2017 ஜனவரி முதல்,
“நீசமாக எண்ணாதே நீச்சல் அடிக்கக் கற்றுக் கொடு” என்னும் தலைப்பில்,
பதினைந்திற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தமிழர்களால் வாசிக்கப்படும்,
திருச்சியிலிருந்து வெளிவரும் "இனிய நந்தவனம்" என்ற மாத இதழில்
தொடர் கட்டுரை எழுதி வருகிறேன்.
நவம்பர் 2017 இதழில் என் கட்டுரை.
நன்றி ஆசிரியர் திரு. நந்தவனம் சந்திரசேகரன்.
“நீசமாக எண்ணாதே நீச்சல் அடிக்கக் கற்றுக் கொடு” என்னும் தலைப்பில்,
பதினைந்திற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தமிழர்களால் வாசிக்கப்படும்,
திருச்சியிலிருந்து வெளிவரும் "இனிய நந்தவனம்" என்ற மாத இதழில்
தொடர் கட்டுரை எழுதி வருகிறேன்.
நவம்பர் 2017 இதழில் என் கட்டுரை.
நன்றி ஆசிரியர் திரு. நந்தவனம் சந்திரசேகரன்.
My article published in a popular Tamil magazine "Iniya Nandavanam" Oct. 2017.
I pay my gratitude to the editor Mr. Chandrasekaran, Trichy.
I pay my gratitude to the editor Mr. Chandrasekaran, Trichy.
நீசமாக எண்ணாதே நீச்சலடிக்கக் கற்றுக்கொடு
– 11
என்ன நண்பர்களே, தீபாவளிக் கொண்டாட்டம் எல்லாம்
முடிந்துவிட்டனவா? எத்தனை ஆடைகள் வைத்திருந்தாலும் அந்தத் தீபாவளியன்று போட்டுக் கொள்ளும்
புதுச் சட்டை தரும் ஆனந்தம் இருக்கிறதே, அப்பப்பா! வார்த்தையில் வடிக்க இயலாது. அடுத்ததாகப்
பலகாரங்கள் பலவகை. எந்த வயதினரும் அளவு மறந்து சாப்பிட்டு மகிழும் தருணங்கள். பிறகு
அப்படியே பட்டாசு வைக்கப் புறப்பட்டுவிடுவோம். தலைக்கு எண்ணெய் வைப்பதில் தொடங்கி,
புதிய ஆடை அணிந்து கோவிலுக்குச் சென்று வருவது வரை காலங்காலமாக நடக்கும் மகிழ்ச்சி
மத்தாப்புகள்.
இப்படியாகத் தான் வகுப்பறையிலும் தீபாவளியைப் பற்றி
குதூகலத்தோடு பேசிக் கொண்டிருந்தோம். என்னென்ன பலகாரங்கள் செய்தீர்கள்? யாரெல்லாம்
பண்டிகையைக் கொண்டாடத் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றீர்கள்? என்னென்ன வெடி வெடித்தீர்கள்?
என்று வினாக்களும் அவற்றிற்குரிய விடைகளுமாகக் காலம் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது
ஜெயனி எழுந்து, “எங்க வீட்ல குலோப் ஜாமூன், மாவுருண்டை, முறுக்கு, பஜ்ஜி, வடை என்று
அடுக்கிக்கொண்டே போனாள். நான் கேட்டேன்’ ”இவ்வளவும் யார் செய்தது?”. ஜெயனி, “எங்கம்மா
காலையில மூணு மணிக்கே எழுந்து செய்தார்கள்”. ”நீ ஏதேனும் உதவி செய்தாயா? அப்பா, அண்ணா
அல்லது வேற யாராவது கூட சேர்ந்து வேல செஞ்சாங்களா?” என்றேன். அவள் இல்லை என்கிற மாதிரித்
தலையை ஆட்டினாள். எனக்கு ஏனோ “சேவலும் கோதுமை ரொட்டியும்” கதை ஞாபகத்திற்கு வந்தது.
கொஞ்சம் விதை நெல் கிடைக்கப்பெற்ற
சேவல் அதை விதைப்பதற்காகத் தன் நண்பர்களான ஆடு, மாடு, குதிரை, கோழி, நாய் அனைவரையும்
அழைத்தது. ஒவ்வொருவரும் வேறு வேறு வேலைகள் இருப்பதாகக் கூறிச் சென்றுவிட, தானே நிலத்தை
உழுது, விளைவித்தது. சில நாள்களுக்குப் பிறகு சேவல் நாற்று நடுவதற்காக அழைத்தது. அப்பொழுதும்
எவரும் செல்லவில்லை. சேவல் மட்டுமே வயலில் இறங்கி நாற்றுகளை நட்டது. இப்படியே களை பறிக்க,
தண்ணீர் பாய்ச்ச, இரண்டாம் களை எடுக்க எனச் சேவல் அழைத்தபோதெல்லாம் அதன் நண்பர்கள்
வரவேயில்லை. பயிர் செழித்து வளர்ந்தது. உரிய பருவத்தில் சேவல் மட்டுமே நின்று அறுவடை
செய்தது. இயந்திரத்தில் கோதுமையை அரைத்து மாவாக்கியது. சூடான சுவையான ரொட்டி தயார்
செய்தது. ஒவ்வொரு முறையும் சேவல் நண்பர்களை உதவிக்கு அழைக்கத் தவறவில்லை. அவர்களும்
உதவத் தயாராக இல்லை. ரொட்டியின் மணம் வீடு முழுக்கப் பரவியது. சேவல் இப்பொழுது “ரொட்டியைச்
சாப்பிட யார் வருவது?” என்று கேட்டதும்தான் தாமதம். பசு, குதிரை, ஆடு, நாய், கோழி அத்தனையும்
நான் வரேன் என்று குரல் கொடுத்தன.
ஒளிபடக் கருவியை அப்படியே நம் வீடுகளை நோக்கித் திருப்பினால், இதே காட்சிதான்
அங்கும் அரங்கேற்றம். பண்டிகைகள் என்றாலே, பாட்டியும் அம்மாவும் அடுப்படியில் நாள்
முழுக்க வேலை செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். தாங்கள் செய்கின்ற விதம்விதமான பலகாரங்களைக்
கணவனும் குழந்தைகளும் ஆசையாய்த் தின்பதைப் பார்த்தே ஆனந்தம் அடைகின்றனர். இதுதான் நமது
மரபு, பாரம்பரியம், கலாசாரம் என்று காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. காந்தியடிகள்
கூறுவார் : “பாரம்பரியத்தின் நதியில் நாம் நீந்தலாம். ஆனால் அதில் மூழ்குவது என்பது
தற்கொலைக்கு ஈடானது” என்று. இங்கு புதைந்து போவது புத்தக வாசிப்பு, செய்தி கேட்டல்,
தன்னை மேம்படுத்திக்கொள்ளல், தன் விருப்பப்படி பொழுது போக்கும் ஒரு சில மணித்துளிகள்
போன்றவை அனைத்தும்.
பெண்கள் விரும்பித்தான் செய்கின்றோம்; பாதகமில்லை. ஆனால் அந்தச் சேவலின் நிலைதானே
இங்கும். கூடமாட வேலை செய்து, அவர்களின் வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ளக் கூடாதா நண்பர்களே?
அஞ்சலகம் செல்லுதல், வங்கிப் பணிகள், ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் பணம் கட்டுதல், மின்
கட்டணம் செலுத்துதல் போன்ற பொறுப்பான பணிகளை எல்லாம் இன்று தெருவில் இறங்கிப் பெண்களும்
செய்கின்றனர். ஆனால், அரிகரண்டி பிடிக்கும் கைகளுக்கு ஆதரவு தர மட்டும் ஆண்கள் முன்வருவதில்லை.
மனைவி எவ்வளவு
நேரம் எத்தனை வகையான உணவு வகைகளைச் சமைத்துக் கொண்டிருந்தாலும், வரவேற்பறையில் அமர்ந்து
தொலைக்காட்சி பார்க்கும் கணவனைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். விழாக்காலப் பட்டிமன்றத்தைக்
கூட முழுமையாகப் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்று ஏங்கும் பெண்கள் பலருண்டு. பக்கத்து
வீட்டுச் சித்ரா அக்காவைப் போல், “நான் கை வேலையாய் இருக்கும் போது அவர் அடுப்படி மேடையில
உட்கார்ந்து ரெண்டு வார்த்தை பேசிக்கிட்டு இருக்கக் கூடாதா?” என்று ஏங்கும் பெண்களும்
உண்டு.
இப்படி ஆசைப்படுவதில் கூட ஒரு கவனம்
தேவைப்படுகிறது. ஏனெனில் பல வீடுகளில் கணவன் மனைவி இருவரும் பேசத் தொடங்கும் போது காலக்கடிகாரத்தின்
முட்கள் சந்தோசமாகவே நகர்கின்றன. அந்த மயக்கத்தில் கூட நான்கு வார்த்தை பேசிவிட்டால்
அது எதையெதையோ தொட்டு எங்கெங்கோ சென்று வாக்குவாதமாக மாறிக் கடைசியில் சண்டையில் அல்லவா
முடிகிறது? கேட்டால், இந்த பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. அப்பப்பா! அது பெரிய
கஷ்டம் என்று கூறுகிறார்கள்.
சமீபத்தில் வசந்தபாலன் ஒரு கட்டுரையில்,
“கடலினைப் புரிந்துகொள்ள மீனாக வேண்டும்; மழையை அறிந்துக் கொள்ளத் தவளையாக மாற வேண்டும்;
பெண்ணைப் புரிந்துகொள்ளப் பெண்ணாகத் தான் மாற வேண்டும்” என்று எழுதியிருக்கிறார். மீனாக,
தவளையாக மாறிக் கடலினையும், மழையினையும் புரிந்துகொள்ள முயற்சித்தால் அது பற்றிக் கவலையில்லை.
ஆனால் பெண்ணாக மாறித் தான் பெண்ணைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லையே.
ஒருதிரைப்படத்தில் விவேக், பெண்களைப் புரிந்து கொள்வதற்காகப் பெண் வேடமிடுவதும், பெண்ணாக
மாறியது போல் படமாக்கப்பட்டிருப்பதும் நகைச்சுவைக்காக என்றாலும், சமூகத்தின் உச்சக்கட்ட
அபத்தங்கள் அவை.
பெண்களைப் புரிந்துகொள்ள டாக்டர்
சாமுவேல் ஜான்சன் போல் நீங்களும் டிக்ஷனரி எதுவும் தயாரிக்க வேண்டாம். அவர்களின் கண்ணசைவுகளை,
உடல் மொழியினை, சொற்சித்திரங்களைப் புரிந்து கொண்டால் போதுமே. வல்லவனுக்கு வல்லவன்
என்னும் திரைப்படத்திற்காகக் கவியரசு கண்ணதாசன் எழுதி, டி.எம்.சௌந்தரராஜன் காந்தக்
குரலால் பாடிய
“ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நானறிவேன்”
என்ற பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்கள்
நண்பர்களே. இது பெண்களின் ஏக்கத்திற்கான குரல் என்பது புரியும்.
எங்க வீட்டுக்காரருக்கு இனிப்புப் பிடிக்காது.
அதனால் நான் விசேஷ நாள்களிலும் பாயாசம் செய்வதில்லை
என்று கூறும் கலாவைப் போன்ற பெண்கள் இன்றும் உண்டு. இதையே பெண்கள் எதிர்பார்த்தால்
குடும்பப் பாங்கான பெண்களா இவர்கள்? என்று ஏசிக் கடித்துக் குதறித் துப்புகிறது இந்த
சமூகம். “புகைபிடிப்பது என் மனைவிக்குப் பிடிக்காது. அதனால் நான் புகைப்பதை விட்டு
விட்டேன்” என்றாவது எவரும் கூறக் கேட்டிருக்கிறீர்களா? “என் மனைவிக்கு நீல நிறம் மிகவும்
பிடிக்கும். அந்தக் கண்காட்சியில் பார்த்ததும் இந்த ஓவியத்தை வாங்கி வந்தேன்” என்று
புடவை, நகைநட்டுகளைத் தாண்டி மனைவிக்கு இப்படி ஏதேனும் பரிசளித்ததுண்டா? அல்லது அலுவலகம்
விட்டு இருவரும் வீட்டுக்கு வந்ததும், “நீ வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறாய்.
நம் செல்லக்குட்டிக்கு நான் வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்” என்று ஒரு நாளாவது
உட்கார்ந்ததுண்டா? ரிமோட்டைக் கையால் சொடுக்கி, பட்பட்டென்று சானல்களை மாற்றி நகைச்சுவைத்
துணுக்குகளும் செய்திகளும் பார்ப்பதில் தான் ஆண்களின் ரம்மியமான மாலைப்பொழுதுகள் கரைந்து
போகின்றன.
பிறகு எப்படி
மனைவியைப் புரிந்து கொள்வதாம்? அவள் எதற்காக, என்ன சொல்ல வருகிறாள் என்பதைக் கேட்கக்
கூடிய பொறுமை எத்தனை கணவன்மார்களுக்கு உண்டு? வீட்டுக்குள் மட்டுமல்ல, ஆணாதிக்க சமூகத்திலும்
இது தொடர்கிறது. எங்களின் குரல்களை எத்தனை செவிகள் மதித்து உள்வாங்குகின்றன? அலுவலகங்கள்,
வங்கிகள், பள்ளிகள், கடைகள் போன்ற இடங்களில் தன் கல்வி மற்றும் ஆளுமைத் தகுதியால் உயர்
பதவி வகிக்கும் பெண்களின் சொற்கள் மட்டுமே கவனம் பெறுகின்றன. அதுவும் பல வேளைகளில்
பல வேலைகளுக்காக மட்டுமே. மற்ற பேண்கள் நல்ல கருத்துகளை, ஏற்ற உத்திகளைக் கூறினாலும்
செவிமடுப்பதும் இல்லை; ஏற்றுக்கொள்வதும் இல்லை.
ஒருமுறை, இலக்கிய ஆர்வலர்கள் சிலருடனான கலந்துரையாடலில்,
அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் பற்றிய பேச்சு எழுந்தது. நண்பர் ஒருவர் அந்தச் சூழல் பற்றித் தன் கருத்தை முன் வைத்தார்.
நாங்கள் அனைவரும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருந்தோம். அதில் எனக்குத் தோன்றிய முரண்பாட்டைக்
கூற விழைந்தபோது, வாய்ப்பே தரப்படவில்லை. மேலும், நேரமாகிவிட்டது என்று கூறிக் கூட்டத்தையும்
முடித்துக் கொண்டார்., இது எந்த விதத்தில்
நியாயம்? நீங்களே சொல்லுங்கள். இப்படிப் பல சூழல்களில், கருத்துச் சுதந்திரப் பெருமை
கொண்ட நம் நாட்டில் பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? பெண்ணாகப் பிறந்தவள்
எந்நிலையிலும் , பேச்சுவார்த்தை அளவில்கூட ஆணை மீறக்கூடாது; அவனைவிட உயர்ந்துவிடக்
கூடாது. ஆணுக்குத் துணையாக, அடிமையாக வாய் பொத்திக் கிடப்பது மட்டுமே பெண்டிர்க்கு
அழகு; அவர்கள் ஆற்றப்பட வேண்டிய கடமை அது என்றெல்லாம் மனுதர்மம் தொடங்கி இன்றைய சம்பிரதாயச்
சடங்குகள் வரை சொல்லப்பட்டு வருகின்ற, எழுதப்படாத அடிமை சாசனம் அது.
ஆனாலும் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்கிறேன்.
சாதாரணமாகத் தன் உறவினர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதுகூட, ‘நீ பேசாதே’ என்று
ஒற்றை விரல் நீட்டி அதிகாரம் செய்து அமராவதிப் பாட்டியைப் பார்த்துக் கர்ஜித்த குருகுலத்
தாத்தாவின் தலைமுறை மரித்துப் போய் விட்டது.
ஜப்பானிய நாடாளுமன்றம் இப்பொழுதுதான் “அரச வம்சத்தைச் சார்ந்த பெண்களும் அதிபராகலாம்”
என்ற சிறப்புச் சட்டத்தை இயற்றி இருக்கிறது. அரசகுலத் தோன்றல்களுக்கே அங்கு அந்த நிலைமை.
ஆனால், நம் நாட்டில் மகளிருக்கு இடஒதுக்கீடு, முன்னுரிமை, சொத்தில் பங்கு என்பவை முழுமையாக,
நேர்மையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவோ இல்லையோ பல ஆண்டுகளுக்கு முன்பே சட்டமாக இயற்றப்பட்டுள்ளதை
நினைத்து மகிழ்ச்சி கொள்ளலாம். சென்ற மாதம் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரான, அவர்களின்
இல்லற வாழ்விற்கு அநீதி இழைத்த “முத்தலாக்” சட்டப்படித் தடை செய்யப்பட்டிருப்பது நம்
நாட்டில்தான் என்று நினைக்கும் பொழுது உவகையுடன் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு பெண்,
“பாவிகள் ஆட்சி செய்யும் நாட்டில் காவிகள் ஆட்சி செய்யக்கூடாதா?” எனத் துணிந்து வினா
எழுப்பும் அளவிற்கு சுதந்திரமும் உரிமையும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஆண் பெண்
சமத்துவம் என்பது இன்னும் எட்டாக் கனிதான். “கல்வி, சமத்துவம் என்று வெளி உலகை எட்டிப்
பார்த்தாலும் பண்பாடு, கலாசாரம், சமய மரபுகள் என்றெல்லாம் இனம் புரியாத, தெளிவில்லாத இவளுக்கு உரித்தாக்கிய பாசிக்குட்டையின் நிழலில்
பணிந்து நிற்பதே மோட்ச சாம்ராஜ்ஜியம் என்று அவளுக்கு நாள்தோறும் பல்வேறு சாதனங்கள்
உள்ளுணர்வில் போதனை ஏற்றிக்கொண்டிருக்கின்றன” என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கூறுவது
நடந்து கொண்டிருக்கும் காலம் இது.
இந்த இழிநிலை மெல்லமெல்லப் படிப்படியாக
மாறுவதற்கான சூழல்கள் லேசாக எட்டிப் பார்க்கின்றன. மத்தியப் பிரதேச மாநில மகளிர் மற்றும்
குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ், ”மாநிலத்தில் நகரமயமாதல் வேகமாக அதிகரித்து
வருகிறது. எனவே பெண்களும் ஆண்களுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும்“
என்று கூறுகிறார். இதைச் செயல்படுத்தப் பெண்கள் அதிக அளவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதை
ஊக்குவிக்கும் வகையில் இலவச ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக
அறிவித்திருக்கிறார். இது போன்ற செயல் திட்டங்கள் சமூக ரீதியில் பெண்கள் முன்னேறுவதற்கும்
சமத்துவம் பெறுவதற்கும் திறக்கப்படும் வாயிலாக இருக்கலாம்.
இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்தமான் நிகோபார் தீவுகளில்
முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடி இருக்கிறார்.
இதைப் பார்க்கும் பொழுது, அப்பாடா! முறுக்கு சுட்டார், அதிரசம் தட்டினார் என்றில்லாமல்,
எண்ணெய்ச் சட்டியை விடுத்து ஒரு பெண், வெளிச்சமூகத்தில் தீபாவளியைக் கொண்டாடி இருக்கிறார்
என்பது ஆறுதலான விஷயம். இது அவரின் மனத்தளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றமாகும்.
அடுக்களைக்குள் மனைவியைத் தள்ளித் திண்டுக்கல்
பூட்டுப் போட்டுப் பூட்டிவைத்துவிட்டுத் தான் மட்டும் சவுகரியமாக வாழும் வாழ்க்கை வேண்டாமே.
பாரதியார் காலத்திலேயே அவரது கும்மிப் பாட்டில், இத்தகு விந்தை மனிதர்கள் தலை கவிழ்ந்தும்
மாய்ந்தும் போய்விட்டார்களே. சமூக எழுச்சிக்கும் இளைய சமுதாயத்தின் அறிவாற்றலுக்குமான
திறவுகோல்கள் பெண்கள். இதை உணர்ந்ததால் கூறுகின்றேன். ”எங்களைத் துணையாக மதித்திடுங்கள்;
தூணாகத் தாங்கிடுவோம். இணையாகப் போற்றிடுங்கள்; இமையாகக் காத்திடுவோம்”.





No comments:
Post a Comment