் கரங்களைத் துழாவுவதும், அவற்றை முத்தமிடுவதும் அழகிய கற்பனை.
இதுகூடப் பரவாயில்லை, திருவிழாக்களிடம் கோரிக்கை வைப்பதும், பிரிவுபசாரமளிப்பதும் பின்
அவை உறையும் இடமும் நம் கற்பனைக்கு எட்டாச் சிகரங்கள். ஆனால், குழந்தைகள் உலகின் எதார்த்தங்கள்
அவை.
நாய்களைப் பற்றிய கவிதை அல்ல எனத் தொடங்கி,
நாய்களைப் பற்றியே பேசும் போது, ஆங்கே மறைமுகமாகப் பாரதியின் சாயல் அவர் எண்ணத்தில்
புகுந்ததோ எனத் தோன்றுகிறது.
”வாலைக் குழைத்து வரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா”
என்று விலங்குகளைக் கண்டும் ஆனந்தக் கூத்திட்டவனன்றோ அவன்!. தங்கம் மூர்த்தியும் இயல்பு மனத்தினனாகவே வருணிக்கிறார், கோபமே இல்லை. தொந்தரவு தரும் நாய்களின் சத்தத்தில் பிறந்த கவிதையையும் நம்மை ரசிக்க வைத்திருப்பது பெரு வியப்பு.
”வாலைக் குழைத்து வரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா”
என்று விலங்குகளைக் கண்டும் ஆனந்தக் கூத்திட்டவனன்றோ அவன்!. தங்கம் மூர்த்தியும் இயல்பு மனத்தினனாகவே வருணிக்கிறார், கோபமே இல்லை. தொந்தரவு தரும் நாய்களின் சத்தத்தில் பிறந்த கவிதையையும் நம்மை ரசிக்க வைத்திருப்பது பெரு வியப்பு.
“மெய் உணர்தல்” என்ற கவிதை, படிப்பவர் எவரும்
இது தனக்காக எழுதப்பட்டது என்ற உணர்வைத் தரவல்லது. கடைசி வரிகளில் கடவுட் தன்மை குடிகொண்டதோவென
ஒரு குறுகுறுப்பு எழுகிறது.
இந்தக் கவிதை நதியில் காதல் மீன்களின்
வரத்துக் குறைவாய் இருப்பினும் ஆங்காங்கே சில காதல் கவிதைகள் தங்கமீன்களாய் நீந்தி
வருகின்றன. “நிலவுகள் பூக்கும் பூமி”, “திறப்பு விழா”, “நமக்கருகே மிதக்கும் வானம்”’,
“கானகமும் கடவுளும்” ஆகிய கவிதைகள் இந்த ஓட்டத்தில் கலந்து இறுதி வரிகளிலே ஒரு நம்பிக்கை
ஒளியைப் பாய்ச்சுகின்றன.
”புலரும் கலை”, “ஏனென்று தெரியவில்லை” ஆகிய
கவிதைகளில் புரியவில்லை, தெரியவில்லை என்னும்
குறிப்புகள்தான் நமக்குப் பரிச்சயமான நடையிலே
ஒரு நட்புறவுடன் அவற்றைக் கடந்து வருகிறோம் என்ற நிறைவைத் தருகின்றன.
மனிதர்கள் காணும் கனவுகள் குறித்துக் கல்வி
உளவியலில் பல விளக்கங்களும் ஆய்வுகளும் படித்திருக்கின்றோம். ஆனால், ”விபத்துக்குள்ளான
கனவுகளில்” ஒரு பக்கக் கவிதையில் ஓராயிரம் கனவுகளின் தாக்கங்கள் வந்து போகும் விந்தையைக்
காண முடிகிறது. “நிறங்களில்” கவிஞர் நிறமற்று இருக்கிறது என்று வாழ்க்கையைச் சொன்னது
போல், நிறமற்று இருக்கின்றன இந்தக் கவிதையில் வரும் கனவுகளும். ஆனால் நிஜத்தில் வாழ்க்கையும்
அதில் காயம்பட்ட கனவுகளும் நாமும் ஓடிக்கொண்டிருப்பது வண்ணங்களின் பின்னால்தான்.
“உயர்திணை” மற்றும் “பணம் காய்க்கும் மரங்கள்”
ஆகிய கவிதைகளில் நடமாடும் ஆறறிவு மனிதர்களைப் பார்க்கும் பொழுது, மனிதர்களைப் பற்றிய
கவிஞரின் மதிப்பீடுகளும் அவர்களது செயல்களில் இவரது ஆதங்கமும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
”சீ மிருகமே என்று
மனிதனைத் திட்டாதே.
மனிதனே
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம்
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
சீ மனிதனே!”
என்று கவிப் பேரரசு நொந்து
பாடிய வரிகள் நினைவில் வந்து போகின்றன.
”காலை மாலை உலாவி நிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே”
என்ற கவிமணி தேசிக விநாயகத்தின் வரிகளை நன்குணர்ந்தவர்கள் நாம், நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது நடைப்பயிற்சி எப்படியெல்லாம் நடக்கிறது என்னும் நிஜங்களைக் கவிஞர் “நடைப்பயிற்சியும் சில நண்பர்களும்” கவிதையில் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே”
என்ற கவிமணி தேசிக விநாயகத்தின் வரிகளை நன்குணர்ந்தவர்கள் நாம், நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது நடைப்பயிற்சி எப்படியெல்லாம் நடக்கிறது என்னும் நிஜங்களைக் கவிஞர் “நடைப்பயிற்சியும் சில நண்பர்களும்” கவிதையில் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
இந்த நூலில் இடம் பிடித்திருக்கும் ஒரே ஆளுமை,
‘பி.யு.சின்னப்பா’. கவிஞர் வாழும் சொந்தக் கோட்டையில் இருந்து புறப்பட்ட நட்சத்திரம்
என்னும் பெருமையும் கொண்டவர். ஒரு கையடக்க வாழ்க்கை வரலாறாக இரண்டே பக்கங்களில் ஒரு
ஜாம்பவானின் வாழ்க்கைக் குறிப்புகள்! போற்றத்தக்க பதிவுகள்.
“நான்” கவிதையில், வாழ்க்கையின் அவலங்களை வரிசைப்படுத்திய கவிஞர், அதில் இருந்து
விடுபட்டு ஜெயிக்கக் கூறும் உத்தியில் அவரது தனித்துவம் பளிச்சிடுகிறது. சற்று வித்தியாகர்வமும்
கூட வருகிறது. ‘படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்று பாடிய கவியரசர் கண்ணதாசன் பாடல்
வரி நம் நினைவில் வந்து மின்னுகிறது.
ஒரு மாபெரும் காப்பியத்தில் சிலம்பின் பரல்கள் சிதறியதால் எரிந்தது ஒரு நகரம்.
“ஒரு மாறுவேடப் போட்டியின் மறுபக்கத்தில்”, குழந்தைகளின் மகிழ்ச்சிகளும் ஏமாற்றங்களும்
சிதறியதால் உடைந்து போகிறது ஒரு கவியுள்ளம். அவரது உற்றுநோக்கல் திறனும், குழந்தைகள்
மீது கொண்ட பரிவும் தெளிவாகத் தெரிகின்றன இங்கே.
’கவிதைகள் பலவிதம்; அவை ஒவ்வொன்றும்
ஒருவிதம்’ என்று கண்ணதாசனின் பறவைகள் பலவிதம் பாடலை நினைவூட்டுகின்றது நமக்கு “கடல்
– சில கவிதைகள்” பகுதி. நடுவில் கொஞ்சம் பக்கங்கள் சேர்ந்து, அதுவே ஒரு தனி நூலாகத்
தோன்றுகிறது எனக்கு. அதில், பறையடிப்பவன் கொடுக்கும் விஸிட்டிங் கார்டுக்குக் கவிஞர்
எழுப்பும் வினா, எல்லோருக்கும் பொருத்தமானதாகத் தெரிகிறது.
“பற… பற…” கவிதையில் குழந்தைக்குச் சுதந்திரம்
மறுக்கப்படுவது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குழந்தைக்கு ’நெல்’ அறிமுகம் இல்லை
என்பதும் யதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நூல் அம்மாவுக்கு எனத்
தொடங்கி, பாட்டியிடம் முடிவடைகிறது. சொந்த பந்தத்தின் வலிமையைச் சொல்வது போல் தோன்றுகிறது.
இப்படி ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு தளங்களில் அழகாகப் படைக்கப்பட்டிருப்பது
இந்நூலின் தனிச் சிறப்பாகிறது.
பொதுவாகக் கூறுமிடத்து,
”உள்ளத் துள்ளது
கவிதை
இன்ப உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்
உண்மை தெரிந்துரைப்பது கவிதை”
என்று கவிதைக்குக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
கூறிய இலக்கணத்தை இந்த நூலின் பல இடங்களில்
அப்படியே உணர முடிகிறது.
இயல்பு வாழ்க்கையில் இக்கவிஞர் தேவதைகளால்
சூழப்பட்டவன். அதனால்தான் “தேவதைகளால் தேடப்படுபவன்” ஆகவும் வலம் வருகிறார் தன் கவிதைப்
பூங்கொத்துகளுடன்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், புதுமைப்பித்தன்
(ஓடாதீர்) கூறிய வரிகளே இந்தக் கவிஞரின் கவிதைகளுக்கும் பொருந்தும்.
“காலத்தால் சாகாது
காலத்தின்
ஏலத்தால் மலியாது”.
எனவே அனைத்துத் தரப்பினரும் இந்நூலை வாங்கிப் படிக்கலாம்;
படித்து மகிழலாம்.
படிவெளியீடு,
சென்னை,
அலைபேசி
எண்:+91
87545 07070
ஒரு சிறு குறிப்பு :
பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு அடிக்கடி என் வகுப்பறையில் நடைபெறுவதுண்டு. குழந்தைக் கவிஞர் மு.பாலசுப்ரமணியன், புதுச்சேரி மற்றும் குழந்தை இலக்கிய எழுத்தாளர் மு.முருகேஷ், சென்னை போன்ற சமகாலப் படைப்பாளர்களை என் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். அந்த வரிசையில், மூன்றாம் பருவத்தில், நான்காம் வகுப்பு மாணவர்களுக்குச் சமூகவியல் பாடத்திற்கு ஆயத்தப் படுத்துதலுக்காகத் “ திருவிழாக்களும் குழந்தைகளும்” என்ற கவிதையை வாசித்து விளக்கம் அளித்தேன். பிறகு ஓய்வு நேரத்தில் அவர்களாகவே “தேவதைகளால் தேடப்படுபவனைக்” கேட்டு வாங்கிப் படித்து மகிழ்ந்தனர்.
ஒரு சிறு குறிப்பு :
பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு அடிக்கடி என் வகுப்பறையில் நடைபெறுவதுண்டு. குழந்தைக் கவிஞர் மு.பாலசுப்ரமணியன், புதுச்சேரி மற்றும் குழந்தை இலக்கிய எழுத்தாளர் மு.முருகேஷ், சென்னை போன்ற சமகாலப் படைப்பாளர்களை என் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். அந்த வரிசையில், மூன்றாம் பருவத்தில், நான்காம் வகுப்பு மாணவர்களுக்குச் சமூகவியல் பாடத்திற்கு ஆயத்தப் படுத்துதலுக்காகத் “ திருவிழாக்களும் குழந்தைகளும்” என்ற கவிதையை வாசித்து விளக்கம் அளித்தேன். பிறகு ஓய்வு நேரத்தில் அவர்களாகவே “தேவதைகளால் தேடப்படுபவனைக்” கேட்டு வாங்கிப் படித்து மகிழ்ந்தனர்.







அருமையான விமர்சனம்
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅழகு..
ReplyDeleteநன்றி ஐயா
Delete