Tuesday, 6 December 2016

சூப்பர்நிலாவும்  செல்லாக்காசும்
#################################
பாட்டி  வடை  சுடுவதற்குப்
பாங்காய் இடமளித்த அதே நிலா.
படைப்பாளிகள் கனவிலும் எழுத்திலும் 
பாடுபொருளாய்  நிற்கின்ற  கவிநிலா.

அன்றில்புள் காதலர்கள்  ஊடலில்
அன்னப்பறவை  இந்த வட்டநிலா.
குழந்தைக்குக் கதைசொல்லிச்  சோறூட்டக்
குதூகலமாய்  முகம்காட்டும்  வான்நிலா.

வெள்ளிவானத்தை இன்று முழுதாய்க்
     கட்டியணைத்துக் கொண்டது  ஆசையாய்;
வெள்ளைப் புடவை ஒன்று கொண்டு
      பூமியைப் போர்த்தியது  நேசமாய்;

நீண்ட இரவுகள் கடந்து கண்டதோ
            தன் காதலனை
நீள்கதிரால் கண்டம்கடந்தும் பாய்ச்சுகிறதே
      பிரகாசவெள்ளத்தை!

அழகுநிலாவே, இன்னும்  எத்தனை காலம்
             இத்தனை மகிழ்ச்சி?
அனுதினமும் தேய்ந்து  தேய்ந்து
      ஒருநாள் நீயும் 

ஐநூறு ஆயிரம்  ரூபாய் எல்லாம்  வழக்கில் ஒழிந்து
      சென்றது போல
ஐயோ!நீயும் செல்லாக்காசாகி  மறையும் காலம்
      தொலைவில் இல்லை.

கறுப்புப் பணத்தின் வாழ்வைப் போல
மீண்டு வருவாய், மீண்டும் நீ.
கண்ணில் காணாது கரையும்
அமாவாசைகள் பல கழித்து.

மோடிஎன்ன? தாஸ்என்ன?, யார் வந்தாலும்
மாள்வதில்லை; அழிவேயில்லை;
மோடிமஸ்தான்வித்தையில் தேர்ந்தவர் நீயும்அவனும்.

மமதை கொள்ளாதே மட மதியே, கொஞ்சம்  பொறு
மனிதர்கள் அங்கும் வந்து கொண்டிருக்கிறார்கள்.
மாசுபடுத்துவதற்கு  இங்கே ஒன்றும் மிச்சம் இல்லை
முடிந்தால் காப்பாற்றிக் கொள்  உன்னை  நீயே.


(15.11.2016 அன்றிரவு பத்து மணிக்கு நானும் என் மகளும் மொட்டை மாடியில் ”சூப்பர் மூன்” கண்டு ரசித்தபோது தோன்றியது.)

No comments:

Post a Comment