என்னைச் சந்திக்ககனவில் வராதே...
_ நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமாரின் கவிதை நூல் என்றதும் உடனே படிக்க வேண்டும் என்று ஆவல். தலைப்பைப் பார்த்ததும் இதழ்கள் தானாகவே "யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது? " வரிகளைப் பாடின.
முதல் பக்கத்தில் ,இந்தக் கவிதை நூலை 'அறிவுமதி அண்ணனுக்கும்,
73 , அபிபுல்லா சாலைக்கும் ' சமர்ப்பணம் செய்திருப்பது சிறப்பு.
ஜப்பான் தேசத்துக் கவிஞர்களின் காதல் கவிதைகளை நம் கவிஞர்,
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தளித்துள்ளார்.
படித்து ரசித்ததில் சில கவிதைகள்:
விழித்தெழுந்து
சுற்றுப்புறத்தைக்
கைகளால் தடவுகிறேன்.
என்னைச் சந்திக்கக்
கனவில் வராதே.
களையைப் போல்
பரவுகிறது வதந்தி
நானும் அவளும்
தோளோடு தோளாக
உறங்குகிறோம்.
பூனைகள் கோயிலில்
ஒன்று சேர்கின்றன
ஆனால் இவ்விடத்தில்
கணவனும் மனைவியும்
இணைவதை மட்டும்
மனிதர்கள்
குற்றஞ்சாட்டுகிறார்கள்.
உலகில் அப்புறம்
நான் நினைக்கப்படுவேனா?
இல்லை மறக்கப்படுவேனா?
நம் கடைசிச் சந்திப்பு
என்னவாகும்?
அவளைப் பார்த்ததற்கு
முந்தைய நாள்களை
நான்
நினைத்துப் பார்க்கிறேன்.
அப்போது நான்
பிரசினையின்றி இருந்தேன்.
"ஆனந்த யாழை மீட்டு கிறாய்" என்ற
வரிகளைப் பாடிக் கொண்டே, கவிஞரது சொந்தக் கவிதைகள்
அதாவது நேரடித் தமிழ்க் கவிதைகள் படிக்க விருப்பம் எனில் ,
இதே நூலின் இறுதிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்
அவரது படைப்புகளை வாங்கிப் படித்துக் களிக்கலாம்
என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன்.
இந்நூலில் இடம் பெற்றுள்ள ஜப்பானியக் கவிதைகளுக்கும்,
தமிழின் சங்க காலக் கவிதைகளுக்கும் இந்த அமரகவி ஆச்சரியப்பட்டது போல்,
ஒற்றுமைகள் சில இருந்தாலும் நமது தாய் மொழியின்
ஆழ்ந்த புலமையும், பொருள் செறிந்த சொற்களஞ்சியமும், பா வகைகளும்
ஒற்றுமை என்னும் வட்டத்திற்குள் அமைய இயலாது என்றே தோன்றுகிறது.
பக்கத்திற்கு இரண்டாக நூறு குறுங்கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
41 ஜப்பானியக் கவிஞர்களைப் பற்றி மிகச் சுருக்கமான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
21 பேர் பெண் கவிஞர்கள் என்பது வியப்பும் பெருமிதமும் தருகிறது.
நூலைப் படித்து முடித்ததும் அத்தனை காதலையும் வெள்ளி யருவியாய் அள்ளிக் கொட்டும் கவிஞர் தபூ சங்கரின் சில கவிதைகள் நம் நினைவடுக்குகளில் மெல்லவே மேகமாய் நகர்ந்து போவதைக் காண முடிகிறது.
இறவாத புகழுடைய பிற மொழிக் கவிதைகளைத்
தமிழில் பெயர்த்து அளித்திருப்பது சிறப்பு.
யாவரும் படித்து மகிழலாம்.
பட்டாம்பூச்சி பதிப்பகம்,
சென்னை
விலை ரூ.50
அலைபேசி : 98410 03366
நன்றி: தமிழ்வெளி வசந்தி

No comments:
Post a Comment