உடல் இயக்கத்தோடு கற்றல் உத்திகள்
கை கால்களை அசைத்து ஏதாவது ஒரு குறிப்புடன் கற்றுக்கொடுத்தால், அவர்கள் எளிதில் கற்கிறார்கள்: எளிதில் மறப்பதில்லை என்று நான் அனுபவத்தால் தெரிந்துகொண்டேன். நடைமுறைப்படுத்த விழைந்தேன். உதாரணமாக, தமிழ் நாட்டின் இயற்கையமைப்புகளை அதன் உயரத்தைக் குறிப்பாகக் கொண்டு கற்பித்தேன்.
1. மண்ணிற்கு மேலே மிக உயரத்தில் காணப்படுபவை மலைகள்; அவற்றைவிடச் சற்று உயரம் குறைந்தவை பீடபூமிகள்; மிகத் தாழ்வாகக் காணப்படுபவை சமவெளிகள் என்று கரும்பலகையில் வண்ணச் சாக்கட்டிகளால் படம் வரைந்து விளக்கினேன்.
2. பிறகு மூன்று குழுக்களாக மாணவர்களை அழைத்தேன். முதல் குழு மாணவர்களைத் தரையில் படுக்கச் சொன்னேன். அவர்கள் தரையோடு தரையாகக் கிடப்பதால், அவர்களைச் ’சமவெளி’ என்று கொண்டோம். அடுத்த குழு மாணவர்களைப் பச்சைக்குதிரை தாண்டக் குனிவது போல் குனியச் சொன்னேன். இவர்கள் ’பீடபூமி’யானார்கள். மூன்றாம் குழு மாணவர்கள் கைகளை உயர்த்தி,அடுத்தடுத்த மாணவர்கள் கையைப் பிடித்து நின்றதுமே , மற்ற மாணவர்கள் “மலைகள்’ என்று கூச்சலிட்டனர்.
3. இப்பொழுது, ஒவ்வொரு மாணவனுக்கும் புரிந்துள்ளதா? என்று சோதிக்க வேண்டுமே. தனிப் பயிற்சி ஒன்றும் கொடுத்தேன். மாணவன் தன் தலைக்கு மேலே, காதுகளை ஒட்டிக் கைகளை மேலே உயர்த்தி, கை குவித்து “மலைகள்” என்று சொல்ல வேண்டும். பின், தன் நெஞ்சுக்கு நேரே கை குவித்து “பீடபூமிகள்” என்று காட்ட வேண்டும். பிறகு, தரையை நோக்கிக் கைகளை விரித்துச் “சமவெளிகள்” என்பதைக் காட்ட வேண்டும்.
No comments:
Post a Comment