Saturday, 31 December 2016

பள்ளிக்கூடப் பேரலைகள்...
பச்சைப் பாவாடை, வெள்ளைச் சட்டையும் தலை உச்சியில் ஒரு ஒற்றைக் குடுமியும் வெள்ளைக் காலுறையும் காலணியும் போட்டு, ஒரு ஆங்கில வழிப் பள்ளிக் குழந்தை போல், பள்ளிப் பேருந்தில் சிதம்பரம் செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் (CCGHSS, Kottaiyur) 6 முதல் 10 வகுப்புகள் வரை படித்த காலங்கள் என்றும் என் நெஞ்சில் நீங்கா நினைவலைகள்....

படித்தேனா என்று யோசித்தால், செய்த சேட்டைகள்தான் முதலில் நினைவுக் குளத்தினின்று எட்டிப் பார்க்கின்றன.
பயங்கர ஸ்டிரிக்டு என்பதை விட ாங்கள் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருப்போம் என்பதே உண்மை. அப்படியும் மாவடு, மாங்காய் அடித்ததும், மகிழம்பழம் பொறுக்கியதும், பனம்பழத்தைச் சுட்டுச் சாப்பிட்டதும் என்ன சொல்வது? அம்மா அப்பா வாங்கித்தரும் தின்பண்டங்கள் எல்லாம் இவற்றிற்கு ஈடாகவில்லை.

கிராஃப்ட் ஆசிரியர் கண்ணில் படாமல் ஜீனியாப் பூவைப் பறித்துப் புத்தகத்திற்குள் ஒளித்து வைத்ததும், பட்டாம்பூச்சி பிடித்ததும் அன்று தவறென்றோ பாவமென்றோ படவில்லை எனக்கு .

ஆனால்,ஒண்ணு மட்டும் இப்ப ஞாபகப்படுத்துறேன். அப்பல்லாம் நா ரொம்ப அமைதியான பொண்ணு, யார்கிட்டயும் ரொம்பப் பேசவே மாட்டேன்!!!!!
மனதிற்குப் பிடிக்காத அல்லது பாடம் புரியாத பாடவேளைகளில் comics, story books and Mills boon நாவல்களும், சாண்டில்யனும், அகிலனும், என் அம்மாவின் தமிழிலக்கிய நூல்களும் படிக்கத் தொடங்கிய காலம் அது. ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு காது திருகப்பட்ட பொழுதுகளும் உண்டு. கை நீட்டி அடி வாங்கி, என் அம்மாவிடம் வ்ந்து முறையிட்டதும் உண்டு.( என் அம்மா, ’சினேகிதியே’ திரைப்பட அம்மா மனோரமா மாதிரி: ஆசிரியர்கள் ஆர்வம் மற்றும் கவன ஈர்ப்புடன் பாடம் நடத்தினால், என் மகள் வகுப்பில் தூங்க மாட்டாள்; கதைப் புத்தகங்கள் படிக்க மாட்டாள் என்று சொல்லி விடுவார்கள்.)

வகுப்பிற்கு வெளியே போ என்று விரட்டப்பட்டதும் முதலில் அழுகை வரும். பிறகுநான் கலெக்டர் ஆனால்...” என்ற ரேஞ்சில் கற்பனைக் குதிரை ஓடும்.பாடவேளை முடிந்து மணியடித்ததும் குதிரை பாதியில் நின்று போனதே என்று மட்டும்தான் வருத்தமாக இருக்கும்.

ஓரளவுக்கு நன்றாகப் படிப்பேன், ரொம்பவும் துறுதுறுவென இருப்பேன்,வகுப்பைக் கவனிக்காவிட்டாலும் சரியாகப் பதில் சொல்லிடுவேன் ( வீட்டில் என் அம்மா சுவாரசியமாகப் பாடம் நடத்துவார்கள்). நிறைய ஆசிரியர்களுக்குச் செல்லப் பிள்ளை நான். ( பண்ணியதெல்லாம் ஊமைக் குசும்புகள், அதுவும் குழுவாக. அதனால் பெரும்பாலும் மாட்டிக்கொண்டதில்லை. அப்படியே மாட்டினாலும்,பெற்றோர் தயவில் தப்பித்துவிடுவேன்.)

பேருந்து இரண்டாவது டிரிப் எடுக்கும் வரை உள்ள நேரத்தில் ஓடியாடி ஆட்டம் போட்டுப் பெற்ற சிராய்ப்புகளும் சிந்திய ரத்தமும்- விளையாட்டு ஆசிரியரின் திட்டுகளும் இன்று வரை விழுப்புண்களே தவிர, கவலைப்பட்டதில்லை.
இவையெல்லாம் மனதில் என்றும் ஓடிக்கொண்டே இருக்கும் பாடங்கள் எனக்கு. என்னை நானே செதுக்கிக் கொள்ள உதவும் உளிகள் இவை. மாணவர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிய வைக்கும் கருவிகளாகத் தோன்றுகின்றன எனக்கு. எனவே, என்றும் மாணவர்களுக்குப் பிடித்த விதத்தில் கற்பித்தலை அமைத்துத் தரும் பயணம் மேற்கொண்டிருக்கிறேன்.
நிழற்படங்களில் என்னுடன் : Our school teachers: Mrs. Rama kiri, Mrs.Sarala, Mrs. Kothai, Mrs.Rukmani Prabha and Mrs Saratha.

அவர்கள் அன்றைக்குக் காட்டிய கண்டிப்பு என்னை மிடுக்கான ஆசிரியராக மாற்றியது : இன்று காட்டிய கனிவு என்னைக் குழந்தையாக நெகிழச் செய்தது.
என்னைக் கரையேற்றியஆசிரியர்கள் அனைவருக்கும் இந்நாளில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.


And Happy TEACHERS DAY wishes to all my friends-non teaching staff too. Because I learnt something from them too.

இந்தப் பதிவின் நோக்கமே, நான் மாணவியாக இருந்த பொழுது எனக்குக் கிடைத்தது, கிடைக்காதது ஆகிய அனைத்தும் நம் மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்காக ஆசிரியராகிய நாம், குழந்தைகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்; அவர்களின் சேட்டைகளைப் பெரிதுபடுத்தி, எக்காரணம் கொண்டும் அவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது. அவர்களின் நிலைக்கு இறங்கி நாம் கற்பித்தால், ஊக்குவித்தால், அவர்கள் நற்குடிமக்களாக உருவாக முடியும் என்பது திண்ணம். அதுவே என் எண்ணம். 

  
  
 

 

 






No comments:

Post a Comment