Tuesday, 6 December 2016

மௌன எரிமலைகளின் குமுறலாய்…
ஏளனமாகச் சிரிக்கின்றன _ இன்னும்
எழுதப்படாத என் குறிப்பேட்டின் பக்கங்கள்.
சொல்ல முடியாத வலிகளை _ வெளியில்
சொல்லாமலே இருப்பது கண்டு.

இன்றும்
அடுக்களைகளுக்குள் முடக்கப்பட்டும்
அலுவலகங்களுக்குள் ஒடுக்கப்பட்டும்
அழக்கூடத் தெம்பில்லாத பெண்கள்;

நாட்டுஓநாய்களும் நாகரிகவல்லூறுகளும்
நடைப்பிணங்களாக்கிப் போட்ட
நாக்கு வெளித்தள்ளப்படாத சவங்கள்.

அன்னை ஜெயலலிதாவே
நம்பிக்கை ஒளிவிளக்காய்
நடுநடுங்க வைக்கும் கர்ஜனையாய்;
நட்சத்திரங்களாய் மிளிர்ந்தோம்.

தானே முடிவெடுப்பாள்-எவர்
தலையீடும் களையெடுப்பாள்.
எங்களால் முடியாததைஎல்லாம்
என்றென்றும் சாதித்த தங்கமகள் .

மிடுக்கும் அதிகார ஆணைகளும்
மின்னலெனத் தெறிக்கும் பேச்சும்
பேரியக்கத்தில் தன்னை நிலைநிறுத்திப்
பேரரசியாய் முடிசூடிக்கொண்ட சுயம்புஅவள்.

பார்த்துப் பார்த்து ரசித்திருந்தோம்;
பார்க்கவில்லை கட்சியை நாங்கள்.
பெண்ணினத்தின் பிரதிநிதியாய்ப்
பெருமிதங்கொண்டு களித்திருந்தோம்.

ஆனால் இன்று,
எழுதி முடிக்கப்பட்டது ஒரு வெற்றிச் சரித்திரம்
எனில் முற்றிலுமாக என்பதே துக்கம்.
அடுத்தடுத்த அத்தியாயங்கள் கிடையாது;
அடுத்தவர் எவரும் உன்போல் முடியாது. 

செல்லும் வயதில்லை உனக்கு _ நீ
சென்றதால்வேறு வழியில்லை எமக்கு.
செங்குருதி சிந்துமெம் கண்கள் _ என்றாலும்
செல்லாக்காசாக மாட்டோம் நாங்கள்.

முன்மாதிரியாய் நின்று வியக்கவைத்தாய் என்றும்;
முன்னோர்களைத் தேடிச் சென்றுவிட்டாய் இன்று.
புதைந்துவிட்டாய் மண்ணிற்குள் விதையாய்; _ நீயே
புத்துணர்வு தருவாய் மகளிருக்கு உரமாய்.



4 comments: